Friday 29 April 2011



புரட்சி கவிஞர் பாரதிதாசன்
( 29 . 04 . 1891 -- 21 . 04 . 1964 )
புரட்சிக்கவிஞரின் பாடல்களை படிக்கும்போது அவை நம்முடைய இரத்தத்தில் இரத்தமாகக் கலக்கின்றன. உணர்ச்சி நரம்புகளிலேயே ஊற்றெடுக்கின்றது. படிக்கின்றோம் , பாரதிதாசனாகின்றோம். காலத்தை உருவாக்கிய கவிஞர் மட்டுமல்ல ; காலத்தையே மாற்றியமைப்பவர் ; புதுமையும் புரட்சி மனப்பான்மையும் மிக்க பாடல்களைத் தரும் நம்கவிஞர் உயர்கவி , உண்மைக்கவி - புதுக்கவிதை பாடிய புதுமைக்கவி , எளிய மக்களின் தசையையும் பிய்க்கும்படியான புரட்சிக்கவிஞரின் புதுக்கவிதைகளைப் படிக்க வேண்டும் , பாட வேண்டும் , பயன் பெற வேண்டும் ; புதுக் கவிதைகளைப் புரட்சிக்கவி போல் பாடிட முன் வரவேண்டும் .
                                                         ---  பேரறிஞர் அண்ணா 1945
இடுகை 0051

Wednesday 27 April 2011

சத்யசாயி பாபா



பாண்டியன்ஜி

பகவான் என்று கணிசமான மேல்தட்டு மக்களிடையேயும் நடுத்தர வர்கத்தினரிடையேயும் பெரிதும் நம்பப்பட்ட சத்யசாயி பாபா இயற்கை எய்திவிட்டார்.
60 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த ஆன்மீகப் பயணம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
2011 ஏப்ரல் மாதம் 24 ஆம் நாள் 03 - 30 மணியளவில் அவர் உயிர் பிரிந்த செய்தி தொலைக்காட்சி மற்றும் இணயம் வழியாக தெரித்து உலகெங்கும் சிதறியது.
ஏறத்தாழ 180 தேசங்களுக்கு மேலாக பரவிக்கிடக்கிற அவருடை சீடர்கள் பெரிதும் நிலை குலைந்து போக நேரிட்டிருக்கிறது.அவர் தோன்றிய ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டம் புட்டப்பர்த்தி இன்று கண்ணீர்கடலில் குளிக்க நேரிட்டிருக்கிறது.
1926 நவம்பர் மாதம் 23 ஆம் நாள்ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த புட்டப்பர்த்தி என்ற குக்கிராமத்தில் ஈசுவரம்மா பெத்த வெங்கம்ம ராசு தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர்தான் சத்யநாராயண ராசு என்ற சத்ய சாயிபாபா.தனது எட்டாவது வயதிலேயே சிறுவன் சத்ய நாராயணா தான் பயணிக்கப்போகிற திசையை உணர்ந்து கொண்டானாம்.அவன் பிறந்த அந்த குக்கிராமம் அவனுடைய ஆன்மீகப்பயணத்தில் பின்நாளில் சகலவசதிகளும் பெற்று இந்த உலகே திரும்பிப் பார்க்க நேரிடும் என்ற தகவல் அன்று எவரும் அறிந்திருக்க வாய்ப்பிலை.
மராட்டிய மாநிலத்தில் பிறந்து புகழுடம்பு பெற்ற ஆன்மீக முனி சீரடி சாய் பாபாவின் வழித்தோன்றல் என்றும் சிவன் சக்தி ஆகியோரின் அவதாரமே தான்தான் என்றும் பறைசாற்றிக்கொண்ட பாபா தன் ஆன்மீக பயணத்தில் சந்திக்க நேர்ந்த சறுக்கல்கள் ஏராளம். மக்களிடையே மாயவித்தைகளை நிகழ்த்தி மக்களை ஈர்க்க நேர்ந்தபோது தமிழகம் கேரளம்சார்ந்த பகுத்தறிவு இயக்கங்களின் பலமான எதிர்ப்பை சந்திக்க நேரிட்டிருக்கிறது.
1933 ல் அவரது ஆசிரமத்திலேயே அவருக்கெதிரான ஒரு கொலை முயற்சியையும் அவர் முறியடிக்க வேண்டியிருந்தது. இத்தனையும் தாண்டி இன்று கணிசமான மக்கள் மனதில் இடம் பிடித்த பாபாவின் வளர்ச்சி மறுக்கமுடியாத உண்மை. 
பாபாவின் ஆன்மீகம் முன்னமே அறியப்பட்டிருந்தாலும் சென்ற வருடம் சென்னை திருவான்மியூரில் ஒரு மாலைப்பொழுதில் நிகழ்ந்த ஆன்மீக வேள்வியில் பாபாவைக் காணுகின்ற வாய்ப்பு பெற்றேன்.கணிசமான மேல் தட்டு வர்கம் தரையிலே கால்பதித்திருந்ததை காண முடிந்தது.இடைப்பட்ட நடுத்தர வர்கமோ அந்தவேள்வியில் பங்கெடுப்பதை கவுரவமாக எண்ணியதை புரிந்து கொள்ள முடிந்தது.அன்னிய தேசங்களில் செல்வச்செழிப்பில் அலுத்துப்போன ஒரு கூட்டமும் ஆங்காங்கே காணப்பட்டது.அத்தனைபேரையும் பின்னுக்கு இழுத்த பாபாவை பார்க்கிறேன்.
வாட்டசாட்டமான அய்ந்தடி உயரம்.பழுத்துகுலுங்கும் உயர்ரக மாம்பழத்தின் மஞ்சள் நிறம் இத்தனை வயதிலும் தலைக்கு கவசமாக அமைந்த அந்தபரட்டை முடி நிமிர்ந்த நேரான பார்வை உயர்ரக வழவழ துணியில் நீலவண்ண நீண்ட முழு அங்கி அதேவண்ணத்தில் வடிவமைக்கப்பெற்ற நீல வண்ண படகு கார் 
பாபா ஒரு கவர்ச்சிமிக்க மனிதர் என்பதில் எந்த அய்யமும் இல்லை.
அத்தனை பெரிய ஆன்மீக திறளில் சென்னையின் சாமான்ய குடிமகன் எவரையும் நான் காணவில்லை.செல்வச்செழிப்பில் வெட்கி விலகியிருக்கக்கூடும் என்றே எண்ணினேன்.
பல நேரங்களில் நடுத்தரவர்க நண்பர்களை காணுகின்றபோது ஒவ்வொருவரும் பாபாவின் பரம பக்தர் என்று பொருமையாக சொல்லிக்கொள்வதை கேட்டிருக்கிறேன்.வீடுகளில் பாபாவின் தோற்றத்தையும் ஆங்காங்கே பாபாவின் அடையாளங்களையும் ஒட்டி பூரிப்பு பெற்றதை உணர்ந்திருக்கிறேன்.அதைத்தாண்டி பாபாவின் உபதேசங்கள் எதனையும் அவர்கள் அறிந்ததாக நினைவில்லை. அந்த கவர்ச்சிமிக்க மனிதரின் அடையாளங்களை ஏற்படுத்திக்கொண்டு அவர் பின்னால் அணிவகுப்பதையே மகிழ்வாக கொண்டிருந்ததை உணர முடிந்தது.
ஏறத்தாழ 50 களில் தமிழ் மண்ணில் நிரம்ப பேசப்பட்டவர் இந்த புட்டப்பர்த்தி சத்ய சாயி பாபா.அதே காலங்களில் இந்த மண்ணில் எழுச்சி பெற்ற பகுத்தறிவு இயக்கங்கள் பாபாவின் கூற்றுகளை தொடர்ந்துவிமர்சித்து வந்ததையும் அறிந்திருக்கிறேன்.
அப்போதே என் சிந்தனைகளில் பகுத்தறிவு விதைகள் கலந்துவிட்டதாலோ என்னவோ பாபா நிகழ்த்திய பல்வேறு மாயாஜால வித்தைகள் எதனையும் என்னால் ரசிக்க இயலாமல் போயிற்று.அவரைபற்றிய எதிரான விமர்சனங்களில் உண்மையிருக்கக்கூடும் என்று நம்பியவன் நம்புகிறவன் நான். இருந்தபோதிலும் பாபாவின் அடுத்த பக்கம் மட்டுமே என் கண்களுக்கு தெளிவாக புலப்படுகிறது.அவரது ஆன்மீகப்பயணத்தில் அவர் சேர்த்துக் குவித்த செல்வங்களும் அவரைதொடரும் அணிவகுப்பும்.... என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
பாபாவின் சொல்வங்கள் அனைத்தும் இந்த மண்ணின் சாமான்ய மக்களிடமிருந்து பெருமளவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறப்பட்டது என்று நான் கருதவில்லை.
அவர்பால் அன்பு செலுத்தும் பணம்மிகுந்த வர்கத்திடனிருந்தும் அன்னியமண்ணில் அலுப்புற்ற செல்வர்களிடமிருந்தும் மட்டுமே பெற்றிருக்கக்கூடும் என்றே கருதுகிறேன்.1954 லேயே புட்டபர்த்தியில் முதல் ஏழை எளியவர்களுக்கான பொது மருத்துவமனையை ஏற்படுத்தி இந்த மண் பயனுற பல்வேறு திட்டங்களை பாபா துவக்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.இன்று அவர் நினைவு கூரும் பல்வேறு நலத்திட்ங்கள் நாடெங்கும் இறைந்து கிடக்கின்றன.ஒரு மக்கள் அரசுஆற்றத் திணருகிற எத்தனை பணிகளை எத்தனை எளிதாக முடித்திருக்கிறார் பாபா.தனது 84 வது வயதில் இயற்கை எய்திய பாபா வாரிசு என்று எவரையும் விட்டுச் செல்ல வில்லை.மாறாக மாண்டியா மாவட்டத்தில் மறுபடியும் பிறப்பேன் என்று அறிவித்துவிட்டு சென்றிருக்கிறார்.
உலகெங்கும் போற்றப்படுகிற அந்த அவதாரத்தை தரிசிக்க இன்று இந்த நாடே காத்துக்கொண்டிருக்கிறது.அந்த தலைவனுக்கு அஞ்சலி செலுத்த கட்சி பேதமின்றி வரிசை வரிசையாய் கண்ணீருடன் காத்திருப்பதை பார்க்கிறேன்.
அந்த மாமனிதருக்கு தீராத குறையொன்று இருந்திருக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த பாபா தன் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறான நாத்தீகவாதியான தமிழக முதல்வர் கலைஞரை அவரது இல்லத்திலேயே சந்திக்கிறார்.அடுத்து --
நொடுங்காலமாக தொய்வுற்றிருக்கும் ஆந்திரா தமிழ்நாடு கிருஷ்ணா கால்வாய் திட்டத்தை ஏறத்தாழ 200 கோடிக்கு மேலாக செலவிட்டு சென்னை மக்களின் நீர்பசிக்கு நிறைவு கண்டதன் மூலம் தமிழகமண்ணிலும் பாபா வேர் பரப்ப வழி செய்திருக்கிறார்.
மனிதனுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் மகத்தான சேவை.   மக்கள் நலப்பணிகளில் ஆன்மீகவாதிகளும் அரசியல் வாதிகளும் இணைவதில் தவறேதும் இல்லை.--
 என்ற முதல்வரின் கண்கள் கலங்குகிறது.
பகுத்தறிவாளர் நெஞ்சங்களிலும் பாபா எத்தனை லாவகமாக நுழைந்து விட்டார்.
பாபாவின் மக்கள் சேவையே நாளை பாபாவை நினைவு கூரப்போகிறது. அதுவன்றி அவரது போதனைகளோ அவரைச்சூழ்ந்திருந்த பக்தகோடிகளோ அல்ல . 

இடுகை 0050


Saturday 16 April 2011

கத்தியின்றி இரத்தமின்றி ....


பாண்டியன்ஜி
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று...- என்ற
நாமக்கல் கவிஞரின் பாடல் வரிகளுக்கேற்ப
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிகுந்த கெடு பிடிகளுக்கிடையே முழுதும் அமைதியாகவே நடந்தேறியிருக்கிறது.  ஒரே நாளில் ஒரே நேரத்தில் துவங்கி ஒரே சமயத்தில் முடிந்த வாக்குப்பதிவில் இரண்டு மூன்று வாக்குச்சாவடிகளில் மட்டுமே விரும்பத்தகாதவை நிகழ்ந்திருக்கிறது.   ஏறத்தாழ மூன்றரைக்கு கோடிக்கு மேலானஆண் வாக்காளர்களும் பெண் வாக்காளர்களும் பெருவாரியாகத் திரண்டு வந்து தங்கள் வாக்குகளை பதிவு செய்திருக்கிறார்கள்.   ஒரு சில வாக்குச்சாவடிகளில்தாங்கள் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற எண்ணத்தை படிவம் 49 ஓ - வில் பதிவு செய்ததன் மூலம் இந்த நாட்டு மக்கள் வெரும் ஆட்டு அல்லது மாட்டு மந்தைகளோ அல்ல என்பதையும் அறிவித்திருக்கிறார்கள்.
இப்போது இருக்கிற ஆட்சி மேலும் தொடர வேண்டுமென்றோ அல்லது இதைவிட மோசமான எந்த ஆட்சி
வந்தாலும் ஒன்றும் கெட்டுவிடப் போவதில்லை என்றும் கருதியிருக்கலாம். அல்லது பெருமளவில் இரைக்கப்பட்ட பணத்துக்கும் பொருளுக்கும் வஞ்சகம் செய்யாமல் வாக்களித்தும் இருக்கலாம்.   தேர்தல் ஆணையத்தின் தொடர்ச்சியான மிரட்டல்களும் அரசியல் தலைவர்களின் சூராவளி பரப்புரைகளும் தொலைக்காட்சிகளின் திரும்பத்திரும்ப நினைவூட்டல்களும் கூட வாக்குப்பதிவு 80 விழுக்காட்டை கடக்க உதவியிருக்கக்கூடும்.   எது எப்படியிருந்தாலும் வாக்களிக்கவேண்டுமென்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.    எந்தவொரு சமரசத்துக்கும் இடமளிக்காமல் தேர்தல் ஆணையம் ஆற்றிய பணி வரண்டு கிடந்த இந்திய ஜனநாயகப்பயிருக்கு ஓரளவு நீர் வார்க்கப்பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன்.
ஒவ்வொரு அரசு இலாக்காகளிலும் நேர்மையான அரசை ஆக்குவதற்கும் இடையிலே குறுக்கிடுகிற தடைகளை தகர்த்திட தேவையான ஆயுதங்கள் சட்ட வடிவில் நிரம்பவே வழங்கப்பட்டிருக்கின்றன.   எனினும் நேர்மையும் திறனும் அற்றவர்கள் இருக்கைகளில் அதிகமாக இருப்பதனாலேயே அரசின் செயல்பாடுகள் கேலிக்கூத்தாகவும் தடுமாற்றத்துக்குள்ளானதாகவும் இருந்திருக்கின்றன. அதிலும் பெரும்பாலான அதிகாரிகள் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஆயுதங்களின் கூர்மையை ( சட்டங்களை ) அறியாமலேயே காலத்தை ஓட்டியிருக்கின்றனர்.
இந்த தேர்தலைப் பொருத்தவரை இந்திய தேர்தல் ஆணையம் பெரும்பாலான ஆயுதங்களை (விதிகளை ) சுழற்றிப் பார்த்திருக்கிறது எனபதை மறுப்பதற்கில்லை.   ஒருசில சமயங்களில் நாட்டு ஆயுதங்களைக்கூட
(விதிகளைத்தாண்டி ) எடுத்திருக்கலாம்.    பாவிகளுடன் அப்பாவிகளும் பாதிக்கப் பட்டிருக்கக்கூடும்.
மாறுபட்ட மனநிலைகளக் கொண்ட பல்வேறு அரசு ஊழியர்களை ஈடுபடுத்தி ஒரேநாளில் ஒரே சமயத்தில் இப்படியொரு வேள்வியை நிகழ்த்தும் போது இது போன்ற குறைகள் ...மிக மிக சாதாரணமானதுதான்.
அதே சமயத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட பணியில் மக்களால் தேர்வு செய்யப்பெற்ற ஜனநாயகஅரசின் செயல்பாடுகளிலும் சாதாரண மக்களுக்கு இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கிற அடிப்படை
உரிமைகளிலும் வரம்பு மீறி மூக்கை நுழைத்திருக்கிறது என்றவொரு குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.
பருவ காலங்கள் தொடங்கி விட்டதால் அதற்கேற்ப அரசின் செயல்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் செயல்களால் தடைபட்டிருப்பதையும் எதிர்பாராத இயற்கையின் சீற்றங்கள் ஏற்படும்போது யார் பொருப்பேர்ப்பது என்ற அநுபவ அய்யங்களை தமிழக முதல்வர் எழுப்பியிருக்கிறார்.
போர்க்கால நடவடிக்கை போன்று அரசின் செயல்பாடுகள் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவது முற்றிலும் சரியானதுதான்.அதே நேரத்தில் அசாதாரண நிலைகளுக்கு யார் பொருப்பேற்க முடியும்
என்பதையும் சிந்திக்க வேண்டும்.   மேலும் ஆணையத்தின் முடிவுகள் நேர்மையற்றபோது விளைவுகள் எத்தகயது.   இது போன்ற வினாக்களுக்கு இப்போது அவசியம் ஏற்படவில்லை என்றாலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டாவது நாட்டின் உயர்ந்த அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம் வரம்புகளை வரையரை  செய்யவேண்டும்.

இடுகை 0049


Friday 8 April 2011

.தமிழ் மண்ணில் தி . மு . க வின் காலடிகள்


அரசியல் அரங்கம் - 4 .
( திராவிட இயக்கத்தின் வரலாறு சுவையானது மட்டுமல்ல , பயனானதும் கூட . திமுக வையும் கலைஞரையும் இரண்டு வகையினர் வரிந்து கட்டிக் கொண்டு வசை பாடுவதை காண்கிறேன்.
1 ) சுய மரியாதை , பகுத்தறிவு , இட ஒதிக்கீடு சிந்தனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் . திமுக வைத்தவிற வேறு எவருக்கும் இவற்றில் அக்கரையில்லை என்பது அவர்களுக்கு மிக நன்றாகத்தெரியும்.அதனால் தக்க தருணம் பார்த்து கூட்டமாக கூச்சல் எழுப்புகிறார்கள்.
2 ) திமுக யாருக்காக போராடுகிறது என்று அறியாத பாமர மக்கள்.திமுகவின் சரித்திர காலடிகளை
உணராத இன்றைய இளைய தலைமுறை. 
இன்றைய இளைஞர்கள் ஓய்விருக்கும் போது ஒரு முறையாவது புரட்டிப் பார்க்கவேண்டும். எல்லா இயக்கங்களைப் போல திமுகவிலும் ஊழல் ஊடுருவியிருப்பது உண்மைதான்.அதனையும் மீறி திமுக இந்த மண்ணுக்கு தேவையான இயக்கமே. . அதற்கு மாறான ஒரு இயக்கமோ ஒரு தலைமையோ இன்னும் இந்த மண்ணில் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை )
பாண்டியன்ஜி
 காங்கிரஸ் கம்யூனிஸ்ட் இயக்கங்களை மட்டுமே பாற்கப்பட்டு (அன்நாளில் அறியப்பட்டு அல்ல ! ) வந்த எனக்கு சமுதாய சீர்திருத்தங்களை முன்னிருத்தி தொடர்ந்து போராட்டங்களை நிகழ்த்தி வந்த திராவிட இயக்கத்தின் தோற்றம் புலப்பட வெகுநாளாயிற்று.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசியல் அமைப்புக்களில் இழைக்கப்பட்டுவந்த அநீதிகளுக்கெதிராக குரல் கொடுத்த சுயமரியாதை இயக்கமே பின்னாளில் தந்தை பெரியார் தலைமையில் திராவிட கழகமாக உரு மாறியது. இன்றும் நீரு பூத்த நெருப்பாக இந்த மண்ணில் காணப் பெரும் சாதீயக் களைகள் தஞ்சை மண்முழுதும் மண்டிக் கிடந்த சமயம்.தீண்டாமையும் சாதீயக்கொடுமைகளும் தமிழ் மக்களின் ஒவ்வொரு அங்கங்களிலும் நிறைந்து கிடந்த நேரம்.பிராமணர்கள் சமூகத்தின்அனைத்து பிரிவினரையுமே தவிற்து தனித்து நின்றனர். உயர் சாதியினர் என்று கருதிக் கொண்ட ஒரு வகுப்பினர் தாழ்த்தப்பட்டோரிடமிருந்து விலகி வாழ்ந்தனர். தாழ்த்தப்பட்டோரோ தலித்துகளை முழுதும் நிராகரித்தனர்.
1959 இல்முதன் முதலாக சென்னை மாநகராட்சியை கைப்பற்ற காரணமாயிருந்த கலைருக்கு அண்ணாவின் கணையாழி!
திமுக வின் வருங்கால வெற்றிக்கு அடையாளம் காட்டிய நிழற்படம். பின்நாளில் திமுக வை விட்டு வெளியேறிய ஒருசில தம்பிகளின் கண்களுக்கு
எரிச்சலூட்டிய கருப்பு வெள்ளை!
மொத்தத்தில் சகமனிதர்களை சகமனிதர்களே வெறுத்து ஒதுக்கும் இழிநிலைதான் அன்று காணப்பட்டது.அரசுப்பள்ளிகளில் குழந்தைகள் கூட தனிமை படுத்தப்பட்டனர். குளம் குட்டைகளில் தனியுரிமை கொண்டாடப்பட்டது. ஆண்டவனின் அருளுக்கு சாதீயத்தகுதிகள் தேவைப்பட்டன.களைப்புக்கு தேனீர் குடிப்பது தீய செயலாக கருதப்பட்டது.பிராமணர்களின் எழுத்துக்களே பத்திரிக்கைகளில் பிரசுரிக்கப்பட்டன. தேனீர்க்கடைகளே ஊருக்கு வெளியேதான் இருந்தன.அங்கேயும் தலித்துகளுக்கு தனிக்குவளை பொருத்தி அவர்களை வெகு தூரத்தில் நிருத்தினர். தோளில் போட வாங்கப்பட்ட துண்டு இடுப்பிலும் தலையிலும் மட்டுமே கட்ட அனுமதிக்கப்பட்டது.சலவைத்தொழிலாளரும் முடிதிருத்துவோரும் ஊருக்குள் நுழையும்போதே காலணிகளை ( காலணி வைத்திருப்போர் ) கைகளில் எடுத்துக்கொள்வதை கண்டிருக்கிறேன்.தலித்துகளை , தாழ்த்தப்பட்டோரை தொடநேர்ந்த தருணங்களில் தீட்டாக கருதி தலைமுழுகவும் வேண்டியிருந்தது. மணிக்கணக்கின்றி மாடாய் உழைத்த தலித்துகளை ஒதுக்கிய தாழ்த்தப்பட்டோர் நிலையும் , மொத்த சமூகத்தையுமே தீண்டத்தகாததாக கருதிய பிராமணர் நிலையையும் இனம் புரியாத குழப்பத்துடன் கண்டவன் நான்.எங்கள் ஊர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் பிராமணராக இருந்தார். ஊருக்குள் இருந்த அஞசல் அலுவலகத்தின் அதிகாரி அய்யங்காராக இருந்தார் .ஊருக்கு வெகு தொலைவில் காணப்பட்ட புகைவண்டி நிலையத்துக்கும் பொருப்பாளர் ஒரு பிராமணரே.இங்கே சொல்லப்பட்ட அத்தனை அலுவலகங்களிலும் கடை நிலை ஊழியர் தாழ்த்தப்பட்டவராகவே இருக்க நேர்ந்தது.அதனால்தான் பின்னாளில் ஈர்க்கப்பட்ட பகுத்தறிவுக் கருத்துக்கள் இனறும் எனக்குள் பசுமையாக இருப்பதை உணர்கிறேன்.

சமீபத்தில் வெளியிடப்பெற்ற சட்ட வல்லுநர் டாக்டர் அம்பேத்காருடைய வாழ்வை விளக்கும் திரைப்படம் ஒன்றைக் கண்டிருக்கலாம்.. பட்டம் பெற்று பதவியில் அமரும் அம்பேத்கார் அவருடைய அலுவலகத்திலேயே ஒரு குவளை நீருக்கு எத்தனை எதிர்ப்பை ஏற்க நேர்ந்தது என்பதையும் சாதீயப்பேய் இந்த தேசத்தில் எப்படி நீக்கமற நிறைந்திருந்தது என்பதையும் சித்தரித்திருந்தார்கள். நெடு நாட்களுக்கு முன் அன்நாளைய இந்தியஜனாதிபதியும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் தலைவருமான பாபு ஜெகஜீவன் ராம் மத்தியமாநிலத்தில் திறந்து வைத்த ஒரு சிலையை அதே நாளில் எண்ணை தேய்த்து சுத்தம் செய்த கொடுமையை படித்திருக்கிறேன்.இந்த கட்டுரையை எழுதும் இதே கணம் ஓய்வு பெற்ற ஓர் தாழ்த்தப்பட்ட அதிகாரியின் அலுவலகத்தை சாணம் தெளித்து சுத்தம் செய்த கொடுமை கேரளத்தில் நிகழந்திருப்பதாக தினமணி செய்திவெளியிட்டிருக்கிறது.(தினமணி 08 04 2011 ) இத்தனைக்கும் படித்தவர்களின் எண்ணிக்கை 2011 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்கூட 93.91 விழுக்காடு பெற்று மாநிலங்களிலேயே முதலிடம் வகிப்பது கேரள மாநிலமே. இந்த தேசத்தில் சாதீய களைகள் எத்தனை ஆழத்துக்கு வேர் விட்டிருக்கின்றன என்பதும் விடுதலை பெற்று ஏறதாழ 64 வருடங்கள் கழிந்த பின்பும் இந்த தேசத்துக்கு விடிவு ஒன்றும் ஏற்பட்டுவிட வில்லை என்பது ஒரு துயரமான செய்தியாக இருக்கிறது.இந்த நேரத்தில் நான் அறிந்த சம்பவம் ஒன்றும் நினைவிற்கு வருகிறது. கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் குடிநீருக்காக வைக்கப் பட்டிருந்த தண்ணீர் பானையிலிருந்து தாகம் தீர்க்க தண்ணீர் குடித்த ஒரு தாழ்த்தப்பட்ட மாணவன் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்ட போது ஒரு கிளர்ச்சி வெடித்தது.தந்தை பெரியாரே முன்நின்று முடித்து வைத்த அந்த கிளர்ச்சிதான் பின்நாளில் திராவிட இயக்கம் தஞ்சை மண்ணில் வேர் பிடிக்க உதவியது என்ற தகவல் இன்றைய இளைய தலைமுறை அறிந்திடாத ஒன்று.அன்று அந்த கிளர்ச்சியில் முன்னின்ற ஒருசில மாணவர்கள் பின்னாளில் திராவிட இயக்கத்தின் அடித்தளத்தில் அங்கம் வகிக்க நேரிட்டது.தமிழகம் முழுதும் இச்சீர்கேடுகளை எதிர்த்து அன்நாளில் தெருதெருவாக போராடியது திராவிட இயக்கம் மட்டுமே என்பதை உணரவேண்டும்.

1949 ல் தந்தை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அண்ணாவும் அவர் தோழர்களும் திராவிட கழகத்தை விட்டு வெளியேற நேர்ந்தது. தமிழ் மக்களுக்கு சுயமறியாதையையும் பகுத்தறிவுச்சிந்தனைகளையும் போதித்த தந்தை பெரியார் பொருந்தாதிருமணமொன்றை ஏற்க நேர்ந்ததுதான் பிளவுக்கான காரணம் என்று அறிந்திருந்தேன். அண்ணாவின் விலகலுக்கு அதுமட்டும் காரணமல்ல என்பதை பின்நாளில்தான் உணரமுடிந்தது. ஆனால் அதுவும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.சட்டப்படி வாரிசு இல்லாத தந்தை பெரியார் சொந்த இயக்கத்தின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதும் நம்பிக்கை இழந்தார்.தனக்குப் பின்னால் தன் இயக்கத்தையும் சொத்துக்களையும் காக்கவேண்டிய அவசியமும் அவருக்கு ஏற்பட்டது. அதனால்தான் அன்நாளைய சட்டப்படி சர்ச்சைக்குரிய திருமணத்தின் மூலம் இரண்டுக்கும் ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக்கொண்டார்.அதேசமயம் ஜனநாயகத்தில் பெரிதும் நம்பிக்கை கொண்ட அண்ணா ஜனநாயகம் என்பதே இல்லாமலிருந்த திராவிட கழகத்தில் தொடர இயலாத நிலை ஏற்பட்டது.அதன் விளைவு அண்ணாவும் அவர்தம் தோழர்களும் வெளியேறினர்.இருந்த போதிலும் அண்ணாவுக்கும் தந்தை பெரியாருக்கும் ஏற்றுக்கொண்ட கொள்கைகளில்
எந்த முரண்பாடும் ஏற்பட்டுவிடவில்லை.
ஏற்ற தாழ்வற்ற சமதர்ம சமுதாயம் ,அரசியல் அமைப்பில் அனைவருக்கும் சமபங்கு ,அகில இந்தியா முழுதும் சீரான ஆட்சி, மொழிவழி பிரதேசங்களுக்கு முக்கியத்துவம் - இவற்றில் எந்த மாறுபாடும் அவர்களுக்கு ஏற்பட்டுவிடவில்லை. இருந்த போதும் இந்த கோட்பாடுகளுக்கு ஏற்றுக் கொண்ட செயல் வடிவம் மாறுபட்டதாய் இருந்தது.
சமுதாயச் சீரழிவுகளை அகற்றும்போது அத்தனையும் சரியாகும் என்பது தந்தை பெரியாரின் கணிப்பு.ஆனால் பெரியாரின் கொள்கைகள் தமிழ் மண்ணில் வேர் பிடிக்க அரசியல் அமைப்பில் அங்கீகாரம் பெறப்படவேண்டுவது அவசியம் என்பது அண்ணாவின் கருத்தாயிருந்தது.அதன் விளைவாக 1949 செப்டம்பர் 19 ல் திராவிட முன்னேற்ற கழகம் துவக்கப்பட்டு அன்று மாலை சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் நிகழ்ந்த கூட்டத்தில் திமுகவின் தோற்றம் அறிவிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து அரசியல் அரங்கில் திமுக வெற்றிகளைக் குவிக்கத்தொடங்கியது அனைவரும் அறிந்த கதைதான்.

1949 ல் திமுக வைத்துவக்கிய அண்ணா 1952 ல் தேர்தலில் பங்கேற்க அவசரப்பட வில்லை. அரசியலில் சனநாயக கோட்பாடுகளில் மிகுந்த மரியாதை வைத்திருந்த அண்ணா தேர்தலில் திமுக பங்கெடுப்பது குறித்து திருச்சியில் நிகழ்ந்த மாநில மாநாட்டில் உருப்பினர்களுக்கிடையே ஓட்டுப் பெட்டி வைத்தே முடிவெடுத்தார்.ஆனால் அடுத்த பத்தாண்டுகளில் சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் பேரியக்கத்தை வீழ்த்தி திமுக ஆட்சியை பிடிக்கப்போகிறது என்று எவரும் அறிந்திருக்கவில்லை.67 ல் ஆட்சியை கைபற்றி அரசு அமைத்த போது அண்ணா ஆற்றிய உரை அதைத்தான் வெளிப்படுத்தியது. 1967 ல் காங்கிரசிலிருந்து வெளியேறிய மூதறிஞர் இராசாசியை இணைத்துக்கொண்டு ஆட்சியைக்கைப்பற்றி காங்கிரஸ் இயக்கத்தை வெளியேற்றினார்.அன்று வெளியறிய காங்கிரஸ் பேரியக்கம் இன்றுவரை முடமாக நின்றிருப்பதை காணலாம்.
ஆட்சியில் அமர்ந்த அன்றே சென்னை மாகாணமென்று கூறப்பட்ட பெயரை தமிழ் நாடு என்று மாற்றியமைத்தார் அண்ணா. தமிழ் நெஞ்சங்களின் நீண்ட நாளைய குறைந்தபட்ச கோரிக்கையை கூட அன்நாளைய காங்கிரஸ் ஆட்சி நிறைவேற்றி வைக்கவில்லை என்பது நினைவில் கொள்ள வேண்டும்.
ஓராண்டே ஆட்சிக்கட்டிலில் இருந்த அண்ணாவை இயற்கை எளிதாக திரும்பப்பெற்றுக்கொண்டது.சனநாயகத்தில் மிகுந்த பற்று வைத்திருந்த அண்ணா,    திமுகவின் அடித்தளத்தை அத்தனை
வலுவாக அமைத்திருந்தார்.இந்தியமண்ணிலேயே எந்தவொரு இயக்கத்துக்கும் அப்படியொரு வலுவான அடித்தளம் இருந்ததாக நினைவில்லை.1962 ல் அண்ணா பாராளுமன்றத்தில் உருபினராக இருந்தபோது பண்டித நேருவின் எச்சரிக்கைக்கு பதிலளித்த பாங்கு இங்கு நினைவு கூரத்தக்கது.
உங்கள்( தி மு க )நாட்கள் எண்ணப்படுகின்றன .your days are numberd !
பாராளமன்றத்தில் பண்டித நேரு
என்னுடைய காலடிகள் அளந்து வைக்கப்படுகின்றன. my steps are measherd ! 
பாராளமன்றத்தில் பேரறிஞர் அண்ணாவின் பதில் .---
அவருக்குப் பின் பொருப்பேற்ற கலைஞர் தந்தை பெரியாரும் அண்ணாவும்கண்ட கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றிவருதலை கண்டுணரலாம்.1962 ல் அண்ணா முதன் முதலாக
மாநிலங்களவைக்கு தேர்வு பெற்று ஆற்றிய முதலுரையில் நான் நடைபாதையோரத்தில் உழன்று கிடக்கும் மனிதர்களுக்காக பேசவந்திருக்கிறேன் என்றே துவக்கினார்.இன்றும் கலைஞரின் தொடர்ந்த பணி அதே திசையில் பயணிப்பதை காணமுடியும்.ஆட்சிக்கு வந்தால் படி அரிசி மூன்று ரூபாய்க்கு
போடுவேன் என்றளித்த வாக்குறுதியை அண்ணாவால் நிறைவேற்ற முடியாமல் போயிற்று.அன்நாளில் அண்ணா வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றி இன்று அண்ணாவுக்கு கலைஞர் புகழ் சேர்த்ததை கவனிக்க வேண்டும்.1967 லிருந்து இன்றுவரை திமுக வின் அரசியல் சமுதாயம் மொழி சார்ந்த பணிகளை அன்நாளைய நிலைகளுடன் ஒப்புநோக்கினால் எத்தகைய மகத்தான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை உணரக்கூடும்.மனிதனை வைத்து மனிதனே இழுத்துச்சென்ற கொடுமையை இந்த சென்னை நகரில் கண்டவன் நான்.அப்போது எனது பள்ளிப்படிப்பு மேற்கு மாம்பலம் மேல் நிலைப்பள்ளியில் தொடர்ந்தது.கலைஞர் ஆட்சியில்தான் அத்தனை கை ரிக்ஷாகளும் சைக்கிள் ரிக்ஷாக்களாக உருமாறி மனிதனை மனிதனே இழுக்கும் இழிதொழில் ஒழிக்கப்பட்டது. தொழிலாளிகளுக்காக தோள் கொடுப்பதாக பரைசாற்றிக்கொள்ளும் இந்தியகம்யூனிஸ்ட்கள் ஆட்சி செலுத்திய மாநிலங்களில்கூட இந்த கொடுமை அகற்றப்படாமலேயே இருந்ததை கவனிக்க வேண்டும்.இதனையே கலைஞரின் தலையாய பணியாக நான் கருதுகிறேன். அடுத்தடுத்து அய்ந்துமுறை கலைஞர் கோட்டைக்குள் நுழைந்தபோதெல்லாம் இந்த தமிழ்ச்சமுதாயம் இந்த தேசத்துக்கே வழிகாட்டியாய் நிற்க நேர்ந்ததை மறந்திட முடியாது.

சுதந்திரம் பெற்றுத்தந்த காங்கிரஸ் இயக்கம் நாளடைவில் எத்தனையோ குட்டிகளை ஈன்றதை கண்டிருக்கலாம். இதில் திமுக வும் விலக்கல்ல என்பதும் வரலாற்று உண்மை.ஆனால் திராவிட கழகத்திலிருந்து திமுக பிரிய நேரிட்டது கொண்ட கொள்கைகளில் ஏற்பட்ட முரண்பாடல்ல.செயல் முறைகளில் ஏற்பட்ட வித்தியாசங்களே. பின்நாளில் திமுக வில் ஏற்பட்ட விரிசல்களுக்கான காரணங்கள் பெரும்பாலும் தனி நபர்களுக்கு ஏற்பட்ட விபத்துகளே.அநேகமாக பெரும்பாலான விரிசல்கள் கலைஞரை மையப்படுத்தியே ஏற்ப்பட்டது ஒரு துரதிஷ்டம்தான்.கலைஞரின் அசாத்திய
திறமை ஓய்வற்ற உழைப்பு அவரை உச்சிக்கு கொண்டு சென்றது.அவருடைய அசுர வளற்சி கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றோருக்கு அழுக்காறாயிற்று.அதன் விளைவே திமுக ஒருசில விரிசல்களை ஏற்க நேர்ந்தது .
1961 ல் அண்ணா காலத்திலேயே சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட ஈவெகி சம்பத் திமுகவைவிட்டு வெளியேறி தமிழ் தேசிய கட்சியை நிறுவினார்.நெடுங்கால நாடாளமன்ற பணி ,டெல்லி காங்கிரஸாரோடு ஏற்பட்ட இணக்கம் தமிழ் தேசிய கட்சியை வெகு சீக்கிரத்தில் காங்கிரஸில் கரைத்தது.
1972 ல் மத்தியரசின் வருமானத்துறை புரட்சி நடிகர் எம் ஜி ராமச்சந்திரனை இறுக்கநேர்ந்தது.திமு க வின் செயலற்ற பொருளாளராய் இருந்த புரட்சி நடிகர் எம்ஜியார் தானே காட்டவேண்டிய கழகபொருளாளருக்கான கணக்கை கட்சியில் கேட்டு வெளியேறினார்.மக்கள் சக்தியை பெருமளவு பெற்றிருந்த எம் ஜி ராமச்சந்திரன் அண்ணா திமுக என்றகட்சியை ஏற்படுத்தி திமுக வுக்கே எதிராக விட்டுச் சென்றார்.
1993 ல் உணர்வுகளுக்கும் வெரும் மனக்கிளற்சிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்த வை கோபால்சாமி திமுக வைவிட்டு பிரிய நேர்ந்தபோது திமுகவிலிருந்து ஒரு வலுவான இளைஞர் சக்தி அவருடன் பயணித்தது.இயக்கத்தை தொடர்ந்து நடத்த தேவையான சாதுர்யமும் நிதானமும் அற்ற கோபால்சாமி உணர்வுகளுக்கும்  னக்கிளர்ச்சிகளுக்கும் மட்டுமே இடம் கொடுத்து இளைஞர் எழுச்சியை வழிநடத்தும் திறனின்றி திகைத்து நிற்பதை இன்றும் காணலாம்.
இவையனைத்துக்கும் தலையாய காரணம் தனிமனிதற்கிடையே ஊடுருவிய அழுக்காறே.
அத்தனைக்கும் காரணமாக கலைஞர் அமைந்தது துரதிஷ்டம்தான். 1949 ல் திமுக தோன்றியபோது
அண்ணாவின் பின்னால் அணிவகுத்த தலைவர்கள் வரிசையில் நான்காவதாக நின்றிருந்தவர் கலைஞர்.
கழகத்தில் கலைஞரின் பணி அசாத்தியமானது. கொடுத்த பணியை திறம்பட முடித்து அண்ணாவிடம் நெருக்கம்.ஓயாது சுழன்று கழகப்பணியில் தொண்டர்களிடத்து நெருக்கம்.எழுத்திலும் பேச்சிலும் அனைவரிலும் முன்னின்று மக்களிடையே நெருக்கம் . நின்ற தேர்தலிலே அனைத்திலும் வெற்றி சூடி ..அண்ணாவுக்குப்பிறகு முதலிடத்துக்கு நகர்ந்த பாங்கு ...உயர்கல்வி எதனையும்
பெறாத கலைஞருக்கு ஏற்பட்ட இந்த வளற்சி பிற முதுகலை பட்டதாரிகளுக்கு தீராத அழுக்காறாயிற்று.எழுத்திலும் பேச்சிலும் பின்னுக்கு தள்ளப்பட்ட கவிஞர்களுக்கும் சொல்லின் செல்வர்களுக்கும்
மாறாத அழுக்காறாயிற்று.இவையே கழகத்துக்கு ஏற்பட்ட விரிசல்களுக்கு தலையாய காரணமாக நான் கருதுகிறேன்.
ஏறதாழ 62 வருடங்கள் காணாமற் போய்விட்டது.திராவிட இயக்கத்தின் மேல் மக்கள் வைத்த நம்பிக்கை பெரிதும் பொய்த்துப்போகவில்லை.தமிழ் நாடு இன்று இந்த மண்ணில் தலை நிமிர்ந்துதான் நிற்கிறது.மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது எத்தனையோ முன்னேற்றங்களை பெற்றிருக்கிறது.
மக்களிடையே கல்வியறிவு உயர்ந்திருக்கிறது.நகரங்களும் கிராமங்களும் தூய்மை பெற்றிருக்கின்றன.குளம் குட்டைகளில் குளித்தவர்கள் இன்று குழாய் நீரில் குளிக்கிறார்கள்.ஆண்களைவிட இப்போதெல்லாம் பெண்கள் அதிகமாக பணிக்கு செல்வதை காணமுடிகிறது.கிராமத்து சாலைகள் கண்சிமிட்டுகின்றன.மூன்று லட்சம் பேர்களுக்கு மேலாக வேலை கிடைத்திருக்கிறது.பெரும்பாலான நேரங்களில் வேலைக்கு ஆட்களே கிடைப்பதில்லை. மின் வெட்டு மட்டும் வயிற்றை கலக்குகிறது.
நவீன யுகத்தின் கண்டுபிடிப்புக்களை இப்போது அனைத்து மக்களும் பரவலாக பெற்றிருக்கிறார்கள். தமிழன்னை இணையத்தில் வலம் வருவதைக்காணமுடிகிறது. மொத்தத்தில் தமிழ் சமுதாயமும் இந்திய தேசமும் இன்றைய உலகத்தில் தவிற்க இயலாத ஒன்றாகியிருக்கிறது.
திராவிட இயக்கத்தின் தூண்களாக கருதப்பட்ட பெரும்பாலான தலைவர்களில் என் கண்களுக்கு கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் மட்டுமே மிச்சமிருப்பதாக தோன்றுகிறது. ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் ஆற்றிய பணி தமிழக வரலாற்றில் பொன்எழுத்திட்டு போற்றத்தக்கது. தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் கண்டகனவுகளுக்கு அங்கீகாரம் ஏற்படுத்தி
நிஜமாக்கியவர்கள் இவர்களே!

நாணயத்தின் அடுத்த முகம் அத்தனை சுவாரசியமாக இல்லை.தலைவதிக்கு மருந்து உண்டபோது
திருகு வலியை ஏற்படுத்திக்கொண்டதுதான் மிச்சம்.இயற்கையை மிஞ்சிய மனித செயல்கள் அத்தனைக்கும் பக்க விளைவுகள் இல்லாமல் இருந்ததில்லை.வயலுக்கு இறைத்த நீர் விழலுக்கு உணவாயிற்று.கல்விக்கண்ணை திறந்தபோது அசலுக்கு எதிராக நகலை நிருத்த முயன்றனர்.கொடூரமாக கொலை செய்தவன் நிரபராதி என்று கல்வி வாதிடுகிறது.இல்லாத வியாதிக்கு பணத்துக்காக மருத்துவம் பாற்கபடுகிறது.கையூட்டு சொல்லுக்கு வெகுமதி என்று பொருள் சொல்லப்படுகிறது. ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒருசில வேட்பாளர்களே லட்சாதிபதிஆக இருந்ததாக நினைவு.தப்பித்தவறி சுயேட்சை வேட்பாளர்களில் எவராவது வசதியாய் இருந்திருக்கக்கூடும்.ஆனால்
இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டிடுகிற வேட்பாளர்களில் 240 பேர் கோடீஸ்வரர்களாம்.
இதில் ஆளும் கட்சி எதிர் கட்சி சுயேச்சை என்ற பாகு பாடெல்லாம் கிடையாது.தலித் விடுதலலைக்கு போராடும் இயக்கத்தின் வேட்பாளரும் இதில் அடக்கம் என்பதுதான் வியப்பு தரக்கூடியது.
அரசியலில் அத்தனை எளிதாக பணம் கொழிக்கிறது.
திமுக தோன்றியபோது பெருவாரியான ஜனத்திரளைத்திரட்ட அண்ணா பெரியாரின் அழுத்தமான கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள நேரிட்டது.அதன் விளைவாக
தேசமெங்கும் இறைந்து கிடந்த கையூட்டு கலாசார சீர்கேடு திமுக வையும் விட்டு வைக்கவில்லை என்றே தோன்றுகிறது.
இதனை க்கருத்தில கொண்டே தந்தை பெரியார் தன் இயக்கத்திற்கு தேர்தலில் பங்கெடுப்பதை அறவே தவிற்தார்.திமுக தேர்தலில் பங்கெடுப்பது என்ற முடிவை மேற்கொண்ட போது தனது குடியரசு இதழில் எழுதுகிறார்.
இப்படிப்பட்ட காந்தியின் சிஷ்யர்களின்ஆட்சியே சந்தி சிரிக்கிறது என்றால் நம் கழகத்தை சார்ந்த இந்த சமய சஞ்சீவிகளின்ஆட்சிமட்டும் எப்படி யோக்கியமான ஆட்சியாக இருக்க முடியும்.இவர்களை சட்ட சபைக்கு இழுத்து விட்டால் காந்தியாரின் சீடர்களை விட மேலும் மோசமாகத்தானே இவர்கள் நடந்து கொள் வார்கள்.
நீதிக்கட்சி தேர்தலில் நின்றுதான் பதவி வேட்டையாடி கெட்டழிந்தது.அந்ததவறு மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்று.....
-- குடியரசு ... செப்டம்பர் 24
இன்று ஏற்பட்டிருக்கும்  நிகழ்வுகள் அதைத்தான் போதிக்கிறது.
ரோஜாவில் முள் இருப்பது உண்மைதான்.ஆனால் அதன் மணம் எத்தனை மயக்கத்துக்குள்ளாக்குகிறது.
----------------------------------------
இடுகை 0048