Thursday 28 October 2010

இசை ஞாநியும் இசை முட்டாளும்



                           பாண்டியன்ஜி
இந்த மாதம் 16 ஆம் தேதி.      சனிக்கிழமை மாலைப் பொழுது. சென்னை நகரின் பெரும் பகுதிகளில் ஆயுதபூசைக் கொண்டாட்டங்கள் பெருமளவில் முடிவுக்கு வந்திருந்த சமயம்.       கே.கே நகர் முனுசாமி சாலையிலிருக்கும் டிஸ்கவரி புத்தகக் கடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகநாழிகை பதிப்பகத்தின் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்.        இலக்கிய ஆர்வலர்களும் இணையதள வலைப்பூ சொற்சிற்பிகளும் பெருமளவில் புத்தக அரங்கில் குழுமியிருந்தனர். சி.சரவணகார்த்திகேயன் அவ்வப்போது எழுதிய புதுக்கவிதைகளை தொகுத்து அகநாழிகை பதிப்பகம் நேர்த்தியாக அச்சிட்டு விற்பனைக்கு வெளியிட காத்திருந்தது.     பரத்தைக் கூற்று என்ற கவிதை நூலை சமகால எழுத்தாளர் சாருநிவேதா வெளியிட்டு உரையாற்றினார்.    சமீப காலங்களில் ஊடகங்களிலும் தமிழ் பத்திரிக்கைகளிலும் மாறுபட்ட கோணங்களில் இடம்பிடித்திருந்த சாருநிவேதாவை பெயரளவில் மட்டுமே நான் அறிந்திருந்தேன். அவருடைய எழுத்துக்கள் எதனையும் நான் படித்ததில்லை.    படித்ததில்லை என்ற வார்த்தையை நான் மிகுந்த கர்வத்துடனோ அல்லது பெருவாரியான ஏக்கத்துடனோ உச்சரிக்கவில்லை.   கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக மின் அணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த புத்தகங்களிடையே மிகுதியும் நாட்டம் கொண்டிருந்தேன் என்பதன்றி வேறு தனியாக காரணங்கள் எதுவுமில்லை .
நிகழ்ச்சி முடிவுற்று பேரூந்தில் திரும்பிக்கொணடிருக்கிறேன்.    பரத்தைக் கூற்று
நூலை வெளியிட்டு சாருநிவேதா ஆற்றிய உரையின் சில கருத்துக்கள் என் சிந்தனையை பெரிதும் கிளறியதை உணர்கிறேன்.  இது போன்ற எண்ணங்களை சாரு மட்டுமே கொண்டிருக்கவில்லை.
சமீபகாலங்களில் நான் வாசிக்க நேர்ந்த ஒருசில அரசியல் மற்றும் மொழிசார்ந்த திறனாய்வுக்கட்டுரைகளும் இதே கோணத்தில்தான் எழுதப்பட்டிருந்தன.   அதன் விளைவாக என் எண்ணங்களில் எதிரொலித்த சில கருத்துக்களை இந்த இடுகையில் பகிர்ந்து கொள்ளுகிறேன்.
சாருநிவேதா எழுப்பிய கருத்துக்களும் அதன் விளைவான எதிரொலித்த என் எண்ணங்களும்.
1 )   பாலியல் தொழில் முழுவதுமாக தடை செய்யப் பெற்ற தமிழகத்தில் பரத்தயர் எண்ணங்களை எப்படி எழுத முடிந்தது.    மும்பாய் கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் கிடைக்கின்ற அனுபவங்கள் ஏதுமின்றி இப்படியொரு நூலை நிச்சயமாக படைக்க முடியாது.
ஓர் பரத்தையின் அவலத்தை எழுப்ப பரத்தையர் சார்ந்த பல்வேறு சூழல்களை அறிந்திருப்பது அவசியம்தான். அதில் ஒன்றும் அய்யமில்லை.எழுத்தாளர் கல்கியிலிருந்து எழுத்தாளர் வாசந்திவரை தங்கள் கருத்துக்கு வலு
சேர்க்க அந்தந்த மண்ணில் சுற்றித்திரிந்ததைப் படித்திருக்கிறேன்.
பொன்னியின் செல்வன் புதினத்துக்காக எழுத்தாளர் கல்கி ஈழம் வரை பயணம் செய்தது நினைவுக்கு வருகிறது.
கள்ளிப்பால் கொடுத்து செய்யப்படும் பெண் சிசுக்கொலைகளைப்பற்றி எழுத மதுரையைச்சார்ந்த ஆண்டிப்பட்டி கிராமங்களில் சுற்றித் திரிந்த வாசந்தியை படித்திருக்கிறேன்.  புகையும் குடியும் மனிதனை எப்படிச் சீரழிக்கிறது என்ற கருத்தை வலியுறுத்த சம்மந்தப்பட்டவர்களோடு பல நாட்கள் நேர்காணல் கண்டவர் எழுத்தாளர் சிவசங்கரி.
இவையனைத்தும் ஒரு பக்கமே.
வங்கத்தில் ஒடும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர்
செய்குவோம்.    என்று வருங்காலத்தேவைகளை மனதில் நிறுத்தி நாளை நனவாக வேண்டிய கனவுகளை அன்றே கண்டவன் மகாகவி பாரதி.
கவிஞன் எனபவன் அவன் காலத்தில் விளையும் அத்தனை அறிவுகளுக்கும் சொந்தக்காரனாய் இருத்தல் வேண்டும்.  கடந்து போன கால சரித்திரங்களையும் வருங்காலம் பற்றிய தொலைநோக்கு சிந்தனைகளையும் ஒரு சேரப் பெற்றிருக்க வேண்டும்.   இவையனைத்தும் சரிவரக்கிடைக்கும் போது கவிஞனுக்கு நிகழுகின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கண்டுதான் எழுதவேண்டுமென்ற கட்டாயம் ஏற்படுவதில்லை.     உயர்ந்த கவிஞன் ஒவ்வொன்றையும் உணர்வுபூர்வாய் அனுபவித்து கவி எழுத முடியும்
இன்று ஈழம் இருக்கும் திசைகூட அறியாதோர் ஈழத்தில் சொட்டும் இரத்தத்தின் அவலத்தை சித்தரிக்கவில்லையா.    தடை செய்யப்பெற்ற கருத்துக்களையும் வசன இலக்கியத்தில் எழுதக்கூசும் சொற்களையும் கவிஞன் தன் கவிதை வரிகளில் இலகுவாக நுழைப்பதை காண முடிகிறது. அவனுக்குள்ளே துளிர்த்திருக்கும் கவித்துவம் அவனுக்குஅத்தனையும் சாத்தியமாக்குகிறது.எனவே பரத்தையின் அவலத்தை எழுத அப்படியொரு அனுபவம் இருந்துதான் தீரவேண்டுமென்று தோன்றவில்லை.
2 )    தமிழகத்தில் மட்டுமே அடைமொழியிட்டு அழைக்கும் முட்டாள்தனமான பழக்கம்
மிகுதியாக உள்ளது. வைரமுத்து கவிப்பேரரசு என்றால் மற்றவர்கள் எல்லாம் சிற்றரசுகளா.    இளையராஜா இசைஞானியென்றால் எம்.கே தியாகராஜபாகவதர் இசை முட்டாளா.
இதே போன்ற கருத்தை சில நாட்களுக்கு முன் தினமணி எழுதிய தலையங்கத்திலும் கண்ணுற்றேன்.  அடைமொழி நமக்கெல்லாம் மொழி கொடுத்த வரப்பிசாதம் என்றே எண்ணுகிறேன்.
அடைமொழியிட்டு அழைப்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல.    சங்ககாலத்திலிருந்து சமீபகாலம் வரை ஒரு பொருளை ,   ஒரு செயலை மிகுதியாக உயர்த்திக்காட்ட அடைமொழி பயன்பட்டே வந்திருக்கிறது.   பிறந்த மழலையை கண்ணே மணியே என்றும் பெண்ணினத்தை மானே மயிலே என்றும் அடைமொழியிட்டு அழைப்பதில்லையா.   மற்றோரிடமிருந்து காந்தியை உயர்த்திச் சொல்ல காந்திக்கு மகாத்மா என்ற அடைமொழி பயன்பட வில்லையா.   சுதந்திரமண்ணில் களைகளாக துளிர்த்திருந்த சமஸ்த்தானங்களை தரைமட்டமாக்கிய படேலுக்கு இந்தியாவின் இரும்புமனிதர் என்ற அடைமொழி எத்தனை பொருத்தமானது.
அண்ணாவின் பேராற்றலை வியந்து இதோ ஒர் பெர்நாட்ஷா என்று கல்கி கூவவில்லையா.
ரா.பி சேதுப்பிள்ளைக்கு சொல்லின் செல்வரும் சோமசுந்ரபாரதிக்கு நாவலர் பட்டமும் எத்தனை பொருத்தமானது.     பாரதியை மகா கவி என்றழைக்க மறுத்த கல்கி பின்நாளில் பாரதி மகாகவிதான் என்று உணரவில்லையா.
எம்.கே.தியாகராஜபாகவதர் அவர் காலங்களில் அபூர்வ கவிதான்.   அதேபோல் இளையராஜாஅவருடைய காலங்களில் இசைஞாநிதான்.   இன்னாளில் வைரமுத்து கவிப்பேரரசுதான் அதில் ஒன்றும் அய்யமில்லை.   எவரையும் எவரும் அடைமொழியிட்டு அழைப்பதில் தவறேதுமில்லை.     இவையனைத்தும் காலச்சூழலுக்கு ஈடு கொடுத்து எத்தனை தூரத்துக்கு நிற்கப்போகிறது என்பதே முக்கியம்.
இவற்றில் எல்லாம் நாம் காணும் குற்றம் ஒன்றுதான். உலகளாவிய கலாசார
சிதைவினால் போற்றுவோரும் போற்றப்படுவோரும் மிகுதியாக தரத்தில் தாழ்ந்திருப்பதே.
பெரும்பாலும் 80 களுக்குப் பிறகே இதுபோன்ற போக்கை மிகுதியாக காணமுடிகிறது.
3 )     நான் அன்பே சிவம் திரைப்படத்துக்கு திறனாய்வு எழுதியபோது நடிகர் கமல்ஹாசன் எனக்கு நண்பரானார்.    ஆனால் உன்னைப்போல் ஒருவனுக்கு திறனாய்வு செய்தபோது அந்த நட்பை இழக்கநேரிட்டது.   நாளை எந்திரனுக்கு எழுதப்போகும் கடுமையான விமர்சனம் சங்கரின் நட்பை பறிக்கக்கூடும்.
முதலில் திரையுலக வணிகர்கள் கமல்ஹாசனும் இயக்குநர் சங்கரும் உங்கள் மீது கொண்டிருந்தது நட்பல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்.   தங்களுடைய பணம் குவிக்கும் முதலீீடுகளுக்கு உங்கள் எழுத்துக்கள் துணைபுரியும்போது உங்கள் பார்வையை நேசிக்கிறார்கள்.    உங்கள் மதிப்பீடு அதற்கு மாறாக அமையும்போது உங்களைத் தவிற்கிறார்கள்.     அதுதான் உண்மை.நட்பு என்ற உறவுக்கு வள்ளுவன் வகுத்திருக்கும் வரயறை இதனைத் தெளிவாக உணர்த்தும்.    இன்று திறனாய்வுத்துறை இது போன்ற தள்ளாட்டங்களுக்கிடையே சிக்கித்திணருவதால்தான் தரமற்றோர் அனைவரும் உச்சியிலே வைத்து பூஜிக்கப்படுகின்றனர்
குற்றங்களை சுட்டிக்காட்டிகுரல் எழுப்ப தகுதிமிக்கோர் இல்லாத காரணத்தால்தான் இன்று மொழி இலக்கியம் கலை அரசியல் அனைத்திலுமே தகுதியற்றோர் முதலிடத்தை பிடித்துக்கொண்டிருக்கின்றனர்.
இசை விமர்சனத்தில் ஒரு சுப்புடுவும் திரைவிமர்சனத்தில் குமுதம் ஜாம்பவானும் வீற்றிருந்த இருக்கைகள் இன்னும் காலியாக இருப்பதாகவே நினைக்கிறேன்.
திறனாய்வு செய்யும்போது திறனாய்வுக்குரிய பொருளை முதலில் திரட்டியும் பின்பு பகுத்தும் இறுதியில் மதிப்பீடு செய்தலே முறையானது.    இடையே வேற்று நினைவுகளுக்கு இடமளிக்கும்போது திறனாய்வின் திசை மாறிப்போக நேரிடுகிறது. தேவைப்பட்டால் இக்கால நீதியரசர்கள் தீர்ப்பகளுக்கடியில் தங்கள கருத்துக்களைப் பதிவு செய்தல் போன்று நீங்களும் உங்கள் உள்ளுணர்வுகளை வெளிப்படுத்திவிட்டு செல்லுங்கள்.
கோடிகளைக் கொட்டி எடுத்த படம் குப்பைக்கு போனது.      என்பது போல.
நட்பு , தகுதி என்றெல்லாம் பேசப்படும்போது என் நினைவில் நிற்கும் ஒரு நிகழ்வு.
மொழி மீதும் கலைமீதும் தீரா வெறி கொண்டு சென்னை வீதிகளில் சுற்றித் திரிந்த இரு இளைஞர்கள் ஒரு மாலைப்பொழுதில் சென்னை மெரீனா கடற்கரையோரத்தில் இலவசமாக தென்றலை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.    கையிலோ தேங்காய் மாங்கா பட்டாணி சுண்டல்.
' உன்னிடம் ஒளிந்திருக்கும் அபார திறமைக்கு இந்த சிங்காரச்சென்னையில் அழியாத சிலை எழுப்புவேன் '
' அடேங்கப்பா ! முதலில் நாளைக்கு வழியைப் பார்.   நீ எனக்கு சிலை வடிக்க நான்
முதலில் இந்த மண்ணில் ரொம்ப ரொம்ப உச்சிக்குப்போக வேண்டும் .   சிலையெழுப்பும் நீயோ அதைவிட ஒசரத்தில் இருக்கவேண்டும்.   அப்பத்தான் அது நடக்கும். '
வரண்டுபோன நகைப்புடன் பதிலளிக்கிறான் இரண்டாவது இளைஞன் பின்னாளில் அது  நிகழப்போகிறது என்பதறியாமல் .
இன்றைய முதல்வர் கலைஞருக்கும் மறைந்த நடிகர் திலகத்துக்குமிடையே அன்று நிகழ்ந்த உரையாடல் பின்நாளில் நிஜமானது.
-----------------------------------------------------------
இடுகை 0032 (17 10 2010 )

Labels: , , ,

Wednesday 20 October 2010

தராசுக்கேற்பட்ட தடுமாற்றம்

                                                  
                                                                   பாண்டியன்ஜி

அக்ரமங்களும் அநீதிகளும் பெருமளவில் தலையெடுக்கத் துவங்கும்போது நின்று கொல்லும் தெய்வமாக பகவான் கிருஷ்ணன் அவதரிக்கிறார் என்று ஆன்மீக பேச்சாளர்கள் அடிக்கடி பேசக் கேட்டிருக்கிறேன்.               அவ்வாறு நிகழ்கிறதோ இல்லியோ இந்த தேசத்தில் நிகழுகின்ற ஒவ்வொரு அக்ரமத்தையும் அழித்தொழிக்க இந்த நாட்டில் மிச்சமிருப்பது நீதிமன்றங்கள் மட்டுமே என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவன் நான்.
பெரும்பாலும் தவறுகளே செய்யக்கூடிய மனிதர்களைக் கொண்ட ஜனநாயகக் கட்டமைப்பில் பணப் பேராசையும் தனிமனித ஒழுக்கமின்மையும் தாராளமாக இடம் பெருவது இயல்பான ஒன்றுதான். பொருளாதாரத்தில் தேசம் வளற்சியுற,வளற்சியுற மனித சமுதாயத்தின் பேராசைகளும் பெருமளவு பெருகி வருவது மறுக்கமுடியாத உண்மை.நாகரீகத்தையும் நல்வாழ்வுத் தத்துவங்களையும் போதிக்க வேண்டிய கல்வி திசைமாறி பணம் குவிக்கும் பாதைகளை திறந்துவிட்டதுதான் மிச்சம்.உலகெங்கும் பரவிக்கிடக்கும் கலாச்சார சீரழிவு இன்று நீதி மன்ற வளாகத்தையும் விட்டு வைக்க வில்லை என்பதுதான் உண்மை. முன்பெல்லாம் கண்ணியம் மிக்கதாய் கருதப்படும் கல்வித்துறையும் மருத்துவத்துறையும் கூட எப்போதோ வணிகச் சேற்றில் சிக்கித்திணற துவங்கிவிட்டன என்பதை இந்த நாடு  அறியும். நாடு விடுதலையுற்றபோது இந்த மண்ணின் நீதிமன்றங்களின் செயல்பாடுகள் போற்றிப்புகழத்தக்கனவாகவே இருந்திருக்கின்றன. தாமதிக்கப்பெற்ற தீர்ப்பேயாகிலும் ஒரு குற்றமற்றவன் கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நீதிமன்றங்கள் மிகுந்த எச்சரிக்கையாகவே இருந்திருக்கின்றன. வழக்குகள் தேங்குவதற்கும் வாய்தாக்கள் பெருகுவதற்கும் இதுவேகூட தலையாய காரணமாய் இருந்திருக்கக்கூடும்.இருந்தபோதிலும் இந்திய நீதிமன்றங்கள் தொடர்ந்து வழங்கிய துணிவுமிக்க தீர்ப்புக்கள் சரித்திரத்தில் என்றும் நினைவு கூரத்தக்கவையே.பொருளாதாரத்தில் பெரும் உச்சத்தில் இருக்கும் பெரும்பாலான நாடுகளை திரும்பிப் பார்க்க தூண்டுபவையாகவே இருந்திருக்கின்றன.இந்த மண்ணின் மக்களுக்கு இந்த தேசத்த்தில் வாழ்வதற்கு தேவையான மறியாதையையும் நம்பிக்கையையும் அள்ளிக்கொடுத்தவை.இருந்த போதிலும் --
சமீப காலமாக தொடர்ந்து வரும் நீதித்துறை சார்ந்த தகவல்கள் மக்கள் மனதில் விதைக்கப் பெற்றிருந்த நம்பிக்கையை பெரிதும் அசைத்துப் பார்த்திருப்பதாகவே தோன்றுகிறது. தராசுக்கேற்பட்ட தடுமாற்றத்தை உணரமுடிகிறது.
1992 - டிசம்பர் - 6 ஆம் நாள் !
கடந்த கால வரலாற்றுக் காலடியாகவும் , சிறுபான்மை மக்களின் வழிபாட்டுத்தலமாகவும் கருதப்பட்ட பாபர்
நினைவிடம் முழுமையாக தகற்கப்பட்டது. இந்த மண்ணின் புராதன சின்னங்களை விட்டுவைப்பதே வருங்கால
சமுதாயத்தின் வளற்சிக்கு வித்தாகும் என்ற எண்ணம் அடியோடு அழிக்கப்பட்டது. இந்த தேசத்து சக சகோதரர்களின் புனிதப்பகுதி இனி இல்லையென்றாயிற்று. இந்த மாபெரும் கொடூரத்தை அரங்கேற்றிய காவிகளின் செயலை கைகட்டிப்பார்த்த காங்கிரஸ் பேரியக்கமும் ஒரு குற்றவளி என்பதை இந்த நாடு மறப்பதற்கில்லை. இதுபோன்ற வக்கிரமான எண்ணங்கள் தொடர்ந்து அரங்கேருமானால் இந்த நாட்டில் மிஞ்சப்போவது எதுவுமில்லை என்பதை உணரவேண்டும்.
ஏறதாழ 8 ஆண்டுகளாக இந்த வழக்கு எந்தமுடிவும் எட்டப்படாமலேயே இருந்திருக்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தல்களுக்கும் இந்த பிரச்சனையை இறையாகவே பயன்படுத்தி வந்திருக்கின்றன. கடந்த மாதங்களில் ஒரு நாள் --
ஒருவழியாக உச்சநீதிமன்றம் ஒரு சமரசத்தீர்ப்பை வழங்கி காவிகளை திருப்திகொள்ளச் செய்தது.அனைத்து
பிரிவினரையும் சமரசம் செய்யும் விதமாக சமமாக பங்கிடும் முடிவை அறிவித்து ஏறதாழ இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.இந்த தேசத்து மக்களோ இனியும் புலியின் வாலைப் பிடித்து ஓடத்தயாராக இல்லை! இரைச்சல் ஓய்ந்தால் சரி என்ற நிலைக்கு எப்போதோ தள்ளப்பட்டிருந்தார்கள்.அதே சமயம் -
இது நாள் வரை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு என்றும் தலை வணங்குகிறோம் என்று சிரம் தாழ்த்தியவர் எல்லாம் இன்று உச்ச நீதிமன்றத்தின் எழுத்துக்களை தரம் தாழ்த்தி விமர்சிக்கத் துணிந்துவிட்டார்கள். அதற்கேற்றார்போல் நாடெங்கும் நிரம்பிக் கிடக்கும் ஒழுங்கீனமும் ஊழல்சீரழிவும் கண்ணியம் மிக்க நீதித்துறையையும் வாரி அணைக்கத் தொடங்கிவிட்டது.
தேவைக்கதிகமான சொத்துக்களை முறையின்றி சேர்த்துக் குவித்த நீதியரசர்களின் கதைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கிவிட்டன. ஆளும் அரசு ஏழை எளிய மக்களுக்கு வாக்குச்சீட்டுகளுக்காக வழங்கநேர்ந்த தரிசு நிலங்களனைதையும் வளைத்து வேலிகட்டிய ஒர்
நீதிபதியின் கதை பத்திரிக்கைகளில் தொடர்கதையாக பிரசுரிக்கப்பெற்று வாசகர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்தியது. என்ன காரணத்தினாலோ இடையிலே நிறுத்தப்பட்ட அந்த தொடர் பின்னர் மக்கள் மனதிலிருந்து மறைந்து போயிற்று.இன்றைய வழக்கறிஞர்களோ சட்ட புத்தகங்களையும் வழக்குமன்றங்களையும் தினந்தினம் புரக்கணித்து வீதிக்கு வரத்
துவங்கிவிட்டனர். கனம் நீதிபதி அவர்களே என்று அழைக்கப்பட்ட நீதிமன்றங்களில் கண்ணியம் குறைந்த சொற்கள் வெடித்து சிதறுகின்றன. கருப்பு கவுன்களை மட்டும் இறுகபற்றிக்கொண்டு நீதிதுறையின் அத்தனை
மாண்புகளையும் வீதியிலே சிதறடிக்கப்பெற்றதை தொலைக்காட்சிகளில் கண்டவர்கள் நாம். கல்வியின் மீது முழு நம்பிக்கையற்றவனே ஆயுதங்களை அள்ளுகிறான் என்பது முழு உண்மையாயிற்று.இது மட்டுமின்றி
நம்பிக்கைக்குரிய நீதியரசர்களுக்கிடையே நிகழுகின்ற வெளிப்படையான உரையடல்கள் சாமான்ய மக்களைக்கூட வியக்கவைக்கின்றன,
சென்ற மாதத்தில் ஒரு நாள் -
ஒரு வழக்கறிஞர் பதவியிலிருக்கும் ஒர் மத்திய மந்திரியின் பெயரைச்சொல்லி என்னை மிரட்டுகிறார்.. என்கிறார் ஒரு நீதிபதி. அந்த மந்திரி
யாரென்று அந்த நீதிபதி வெளிப்படுத்தவில்லை.
அறிக்கையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பிவிட்டேன்....பதிலளிக்கிறார் மாநில தலைமை நீதிபதி. அவரும்அந்த மந்திரி யாரென்று வெளிப்படுத்த வில்லை.
வந்து சேர்ந்த அறிக்கையில் மந்திரியின் பெயர் குறிப்பிடப்படவில்லை...முற்றுப்புள்ளி இடுகிறார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.
அத்தனை பேரும் மெளனம் காக்கிறார்கள். மக்களின் சிந்திக்கும் ஆற்றலை முடுக்கி விடுகிறார்கள்.
இரண்டொரு மாதம் கழிகிறது.
ஊழல் புகாரில் ஒரு மத்திய மந்திரி சிக்குகிறார்.
மேற்சொன்ன மூவரும் சிலிர்த்தெழுகிறார்கள்.
நான் அனுப்பிய அறிக்கையில் 2 வது வரியில் மந்திரியின் பெயரை சிகப்புமையால் கோடிட்டிருந்தேன்..... விழித்துக்கொண்ட மாநில தலைமை நீதிபதி உரக்க கத்துகிறார்.
உங்கள் சத்தத்துக்கு நன்றி... நவில்கிறார் துவக்க ஆட்டக்காரர்.
அப்போதும் சொன்னேன்.இப்போதும் அதையே சொல்கிறேன் சிகப்பு மையே இல்லை. ... மீண்டும் முற்றுப்புள்ளி வைக்கிறார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி.
இப்போது என்ன ஆயிற்று .
நீதி அத்தனையும் இப்போது ஓய்வு பெற்றுவிட்டது.
--------------------------------------------
இடறுகள் ஏற்படும் போதெல்லாம் ஜாதிய கேடயத்தை கலைஞர் எடுக்கத்தவறியதில்லை..
கட்டுரையாளர் ஞாநி ஓ ..வென்று அடிக்கடி எழுதி படித்திருக்கிறேன்.
இப்போது...
தாழ்ந்த ஜாதிக்காரனைக் காக்க தாழ்ந்த ஜாதியைச்சேர்ந்த உச்சநீதிமன்ற நீதிபதி உண்மைகளை மூடி மறைக்கிறார். அதே ஓ..வென்ற இரச்சல். முள்ளை முள்ளால் முறிக்கும் ஞாநியேதான் ! 

இடுகை 0031
உங்கள் உணர்வுகளை மறுமொழி ( COMMENT ) மூலம் வெளிப்படுத்துங்கள் !

Labels: , ,

Thursday 14 October 2010

என் வாழ்வு என் நட்பு என் கைபேசி

            (   இந்த இடுகை இண்டி பிளாகர் - டாட்டா டொக்கோமாவைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது .   )   MY  LIFE   MY FRIENDS     MYPHONES                                                                                                                                                                                                                                                                                               பாண்டியன்ஜி
நட்பு என்பது தன்னலமற்ற குணங்களின் வெளிப்பாடு என்றே கருதுகிறேன். மனிதகுலத்துக்கு மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்துயிர்களுக்கும் அது பொதுவானதாகவே எண்ணத்தோன்றுகிறது. இனம் மதம் மொழி இவையனைத்தையும் தாண்டி நட்பு இந்த உலகில் ஒரு ஆதிக்கம் செலுத்துவதையும் கண்டிருக்கிறேன்.சங்க காலம் முதல் சமீபகாலம் வரை இதற்கு சான்றாக பல்வேறு நிகழ்வுகளை காட்ட முடியும்.
1 ) பிசிராந்தையார் - கோப்பெருஞ் சோழனின் நட்பு..
2 ) புராண கதைகளில் சொல்லப்பட்ட கிருஷ்ணனுக்கும் குசேலருக்குமிடையே ஏற்பட்டிருந்த நட்பு..
3 ) சமீப காலத்தில் கடலில் உயிர் நீத்த தலைவனுக்காக பெருங்கடலை நோக்கி குலைத்துக் குலைத்து உயிர் துறந்த நாயின் நட்பு


இவை போன்ற நிகழ்வுகளை நம் வாழ்வில் கண்டும் கேட்டும் அறிந்திருக்கிறோம். சமுதாயத்தால் வெருக்கப்பட்டவர்களும் சமுதாயத்துக்கே சவால் விடுவோர்களும் தங்களுக்குள் நட்பு பாராட்டி வாழ்வதை இன்றும் காணமுடியும். பொதுவாக ஒத்த வயதுடையோரும் சிந்தனை செயல்களில் ஒன்றாக பயணிப்போரும் இயல்பான சூழல்களில் நெருங்கிவாழ நேருவோரும் பெருவாரியாக நட்பு கொள்ள நேரிடுகிறது. ஆயினும் இத்தகைய நட்பு எத்தனைகாலம் நீடிக்கிறது என்பதே நட்பின் பலமாக கருதப்படுகிறது.
உயரிய நட்பு எத்தன்மையானது என்பதை அய்யன் திருவள்ளுவர் தன் குறட்பாக்களில் தெளிவாக வரயறை செய்திருக்கிறார்.


                      நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
                      மேற்சென்று இடித்தார் பொறுட்டு .
                                                                                             -- குறள் 784


மகிழ்ச்சி மிகுந்த காலங்களில் சிரித்துப்பேசி விளையாடுவது மட்டுமல்ல நட்பு. நண்பன் திசை தவறி பயணிக்கும்போது அவனை இடித்துரைப்பதே நட்பிற்கான இலக்கணம் என்கிறார் வள்ளுவர். இன்றைய சூழலில் இதுபோன்றவொரு நட்பைக் காண்பதரிது. என்னைப் பொறுத்தவரை நான் பெற்ற நட்புகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் வலு பெற்றருந்தபோதும் அனேக நட்புகள் ரயில் சினேகமாகவே முடிந்திருக்கின்றன.
பிறந்து வளர்ந்த குக்கிராமத்தைவிட்டு கல்விக்காக நகரம் நோக்கி நகரும்போது --
நான் சந்திக்க நேர்ந்த பிரிவு !
பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் சேர பெருநகரம் நோக்கிய நகரும் போது --
அப்போது நான் சந்திக்க நேர்ந்த பிரிவு !
கல்லூரிப்படிப்பு முடிந்து அரசுப் பணியில் சேர இடம்பெயரும்போது --
அப்போது நான் சந்தித்த பிரிவு !
பணிச்சூழலில் பல்வேறு பெரு நகரங்களுக்கு குடும்பத்தோடு இடம் பெயரும்போது --
மீண்டும் சந்திக்கநேர்ந்த பிரிவு !
இப்படி பல்வேறு சூழல்களில் எனக்கு கிடைத்த நட்புக்கள் தீரதபிரிவுகளைச் சந்திக்கவேண்டியிருந்தன. அந்நாளில் கைபேசியின் சூட்சமம் அறியப்படாதிருந்த காலம்.
இருந்தபோதிலும் ஒவ்வொரு மாறுபட்ட சூழலிலும் கணிசமான புதியப்புதிய நட்புகளைப் பெறநேர்ந்தது. ஏரத்தாழ நாற்பதுக்கு மேற்பட்ட ஆண்டு அரசுப்பணியில் எனக்கு கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் அபூர்பவமானவை. என் எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதுமே எவர்க்கும் தீங்கு நேரா வழியில் பயணித்ததால் என் வாழ்வில்
நான் என்றுமே சங்கடமான சந்தர்ப்பங்களை சந்திக்க நேர்ந்ததில்லை. ஒவ்வொருமுறையும் நண்பர்களைப் பிரிய நேரும்போது அந்நாளில் அஞ்சல்த்துறை மட்டுமே எங்கள் நட்புக்கு நீர் வார்த்தது. கடிதங்களைப் பெறுவதில் வாரக்கணக்கில் தாமதம் நேரிட்ட போதும் காலைவேளைகளில் போஸ்ட்மேனை காணும்போது ஏற்படும் களிப்பு அளவிற்கறியது. வெகுகாலம் ஒருவரையொருவர் பார்த்திராமல் நட்பு பாராட்டிய என் இரண்டு பேனா நண்பர்களையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.
நான் பெரிதும் விரும்பிப்பணியாற்றிய தொழில்நுட்பம் சார்ந்த அலுவலில் என்றுமே வேறுவிதமான எண்ணங்களுக்கு இடமளித்ததில்லை.அதனாலேயே நான் பெற்ற நட்புக்களுக்கோ வேற்றுச் சிந்தனைகளுக்கோஎன்னால் நேரம் ஒதுக்க இயலாமற் போய்விட்டது. பணியிலிருந்து முழுதுமாக விடுபட்டபோது பழமையான நட்புகளைத்தேடித்துருவிப் புதிப்பித்துக்கொண்டேன்.இவற்றுக்கெல்லாம் எனக்கு பெரிதும் துணையாயிருந்தது இன்றைய இணையதளமும் என் கைபேசியும்தான். இந்த நேரத்திலும் --
என் நெஞ்சில் நிழலாக நகர்ந்து கொண்டிருக்கிற ஒரு நிகழ்வை சொல்லித்தான் தீரவேண்டும்.
தஞ்சை மாவட்டம் திருத்தருபூண்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் பயின்றபோது நான் பெற்றிருந்த நண்பர்களில் தலையாயவன் ஹெச் .கமால் பாட்சா.
என்னுடைய எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் அந் நாளில் தீனி போட்டவன். நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்தவனும் அவனே. ஒரு கலகட்டத்தில் புறசூழல்களால் நான் சந்திக்க நேர்ந்த இடமாற்றம் எங்களிடையே மிகப்பெரிய இடைவெளியைத் ஏற்படுத்தி விட்டது. அவனுடைய தகப்பனார் திருத்தருப்பூண்டி நகரின் முக்கிய கடைவீதியில் நகைக்கடையொன்றை நடத்தி வந்தார்.பின்நாளில் நண்பனைக் காணவேண்டும் பேசவேண்டும் என்ற எண்ணங்கள் மேலிடவே தொடர்பு கொள்ள சகல வழிகளையும் ஆராய்ந்தேன். நேராக சென்று பார்க்க போதுமான பொறுமையோ தெளிவோ ஏற்பட்டிருக்கவில்லை. ஒரு நாள் இரவு முழுதும் முயன்று இரவு ஒரு மணியளவில் இணையதளத்தின் உதவியோடு நண்பனின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்தேன்.
ஆர்க்மிடீஸ் தண்ணீர்த் தொட்டியில் குளிக்கும்போது பொருள்களின் பருமன் குறித்த தத்துவத்தின் ஆதாரத்தை உணரநேர்ந்து யுரேகா யுரேகா என்று மகிழ்ச்சிப்பெருக்கில் வீதிகளில் ஓடியது பற்றி படித்திருக்கிறேன். அது போன்ற ஒருகளிப்பையும் கர்வத்தையும் ஒருசேர அந்த கணத்தில் நான் பெற நேர்ந்தது. ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம் !  நடு நிசியில் எனக்கேற்பட்ட மகிழ்ச்சியை என் குடும்பத்தினரோடு பகிர்ந்து கொள்ள இயலாமற் போய் விட்டது. இருந்த போதிலும் இரவு முழுதும் என் நினைவுகள் பெரிதும் பின்னோக்கியே சுழன்று கொண்டிருந்தன. நான் கண்டு பிடித்த தொலைபேசி எண் நகைக்கடையில் இருந்திருக்கவேண்டும். அதன் பொருட்டு மேலும் சில மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பொழுது புலர்ந்ததும் எனக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டேன்.
காலை மணி ஒன்பதை நெருங்கிற்று.
நண்பனின் குரலைக் கேட்க தொலைபேசியில் எண்களை சுழற்றினேன். அடுத்த முனையில் தொலைபேசி கதறுவது கேட்கிறது.
ஹலோ ! திருத்துரைப்பூண்டி. நீங்கள்..
நண்பனின் குரலாக தெரிகிறதே .
சென்னையிலிருந்து பாண்டியன்.கமால் பாட்சாவோட பேசணும் .
ஒரு கணம் அமைதி நிலவுகிறது.
அவர் காலமாகிவிட்டார்.
மிக உயர்ந்த பாறையொன்றிலிருந்து தடாலென்று சறுக்கி விழுவதைப்போன்ற உணர்வைப் பெருகிறேன்.
நீங்கள்...
நான் அவருடைய சன்
தொலைபேசி என்னையறியாமல் நழுவுகிறது. தொடர்பு துண்டிக்கப்படுகிறது. அடுத்து பல நாட்கள் என் மனம் சமாதானம் அடையவில்லை. பின்னொரு நாளில் திருத்தருபூண்டி சென்று நண்பனின் செல்வங்களோடு அளவளாவி வந்தேன்.அன்பு நண்பனின் அவசரப்பயணம் இன்றும் என்னை பெரிதும் பாதித்திருந்தது.
சுழன்று கொண்டிருந்த வாழ்க்கைச்சக்கரத்தின் ஒவ்வொரு விளிம்புகளிலும் கணிசமான நல்ல நண்பர்களை
நான் பெற்றது உண்டு. இருந்தபோதிலும் சக்கரத்தின் சழற்சியில் இறுகியிருந்த நட்புக்கயிறு அவ்வப்போது தளர்ந்து போனது உண்மைதான்.  இருபதாம் நூற்றாண்டு இறுதியில் ஏற்பட்ட கைபேசியின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி தளர்ந்து போயிருந்த நட்புக்கயிறுகளை
பெரிதும் இறுக்க உதவியிருக்கிறது. அதே சமயம் பக்கத்தில் நிற்போரின் பார்வையை நாம் இழந்து கொண்டிருப்பதும் உண்மை.
இப்போது என் கையிலிருக்கும் கைபேசி -
உலகின் ஒவ்வொரு மூலையில் சிதறி கிடக்கும் என் நட்புகளை உரசிப்பாற்க உதவுகிறது.
ஒரு சில விஷமச்சிந்தனைகளை விடுத்து மனதகுலம் சற்று நிமிர்ந்து பார்க்குமானால் கணக்கிலடங்கா கைபேசியின் பயன்கள் கிடைக்கக்கூடும். இன்றும்என் மனதில் இருக்கும் ஒரே ஏக்கம் --
இந்த கைபேசியின் அசுர வளற்சியைக் காணும் போது அடிமை காலத்தின் விளிம்பில் பிறந்த நான் கொஞ்சம்
தள்ளி பிறந்திருக்கக்கூடாதா.. என்பதுதான்
.

-----------------------------------------------------------
 இடுகை 0030

Labels: , ,