Thursday, 26 May 2011

சின்னகுத்தூசி என்ற ஆயுதம்.



பாண்டியன்ஜி
15 06 1934   -   22  05  2011
சின்னகுத்தூசியார் என்று பத்திரிக்கையாளர்களால் பெரிதும் போற்றப்பட்ட திரு இரா தியாகராஜன் இந்த மாதம்    22 ஆம் தேதி சென்னையில் இயற்கைஎய்தினார்.அவருக்கு வயது எழுபத்தேழு. தன் எழுத்துக்களைத் தவிற அவர் எதையும் விட்டுச் செல்லவில்லை.
திருவாரூரில்1934 ல் பிறந்த தியாகராஜன் பிறப்பிலே பிராமண சமூகத்தைச் சார்ந்திருந்தாலும் பள்ளிநாட்களிலேயே பகுத்தறிவு சிந்தனைகளிலும் திராவிட இயக்கத்திலேயும் தீராத ஈடுபாடு கொண்டவர்.அடிப்படை கல்விக்குப் பிறகு
திருச்சியில் பெரியார் ஆசிரியர் பயிர்ச்சி கல்லூரியில் பயின்ற தியாகராஜன் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றியவர்.இறுதியாக காரைக்குடி அருகிலிருந்த குன்றக்குடியில் குன்றக்குடி அடிகளாரின் பொருப்பிலிருந்த பள்ளியொன்றில் பணியாற்றியபோதுதான் அவர் வாழ்வில் அந்த திருப்பம் நிகழ்ந்தது.
அப்போது திமுக வின் நிரந்தர பாராளமன்ற உருபினராக செயல்பட்டவர் சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்ட ஈ வெ கி சம்பத் அவர்கள்.அன்று திமுக செய்த தவறு தொடர்ந்து ஒருவரை தங்கள் சூழல்களை விட்டு விலகி டெல்லிப்பட்டணத்தில் குடியமர்த்தியதுதான்.அதன் பலனை திமுக அடுத்தடுத்து சந்திக்க நேர்ந்த காலம் .திராவிட பாரம்பரியத்தில் தோன்றிய சம்பத் டெல்லிபட்டணத்தில் காங்கிரஸுடன் குலவி திமுக வை விட்டு நகர முயன்ற போது அண்ணா சிந்திய கண்ணீர் வீணாயிற்று.சம்பத்தின்
தமிழ் தேசிய கட்சி புதிதாக உருவெடுத்தபோது திமுக வில் கலைஞரின் எழுச்சியில் அழுக்காறுற்ற ஒரு சில இரண்டாம் கட்ட தலைவர்கள்(கவிஞர் கண்ணதாசன் உட்பட ) சம்பத்தை பின் தொடர்ந்தனர்.
அப்போது
முன்னதாகவே அறிந்திருந்த தியாக ராஜனின் துணை சம்பத்துக்கு தேவைப்பட்டது. இனிய தமிழில் சொல்ல வந்த கருத்துக்களை தக்க சான்றுடன் நிருவத் தெரிந்த தியாக ராஜனும் ஆசிரியர் பணியை உதறி அரசியலுக்குள் நுழைந்தார்.
அறுபதுகளில் நான் பயின்ற அரசு மேல் நிலைப்பள்ளியில் சில காலம் தலைமை ஆசிரியராக பணி செய்த எழுத்தாளர் பி சி கணேசன் சம்பத்தின் தமிழ்தேசிய கட்சியில் இணைந்தார். அப்போது திருவாரூரில் அவர் துவக்கிய மாதவி என்ற இதழுக்கு தியாகராஜன் ஆசிரியரானார்.
திராவிட சிந்தனைகளிலிருந்து வெகுதூரம் விலகிப்போன சம்பத் புதிய இயக்கத்தை செழிப்புர கட்டிக்காத்திட போதுமான திறனின்றி ஒரு கட்டத்தில் காதல் கொண்ட காங்கிரஸியக்கத்தில் கலந்து போனார்.இன்று அவரின் வித்து தந்தை பெரியாரின் பேரன் காங்கிரசில் முளைத்திருப்பதற்கான காரணமும் அதுதான்.
சம்பத்தின் முடிவை ஏற்க மனங்கொள்ளாத தியாகராஜன் திமுக வில் கலைஞருக்குத் துணையானார்.ஏறதாழ அறுபது வருட திராவிட இயக்க வரலாற்றை அணு அணுவாக அறிந்திருந்த தியாகராஜன் கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாக கலைஞரின் அரசியல் ஆயுதமாக திகழ்ந்தவர்.தமிழ் தேசிய கட்சியின் தமிழ் செய்தி, மாதவி இதழ்களைத் தொடர்ந்து நவசக்தி,நாத்திகம்,அலை ஓசை ,முரசொலி , எதிரொலி போன்ற இதழ்களிலும் முக்கிய பொறுப்பிலிருந்தவர்.அவ்வப்போது குமுதம் ,ஜூனியர் விகடன் ,நக்கீரன் இதழ்களிலும் தொடர் விமர்சனங்கள் எழுதியவர்.
கொக்கிரகுளம் சுல்த்தான் முகமது ,ஆர் .ஏ மஜாட்டோ ,திட்டக்குடி அனீப் போன்ற பல் வேறு வினோதமான பெயர்களில் கட்டுரைகள் எழுதினாலும் அவர் கட்டுரைகளை கூர்ந்து கவனித்தால் அவர் இலக்கு ஒன்றாகவே இருப்பதை உணரக்கூடும்.
திராவிட கழகத்தில் தந்தை பெரியாருக்கு துணையாயிருந்த பழம்பெரும் தலைவர் குருசாமி குத்தூசி என்ற ஒரு இதழை நடத்திய நேரம். குருசாமியின் எழுத்தில் ஈர்க்கப்பட்ட  தியாகராஜன் சின்னகுத்தூசியானார்.
அக்ராகாரத்து அதிசயம் என்று பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட எழுத்தாளர்    வ ரா வுக்குப்பிறகு கலைஞரால் போற்றப்பட்ட அதிசயம் சின்ன குத்துசியார்.
திராவிட இயக்கத்தின் அறுபது ஆண்டு கால நிகழ்வுகளை தன் விரல்நுனியில் வைத்திருந்த சின்ன குத்தூசியார் எழுத்துக்கு இடையூராக உறவுகளையோ வாரிசுகளையோ எதனையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஆமாம் அவர் இறுதிவரை திருமணம் எதனையும் செய்து கொள்ளாமல் தன்னந்தனியனாகவே வாழ்ந்தார்.இப்போது அவர் நடந்து வந்த காலடிச்சுவடுகள் மட்டுமே விஞ்சியிருக்கிறது.இந்த சட்டமன்ற தேர்தல்களில்
கலைஞரின் இரங்கல் !
மாற்றங்கள் வேண்டி தமிழக மக்கள் அளித்த தீர்ப்பு கலைஞருக்கோ அவர்தம் கழகத்துக்கோ ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பல்ல.சின்னகுத்தூசியாரின் இழப்பே பேரிழப்பு.

கையில் ஒளிக்கீற்றுடன் திராவிட இயக்கங்களுக்கு துணையாக தன்னந்தனியனாக பயணம் செய்த சின்ன குத்தூசியாருக்கு அவரது இறுதி காலத்தில் ஒரு தனயனைப்  போல காத்து நின்ற நக்கீரன் கோபாலின் செயல்     நெஞ்சை     நெகிழவைக்கிறது.   அவரது பணியே சின்னகுத்தூசியாரின்      வரலாற்றின்    முடிவுரையாக       இருக்கும்.

இடுகை 0059
எல்லா விஷயங்கள் பற்றியும் விமர்சிக்கிறீர்கள். ஆனால் தி.க. - தி.மு.க. சம்பந்தப்பட்டது என்றால் மட்டும் மவுனம் சாதிக்கிறீர்களே; இது எப்படி சரியாகும்?
தி.க., தி.மு.க. ஆகிய இரு இயக்கங்கள் பற்றியும் ஓச்சல், ஒழிச்சல் இல்லாமல் கேலி செய்ய, கண்டிக்க, தாக்கிட என்று எத்தனையோ பத்திரிகைகள் இருக்கின்றன. எத்தனை எத்தனையோ எழுத்தாளர் பெரு மக்களும் இருக்கிறார்கள்.ஓரிரு சந்தர்ப்பங்களில் தி.க.வும், தி.மு.க.வுமே ஒன்றையொன்று தாக்கி விமர்சனப் போர் நடத்து கின்றன. என்னைப் பொறுத்தவரையில் தி.க. - தி.மு.க., ஆகிய இரு அமைப்புகள் பற்றியும் எத்தனைப் பேர் எத்தனைவிதமான குறைகளைக் கூறினாலும், அந்த இரு அமைப்புகள் இருக்கும் வரையில்தான் சமூக சீர்திருத் தத்துக்கான காரியங்கள் தொடர்ந்து நடைபெறும். அந்த இரு அமைப்புகளும் இல்லாவிட்டால் இங்கே சாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு போன்றவைகளை இந்த அளவுக்கு அழுத்தமாக வலியுறுத்தி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்கக் கூடிய அமைப்புகள் வேறு எதுவும் என் கண்ணுக்குப்படவில்லை. ஆகவே தி.க., தி.மு.க., வன்முறைகளைப் பெரிதுபடுத்திப் பார்த்து, அவைகளை அழித்துவிடத் துடிக்கும் பேனா வீரர்கள் அணியில் இடம் பெற நான் விரும்பவில்லை. எந்த ஒரு காரணத்துக்காகவும் அவர்களைக் கடுமையாக விமர்சிக்கவும் நான் தயாராகவில்லை
காலச்சுவடு இதழில் சின்னகுத்தூசி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home