சத்யசாயி பாபா
பாண்டியன்ஜி
பகவான் என்று கணிசமான மேல்தட்டு மக்களிடையேயும் நடுத்தர வர்கத்தினரிடையேயும் பெரிதும் நம்பப்பட்ட சத்யசாயி பாபா இயற்கை எய்திவிட்டார்.
60 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்த ஆன்மீகப் பயணம் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
2011 ஏப்ரல் மாதம் 24 ஆம் நாள் 03 - 30 மணியளவில் அவர் உயிர் பிரிந்த செய்தி தொலைக்காட்சி மற்றும் இணயம் வழியாக தெரித்து உலகெங்கும் சிதறியது.
ஏறத்தாழ 180 தேசங்களுக்கு மேலாக பரவிக்கிடக்கிற அவருடை சீடர்கள் பெரிதும் நிலை குலைந்து போக நேரிட்டிருக்கிறது.அவர் தோன்றிய ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டம் புட்டப்பர்த்தி இன்று கண்ணீர்கடலில் குளிக்க நேரிட்டிருக்கிறது.
1926 நவம்பர் மாதம் 23 ஆம் நாள்ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த புட்டப்பர்த்தி என்ற குக்கிராமத்தில் ஈசுவரம்மா பெத்த வெங்கம்ம ராசு தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர்தான் சத்யநாராயண ராசு என்ற சத்ய சாயிபாபா.தனது எட்டாவது வயதிலேயே சிறுவன் சத்ய நாராயணா தான் பயணிக்கப்போகிற திசையை உணர்ந்து கொண்டானாம்.அவன் பிறந்த அந்த குக்கிராமம் அவனுடைய ஆன்மீகப்பயணத்தில் பின்நாளில் சகலவசதிகளும் பெற்று இந்த உலகே திரும்பிப் பார்க்க நேரிடும் என்ற தகவல் அன்று எவரும் அறிந்திருக்க வாய்ப்பிலை.
மராட்டிய மாநிலத்தில் பிறந்து புகழுடம்பு பெற்ற ஆன்மீக முனி சீரடி சாய் பாபாவின் வழித்தோன்றல் என்றும் சிவன் சக்தி ஆகியோரின் அவதாரமே தான்தான் என்றும் பறைசாற்றிக்கொண்ட பாபா தன் ஆன்மீக பயணத்தில் சந்திக்க நேர்ந்த சறுக்கல்கள் ஏராளம். மக்களிடையே மாயவித்தைகளை நிகழ்த்தி மக்களை ஈர்க்க நேர்ந்தபோது தமிழகம் கேரளம்சார்ந்த பகுத்தறிவு இயக்கங்களின் பலமான எதிர்ப்பை சந்திக்க நேரிட்டிருக்கிறது.
1933 ல் அவரது ஆசிரமத்திலேயே அவருக்கெதிரான ஒரு கொலை முயற்சியையும் அவர் முறியடிக்க வேண்டியிருந்தது. இத்தனையும் தாண்டி இன்று கணிசமான மக்கள் மனதில் இடம் பிடித்த பாபாவின் வளர்ச்சி மறுக்கமுடியாத உண்மை.
பாபாவின் ஆன்மீகம் முன்னமே அறியப்பட்டிருந்தாலும் சென்ற வருடம் சென்னை திருவான்மியூரில் ஒரு மாலைப்பொழுதில் நிகழ்ந்த ஆன்மீக வேள்வியில் பாபாவைக் காணுகின்ற வாய்ப்பு பெற்றேன்.கணிசமான மேல் தட்டு வர்கம் தரையிலே கால்பதித்திருந்ததை காண முடிந்தது.இடைப்பட்ட நடுத்தர வர்கமோ அந்தவேள்வியில் பங்கெடுப்பதை கவுரவமாக எண்ணியதை புரிந்து கொள்ள முடிந்தது.அன்னிய தேசங்களில் செல்வச்செழிப்பில் அலுத்துப்போன ஒரு கூட்டமும் ஆங்காங்கே காணப்பட்டது.அத்தனைபேரையும் பின்னுக்கு இழுத்த பாபாவை பார்க்கிறேன்.
வாட்டசாட்டமான அய்ந்தடி உயரம்.பழுத்துகுலுங்கும் உயர்ரக மாம்பழத்தின் மஞ்சள் நிறம் இத்தனை வயதிலும் தலைக்கு கவசமாக அமைந்த அந்தபரட்டை முடி நிமிர்ந்த நேரான பார்வை உயர்ரக வழவழ துணியில் நீலவண்ண நீண்ட முழு அங்கி அதேவண்ணத்தில் வடிவமைக்கப்பெற்ற நீல வண்ண படகு கார்
பாபா ஒரு கவர்ச்சிமிக்க மனிதர் என்பதில் எந்த அய்யமும் இல்லை.
அத்தனை பெரிய ஆன்மீக திறளில் சென்னையின் சாமான்ய குடிமகன் எவரையும் நான் காணவில்லை.செல்வச்செழிப்பில் வெட்கி விலகியிருக்கக்கூடும் என்றே எண்ணினேன்.
பல நேரங்களில் நடுத்தரவர்க நண்பர்களை காணுகின்றபோது ஒவ்வொருவரும் பாபாவின் பரம பக்தர் என்று பொருமையாக சொல்லிக்கொள்வதை கேட்டிருக்கிறேன்.வீடுகளில் பாபாவின் தோற்றத்தையும் ஆங்காங்கே பாபாவின் அடையாளங்களையும் ஒட்டி பூரிப்பு பெற்றதை உணர்ந்திருக்கிறேன்.அதைத்தாண்டி பாபாவின் உபதேசங்கள் எதனையும் அவர்கள் அறிந்ததாக நினைவில்லை. அந்த கவர்ச்சிமிக்க மனிதரின் அடையாளங்களை ஏற்படுத்திக்கொண்டு அவர் பின்னால் அணிவகுப்பதையே மகிழ்வாக கொண்டிருந்ததை உணர முடிந்தது.
ஏறத்தாழ 50 களில் தமிழ் மண்ணில் நிரம்ப பேசப்பட்டவர் இந்த புட்டப்பர்த்தி சத்ய சாயி பாபா.அதே காலங்களில் இந்த மண்ணில் எழுச்சி பெற்ற பகுத்தறிவு இயக்கங்கள் பாபாவின் கூற்றுகளை தொடர்ந்துவிமர்சித்து வந்ததையும் அறிந்திருக்கிறேன்.
அப்போதே என் சிந்தனைகளில் பகுத்தறிவு விதைகள் கலந்துவிட்டதாலோ என்னவோ பாபா நிகழ்த்திய பல்வேறு மாயாஜால வித்தைகள் எதனையும் என்னால் ரசிக்க இயலாமல் போயிற்று.அவரைபற்றிய எதிரான விமர்சனங்களில் உண்மையிருக்கக்கூடும் என்று நம்பியவன் நம்புகிறவன் நான். இருந்தபோதிலும் பாபாவின் அடுத்த பக்கம் மட்டுமே என் கண்களுக்கு தெளிவாக புலப்படுகிறது.அவரது ஆன்மீகப்பயணத்தில் அவர் சேர்த்துக் குவித்த செல்வங்களும் அவரைதொடரும் அணிவகுப்பும்.... என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
பாபாவின் சொல்வங்கள் அனைத்தும் இந்த மண்ணின் சாமான்ய மக்களிடமிருந்து பெருமளவில் நேரடியாகவோ மறைமுகமாகவோ பெறப்பட்டது என்று நான் கருதவில்லை.
அவர்பால் அன்பு செலுத்தும் பணம்மிகுந்த வர்கத்திடனிருந்தும் அன்னியமண்ணில் அலுப்புற்ற செல்வர்களிடமிருந்தும் மட்டுமே பெற்றிருக்கக்கூடும் என்றே கருதுகிறேன்.1954 லேயே புட்டபர்த்தியில் முதல் ஏழை எளியவர்களுக்கான பொது மருத்துவமனையை ஏற்படுத்தி இந்த மண் பயனுற பல்வேறு திட்டங்களை பாபா துவக்கிவிட்டார் என்றே சொல்லவேண்டும்.இன்று அவர் நினைவு கூரும் பல்வேறு நலத்திட்ங்கள் நாடெங்கும் இறைந்து கிடக்கின்றன.ஒரு மக்கள் அரசுஆற்றத் திணருகிற எத்தனை பணிகளை எத்தனை எளிதாக முடித்திருக்கிறார் பாபா.தனது 84 வது வயதில் இயற்கை எய்திய பாபா வாரிசு என்று எவரையும் விட்டுச் செல்ல வில்லை.மாறாக மாண்டியா மாவட்டத்தில் மறுபடியும் பிறப்பேன் என்று அறிவித்துவிட்டு சென்றிருக்கிறார்.
உலகெங்கும் போற்றப்படுகிற அந்த அவதாரத்தை தரிசிக்க இன்று இந்த நாடே காத்துக்கொண்டிருக்கிறது.அந்த தலைவனுக்கு அஞ்சலி செலுத்த கட்சி பேதமின்றி வரிசை வரிசையாய் கண்ணீருடன் காத்திருப்பதை பார்க்கிறேன்.
அந்த மாமனிதருக்கு தீராத குறையொன்று இருந்திருக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை வந்த பாபா தன் எண்ணங்களுக்கு முற்றிலும் மாறான நாத்தீகவாதியான தமிழக முதல்வர் கலைஞரை அவரது இல்லத்திலேயே சந்திக்கிறார்.அடுத்து --
நொடுங்காலமாக தொய்வுற்றிருக்கும் ஆந்திரா தமிழ்நாடு கிருஷ்ணா கால்வாய் திட்டத்தை ஏறத்தாழ 200 கோடிக்கு மேலாக செலவிட்டு சென்னை மக்களின் நீர்பசிக்கு நிறைவு கண்டதன் மூலம் தமிழகமண்ணிலும் பாபா வேர் பரப்ப வழி செய்திருக்கிறார்.
மனிதனுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் மகத்தான சேவை. மக்கள் நலப்பணிகளில் ஆன்மீகவாதிகளும் அரசியல் வாதிகளும் இணைவதில் தவறேதும் இல்லை.--
என்ற முதல்வரின் கண்கள் கலங்குகிறது.
பகுத்தறிவாளர் நெஞ்சங்களிலும் பாபா எத்தனை லாவகமாக நுழைந்து விட்டார்.
பாபாவின் மக்கள் சேவையே நாளை பாபாவை நினைவு கூரப்போகிறது. அதுவன்றி அவரது போதனைகளோ அவரைச்சூழ்ந்திருந்த பக்தகோடிகளோ அல்ல .
இடுகை 0050
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home