Monday 28 June 2010

லட்சுமியை மிஞ்சிய சரஸ்வதி

( தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை ) தமிழகத்தின் கல்விக்கூடங்கள் அனைத்தும் வணிகமயமாகி பல வருடங்களாயிற்று. அரசியலைவிட மிகுந்த பாதுகாப்பு மிக்கதாகவும் எளிதாக செல்வங்கொழிக்கும் சுரங்கங்களாகவும் கல்விக்கூடங்கள் திகழ்வதை தமிழக அரசியல்வாதிகள்
மிக நன்றாகவே தெரிந்து கொண்டுவிட்டனர். ஊழலில் விளைந்த பணமும் அரசியலில் கிடைத்த அபரிதமான செல்வாக்கும் இணைந்து கல்விக்கூடங்களைத் துவக்குவது இவர்களுக்கு எளிதாகவே இருந்தது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் வெறும் பத்துக்கு பத்து என்ற அளவு அறைகளில் ஐந்தாறு இருக்கைகளுடன் துவக்கப்பெற்ற கல்விக்கூடங்கள் நடுத்தர வர்கத்தின் உழைப்பைச் சுரண்டி பிரமிப்பூட்டும் கட்டிடங்களுடன் கல்லூரிகளாக உயர்ந்திருப்பதை
இன்று காண முடிகிறது. பணம் ஒன்றையே தலையாய குறிக்கோளாக கொண்ட இந்த கல்விக்கூடங்கள் பெருமளவும்
அரசு நிர்ணியிக்கின்ற குறைந்தபட்ச தர நிலையை என்றும் எட்டியதேயில்லை. போக்குவரத்து , நோட்டுபுத்தகங்கள்
சீருடை என்று ஒவ்வொரு நிலைகளிலும் நடுத்தர வர்கத்தின் உழைப்பையே வெகுவாக சுரண்டி வந்திருக்கின்றனர். தேர்வுகளில் 100 விழுக்காடு தேர்ச்சியைக் காட்ட இந்த கல்வி நிறுவனங்கள் நிகழ்த்துகின்ற தில்லுமுல்லுகள் இந்த நாட்டின் எதிர் காலத்தையே அசைத்துப் பார்க்கும் முயற்சி என்றே கருதுகிறேன்.
மக்கள் தொகை பெருக பெருக கல்வி நிலையங்களின் தேவைகள் அதிகரிக்கின்றன. இன்றைய சூழலில் அரசு மட்டுமே அனைத்தையும் ஈடு செய்ய இயலாது. தனியார் கல்விக்கூடங்களின் தேவை அதிகரிக்கும் போது தங்கள் போக்குக்கேற்ப கல்விக்கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தியே வந்திருக்கின்றனர். அவ்வப்போது இவைகளை சீர்தூக்கி
கட்டணங்களை சீரமைக்க அரசு தவறியே வந்திருக்கிறது. இவைகள் அனைத்தையும் இந்த நடுத்தர வர்கம் நன்றாகவே உணர்ந்திருக்கிறது. இருப்பினும் இதற்கு மாறாக சிந்தனையைத் திருப்ப ஒருபோதும் முயற்சித்ததில்லை.
நாடு அடிமையுற்றிருந்தபோது சுதந்திரம் கிடைத்துவிட்டால் சகலமும் சரியாகும் என்று பாரதி நம்பினார்.அது முழுதும்
பொய்த்துப் போயிற்று. அதற்கு மாறாக அடிமையுற்றிருந்த நாட்டின் மக்களையெண்ணி அஞ்சியஞ்சி சாவார் என்ற அவர் கூற்று இன்று உண்மையாயிற்று.
ஜனநாயகம் கோலோச்சும் தேசங்களில் பெரிதும் மக்களே விழுப்புணர்ச்சி மிக்கவர்களாக இருத்தல் வேண்டும். அப்போது மட்டுமே அரசின் ஆக்கபூர்வமான திட்டங்கள் அடித்தளத்து மக்களைச் சென்றடையும். அரசின் திட்டங்கள் தாறுமாறாக செல்லும்போது மக்களின் எழுச்சி மட்டுமே கட்டுப்படுத்த இயலும். அதுவன்றி அரசின் நல திட்டங்கள் அனைத்தும் தாமாகவே அடித்தட்டு மக்களைச் சென்றடையும் என்று எண்ணுவது அறியாமையே.
சமீபத்திய நாட்களில் தமிழக கல்வித்துறை வெகு நாட்களாக எதிர் பார்க்கப்பட்ட சில முடிவுகளை செயல் படுத்த துவங்கியிருக்கிறது.
இவற்றில் –
சமச்சீர் கல்வித்திட்டத்தையும் தனியார் கல்விக்கட்டண சீரமைப்பையும் குறிப்பாக குறிப்பிடத் தோன்றுகிறது. இவை
அனைத்தும் கல்வி வியாபாரிகளிடமிருந்து பல கட்டத்தடைகளை கடந்து இறுதி நிலைக்கு வந்திருக்கிறது. கல்விக்கட்டணம் என்ற பெயரில் இந்த நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை சாதாரணமானதல்ல. இந்த பகற் கொள்ளையை எதிர்த்து குரல் கொடுத்த அரசியல் கட்சிகளும் மக்கள் உரிமைக்காக உயிர் வாழும் நிறுவனங்களும் ஏனோ இன்று வாய் மூடி மெளனம் சாதிப்பதையே காணமுடிகிறது.
அதே சமயம் –
தனியார் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு அழுத்தமான முடிவு எடுத்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.
அரசின் குரலை மீறி தங்கள் எண்ணப்படியே கட்டணங்களைத் தொடர்வது என்று தீர்மானித்து விட்டார்கள்.
இரண்டொரு நாட்களுக்கு முன் நாகப்பட்டினம் தஞ்சாவூர் பெரம்பலூர் மாவட்டங்களுக்கு சாதாரணமாக சென்று
வர நேர்ந்தது. நகரில் உள்ள அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் இந்த பகற் கொள்ளையை எந்த சான்றும்
வைக்காமல் தொடர்ந்து நிகழ்த்தி வருவதை கண்டு அதிர்ச்சியுற்றேன். ஒவ்வொரு பள்ளியிலும் மழலையரைச் சேர்க்க
குறைந்த பட்சம் 14 முதல்15 ஆயிரம் வரை எந்த சான்றுச்சீட்டுமின்றி வசூலிப்பதைக் காண முடிந்நது. இயலாதவர்கள் விலகல் சான்றிதழை பெற்றுகொள்ளலாம் என்பதை திமிரோடு கூறுவதைக் காண முடிந்தது. தமிழக அரசின் உத்தரவுகளையோ நீதிமன்றம் அறிவித்த தீர்ப்புகளையோ அவர்கள் எண்ணிப் பார்த்ததாக தெரியவில்லை.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய செய்தி –
அரசின் மிக உயர்ந்த பதவியில் இருப்போர் , அரசியலில் அங்கம் வகிப்போர் , சமூக நீதிக்காக தொடர்ந்து குரல் எழுப்புவோர் அனைவருமே ஏதோ ஒரு இயலாமையைக் கருத்தில் கொண்டு வாய் மூடி கைகட்டி எந்தவித சான்றுச்சீட்டும் பெறாமல் கொள்ளைப்பணத்தை கொள்ளைக்காரர்களிடம் தாமே ஒப்படைப்பதை ஒவ்வொரு நகரிலும்
காண முடிந்நது. இந்த அரசு தீட்டுகின்ற திட்டங்களுக்கு ஒரு கல்லைக்கூட எடுத்துவைக்கத் துணியாத தமிழ் மக்களுக்கு இந்த அரசின் செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை வைக்க ஒருபோதும் அருகதை இல்லை என்றே தோன்றுகிறது. அரசின் செயல் பாடுகளையும் அரசு ஊழியர்களின் சலனங்களையும் பல்வேறு சந்தர்பங்களில் தாறு மாறாக விமர்சிப்பதை விடுத்து தவறுகளை தட்டிக் கேட்கின்ற நிலை மிகுதியாகும்போது மட்டுமே கொள்ளைகள் தடுக்கப்படும். ஊழல்கள் குறையக்கூடும்.அரசின் நலத்திட்டங்கள் அடித்தட்டு மக்களைச் சென்றடையும்.
இடுகை 0024

Sunday 27 June 2010

செம்மொழி மாநாடு சிறக்கட்டும்


செம்மொழி மாநாடு சிறக்கட்டும்
————————————-
பாண்டியன்ஜி
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக் கொண்டாட்டங்கள் கோவையில் தொடங்கி விட்டன. உலகெங்கும் பரவிக் கிடக்கின்ற தமிழினம் புத்துணர்ச்சி
பெற்று கோவை நகரில் சங்கமித்திருக்கின்றன.வரலாறு காணாத வசதிகளை கலைஞர் அரசு செய்திருப்பதை காணமுடிகிறது.
சின்னஞ் சிறு வயதில் தமிழுக்காக கொடி தூக்கிய (திருக்குவளையிலிருந்து துண்டோடு வந்தவர் எனபோரின் இயலாமையை எண்ணிப்பார்க்கிறேன் )
கலைஞரின் கனவுகள் அனைத்தும் ஏறத் தாழ நிறைவேறி விட்டதாகவே கருதலாம்.
எண்ணிப்பார்க்கும் போது மிகுதியாக வியப்பே மேலிடுகிறது.
அன்னை தமிழ் எத்தனையெத்தனை எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும் ஒவ்வொரு கால கட்டத்திலும் மாறி மாறி சந்தித்திருக்கிறது.
எந்தவொரு தனி மனிதனும் ஒரு மொழியின் வளற்சியை உயர்த்திடவோ தாழ்த்திடவோ இயலாது என்று கருதப்பட்டாலும் கடந்துபோன காலங்களில்
நிகழ்ந்த நிகழ்வுகள் கற்பிப்பதென்ன? மொழிபால் பற்று கொண்ட மன்னர்கள் எழுச்சியுறும் போது மொழி வளற்சியும் ஏற்றம் பெற்றதை காணமுடிந்தது.
சேர சோழ பாண்டிய மன்னர்கள் காலங்களில் தமிழ் மொழியின் உயர்வு சிறப்பானதொன்று. செல்லறித்துப்போன தமிழ்ச்சுவடிகளை தேடிக்கொணர்ந்து
புதுப்பித்தது ராஜராஜ சோழன்தானே. சமஸ்கிருத மொழி இந்த மண்ணில் ஒரு சமயம் உயர்வு பெற்றது பல்லவர் காலத்தில்தாமே.அடுத்து எத்தனையோ
அறிஞர் பெருமக்கள் கொடிய வருமையிலும் அயராது உழைத்து அன்னை தமிழுக்கு அணி சேர்த்ததை மறந்திட இயலாது..அடிமையுற்றிருந்த மண்ணில் மக்களை எழுச்சியுற மகாகவி பாரதி தமிழைத்தானே கையில் எடுத்தார். பின்நாளில் -
சமூக நீதியை முன்னிருத்தி எழுச்சியுற்ற திராவிட இயக்கங்கள் தமிழ் வளற்சிக்கு ஆற்றிய பணி மகத்தானவை. எழுத்தும் பேச்சும் எழுச்சியுற்றது அறிஞர் அண்ணா காலத்தில்தானே. சரித்திரம் அறியாத முண்டங்களும் ஜாதீயவாதிகளும் மட்டுமே இன்றும் தமிழுக்காக திராவிட இயக்கங்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று ஓலமிடுவதைக் காணமுடியும்.
ஊரே கூடி தேரிழுக்கும்போது ஓரத்தில் நின்று ஒப்பாரி வைக்கும் இவர்களை என்ன செய்வது?
இணையதளங்களில் இலவசமாக இடம் கிடைக்கிறதென்று அவர்கள் சொல்லுவது போன்றே கிறுக்கித் தள்ளும் கிறுக்கர்களை என்ன செய்வது?
தமிழ்பால் குடித்து வளர்ந்து இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கிற இவர்களின் மொழிப்பற்றை என்ன சொல்வது?
கோவையில் கூடியிருக்கும் கூட்டம் தமிழ் இன்னும்….இன்னும் மேலுயர வழி காட்டட்டும்.
தமிழ் இனத்தின் கனவு முழுமையாக நிறைவேரட்டும்.
இடுகை 0023

Labels:

Friday 25 June 2010

வள்ளுவராண்டு 2041

தை திங்கள் முதல் நாள் – வள்ளுவராண்டு 2041
——————————————————————
பொழுது புலர்ந்தது .கதிரவன் மெல்ல மெல்ல உறக்கத்திலிருந்து கண்விழிக்கிறான்.
வெகுதூரத்தில் தைமகள் யாரையோ கைபிடித்து அழைத்து வருவதை காண்கிறேன்.மெல்ல மெல்ல அருகில் வந்த தைமகள் என் குழப்பமறிந்து வியப்புடன் வினவுகிறாள் .’ இவரை தெரிய வில்லையா உங்களுக்கு ?.’
கைகளை பிசைந்தவாறு யாரம்மா இவர் .முற்றிலும் புதியவராய் தோன்றுகிராறே. என்கிறேன்.
இவறோன்றும் புதியவரில்லை.எண்பது ஆண்டுகளாக தன்னந்தனியாக வரும் இவரை நம் பிள்ளைகலைஞர்தான் இன்று என்னோடு அனுப்பி வைத்தார்.
ஏறத் தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்னால் மறைமலை அடிகள் தலைமையில் கூடிய தமிழ் அறிஞர்குழு கிருஸ்து பிறப்பிற்கு முப்பது ஆண்டுகளுக்குமுன் பிறந்த மூத்த குடிமகன் வள்ளுவன் பெயர்சூட்டி தமிழர்தம்
ஆண்டினை இவ்வுலகுக்கு பறைசாற்றினர் .தொடர்ந்து வந்த எத்தனையோ தமிழறிஞர்கள் முயன்றும் தகுந்த தகுதி தமிழாண்டுக்கு கிடைக்க வில்லை.இன்றோ நம் பிள்ளை கலைஞர் கையொப்பமிட்டு என் கைபிடித்து என்னோடு வர வழி செய்தார்.காக்க வேண்டியது உம் பொறுப்பு ! என்ற தைமகள் வயல் வழியே விரைந்தாள் .
அத்தனையும் உண்மை .
1921- ல் திரு வி க உள்ளிட்ட தமிழறிஞர்கள் தமிழ் மேதை மறைமலை அடிகள் தலைமையில் ஒன்று கூடி
கிருஸ்து பிறப்பிற்கு முப்பது ஆண்டுக்கு முன் பிறந்த வள்ளுவன் வயதை கணக்கிட்டு திருவள்ளுவராண்டு துவக்கத்தை அறிவித்தார்கள்.
2006 – ல் அரசு ஏற்று அரசு அலுவலகங்களில் நடைமுறைக்கு வந்தது.இன்று 2010 – ல் கலைஞர் கையெழுத்திட்ட சட்டவடிவின் மூலம் தமிழர்தம் தகுதி உயர்த்தப்பட்டிருக்கிறது.
தைத்திருநாளோடு தமிழ்ப்புத்தாண்டை கொண்டாடுவோம் . அனைவருக்கும் பொங்கல் , புத்தாண்டு வாழ்த்துக்களை வேர்கள் தெரிவித்து கொள்ளுகிறது.
பாண்டியன்ஜி
இடுகை 0022

Thursday 24 June 2010

புதிய தமிழ் புத்தாண்டின் தொடக்கம்

2010 ஜனவரி 14 ….!
புதிய தமிழ் புத்தாண்டின் தொடக்கம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதனை தொடர்ந்து எதிரும் புதிருமான கருத்துக்கள் ஒலிக்கதொடங்கிருக்கின்றன. புதிய அறிவிப்பிற்கான தேவையை விடுத்து மாற்றியவரின் பின்னணியை மனதில் கொண்டு குரல்கள் எழும்பி ஒலிக்கின்றன.
எந்த ஒரு நிகழ்வுக்கும் இரண்டுவித எண்ணங்கள் இருப்பது உண்மையே. இருப்பினும் உலகில் தோன்றியுள்ள அனைத்து உயிரினங்களிலும் தலையாயது மனித பிறவியே என்று கூறிகொண்டிருக்கிறோம். இலைகளையும் தழைகளையும் தரித்துகொண்டிருந்த மனிதன் இன்று அனைத்து துறை மாற்றங்களுக்கு ஊன்றுகோலாயிருக்கிறான்.ஆனால் மற்ற உயிரினங்கள் தங்கள் நிலைகளை மாற்றிகொண்டதில்லை. அதுமட்டுமே மனித இனத்தின் மகத்தான சிறப்பாகும்.
இந்த மாற்றத்தை தமிழக அரசு மட்டுமே தன்னிச்சையாக அறிவித்துவிடவில்லை என்பதை கவனிக்கவேண்டும்.இந்த மாற்றம் தேவைதானா என்பதை சிந்திக்கின்ற பொறுப்பு யாருக்கு உண்டு ? தமிழனாய் பிறந்தவனுக்கும் தமிழாய்ந்த தலைவர்களுக்கும் மட்டுமே உண்டு.மாற்றத்தை வேண்டிய அறிஞர்கள் தங்கள் எண்ணங்களை சட்டமாக்கி தந்த முதல்வருக்கு நன்றி பாரர்ட்டியதையும் கவனிக்க வேண்டும்.இந்த மாற்றத்துக்கு தேவையான காரணங்களையும் ஊடகங்களில் வெளியிட்டிருக்கிறார்கள்.இருப்பினும் இவையனைத்தும் தேவையான அளவிற்கு மக்களை சென்றடையவில்லை என்றே கருதுகிறேன்.
இவையனைத்தையும் தள்ளி விட்டு வழி வழியாய் இப்படித்தான் வாழ்ந்தோம் என்பவர்கள் மனதிற் கொள்ளவேண்டும்.முன்னதாக அச்சுவசதிக்காக தந்தை பெரியார் தமிழ் எழுத்தில் செய்த மாற்றத்தை இறுதிவரை அவரால்மட்டுமே செயல்படுத்தமுடிந்தது.இரட்டை குழல் துப்பாக்கி என்று சொல்லப்பட்ட தி மு க கூட மாற்றத்தை ஏற்றுகொள்ளவில்லை.ஆனால் புரட்சி நடிகர் கையெழுத்திட்ட சட்டம் ஒரே நாளில் தமிழ் எழுத்துக்களின் தலையெழுத்தையே மாற்றிவிட்டதை நாம் அறிவோம்..எனவே வீம்புக்கு குரல கொடுப்போர் தங்களோடு தங்கள் வழிபாடு முடிவுறும் என்பதை உணரவேண்டும்.
மலர்ந்த முகத்தோடு புதிய புத்தாண்டை தை திங்களில் எதிர்கொள்ளுவோம .
இடுகை 0021

Tuesday 22 June 2010

சிங்கம் தப்பியது !


சுறாவைத் தொடர்ந்து உடனடியாக சிங்கம் திரைப்படத்தைக் காணுகின்ற வாய்ப்பு எதிர்பாராமல் நேர்ந்தது. நெல்லைத் தமிழில் சத்யராஜின் மந்திரப்புன்னகை ,விக்ரமின் சாமி — அதனைத் தொடர்ந்து
இப்போது சூர்யாவின் சிங்கம் கர்ஜித்திருக்கிறது. சரிந்து வரும் காவல்துறையின் கவுரவத்துக்கு ஒருவேளை ஊன்று கோல் கொடுத்து உதவியிருப்பார்கள் என்று கருதினேன். ஊழல் நிறைந்த அரசுத்துறைகளில் ஆங்காங்கே நேர்மையாளர்களும் நிறம்ப இருக்கிறார்கள் என்பதை சித்தரித்துக் காட்ட திரைத் துறையினர் தவறி விட்டார்கள் என்றே தோன்றுகிறது. கதை நாயகனை உயர்த்த மட்டுமே இத்தகய ஞாயங்கள் அவர்களுக்கு பயன்படுகிறது என்பதை உணர முடிகிறது. சமீபத்திய திரைப்படங்களில் கதையம்சம் என்ற ஒன்று அறவே இல்லாமலிருப்பது கவலைக்குரிய விஷயம்தாம். தொழில் நுட்ப நுணுக்கங்களை கற்றரிந்து வரும் இயக்குநர்கள் திரைப்படத்தை துவக்கும் போது இசை , நடனம் , நகைச்சுவை , மற்றும் சண்டைக் காட்சிகள் அனைத்தையும் வல்லுநர் வசம் ஒப்படைத்து தம் பணியை எளிதாக்கிக் கொள்ளுகின்றனர். அதே சமயம் ஒரு வெற்றித் திரைப்படத்துக்கு எலும்பாகத் திகழும் கதையம்சத்தை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. நகைச்சுவைக் காட்சிகள் கூட தேவையான சம்பவப் பின்னணி அமையாத போது பெருவாரியாக வெற்றி பெருவதில்லை. நல்ல கதையை தேடுவதைத் தவிற்து தாமே பண்ணிக் கொள்ளலாம் (எழுதிக் கொள்ளலாம் அல்ல ) என்ற அலட்சிய உணர்வே இன்று திரைத்துறையில் காண முடிகிறது. கதைக்கான நாயகியை கோவில் குளங்களெங்கும் தேடியலையும் இயக்குனர்கள் திரைக்கதைக்கென சிறிதும் முயற்சிப்பதில்லை. இப்படித்தான் சிங்கம் திரைப்படத்திலும் இயக்குநர் ஹரி கதை பண்ணியிருக்கிறார்.
சென்னை நகரின் கிழக்குக் கடற்கரைச் சாலையின் மிகப் பெரிய தாதாவாக செயல்படும மயில் வாகனம் ( பிரகாஷ் ராஜ் ) அடுக்கு மாடி கட்டிடங்களை எழுப்பும் செல்வந்தர்களை பிளாக்மெயில் செய்து பணம் பறிக்கும் தொழில் செய்பவன். அவ்வப்போது ஆட்களை க் கடத்தி லட்சம் லட்சமாக பணம் பிடுங்குபவன். எதிர் பாராத விதமாக வழக்கு ஒன்றில் சிக்கி ஜாமீனில் வெளிவருகிறான். தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் தூத்தூகுடிச் சீமையில் உள்ள சின்னஞ் சிறிய நல்லூர் கிராமத்தில் மாதமொருமுறை நேரில் சென்று கையெழுத்திட பணிக்கிறது நீதிமன்றம்.
நெஞ்சில் உரமும் நேர்மைத் திறனும் நிறம்பப் பெற்ற காவல் துறை ஆய்வாளர் துரைசிங்கம் சொந்த மண்ணில் மிகுந்த செல்வாக்கோடு பணி செய்பவர். துவக்கத்திலேயே மயில்வாகனன் துரைசிங்கத்திடம் அவமானப்பட நேருகிறது.சினமுற்ற மயில் வாகனன் துரைசிங்கத்தை சொந்த மண்ணான சென்னைக்கு மாற்றல் ஏற்பாடு செய்கிறான்.சிங்கமும் சென்னை சென்று மயில்வாகனனை வென்று சொந்த மண்ணுக்கு திரும்புகிறான். கதையை நகர்த்த ஒரு நாயகியும் ஒரு நகைச்சுவை நாயகனும் இடம் பெருகிறார்கள்
இருப்பினும் -
இத்திரைப்படத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை ஒவ்வொருவரும் திறனுடன் செய்திருக்கின்றனர். பழம்பெரும் நடிகர்கள் நிறம்ப காணப்பட்டாலும் சூரியா , விவேக் , அனுக்ஷா , பிரகாஷ் ராஜ் ஆகிய நால்வரும் அனைவரையும் நகர்த்தி திரையில்
முன்னிற்கினறனர். நெல்லைத் தமிழை முழுதுமின்றி ஆங்கங்கே நிறப்பியிருக்கின்றனர். சூரியாவின் நடிப்பு இயல்பாகவே அமைந்திருக்கிறது.ஆங்காங்கே அவர் பேசும் நீண்ட வசனங்கள் சலிப்பூட்டத் தகுந்தது.நாயகி அனுக்ஷாவின் நடிப்பு பாராட்டும்படி அமைந்திருக்கிறது.பிரகாஷ் ராஜ் தன் பாணியை மாற்றிக்கொள்வது நல்லது. வில்லனாய் நுழைந்து காமெடியனாய் கரை சேர்ந்த நடிகர் அசோகனை எண்ணிப் பார்ப்பது அவருக்கு நல்லது. இடையே சிறிது காலம் தொய்வுற்று காணப்பட்ட விவேக் இபபடத்தில் நினைவில் நிற்க முயலுகிறார். சமீப காலத்தில் மத்திய அரசின் சிறப்பு விருதையும் சின்ன கலைவாணர் என்ற அடைமொழியையும் பெற்ற விவேக் விரசமான வசனங்களைத் தொடர்வது நலலதல்ல என்று வேர்கள் கருதுகிறது. இன்றைய சூழலில் அரசியலில் ஒரு நேர்மையாளனாகத் தோன்றி நம்மையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாகுகிறார் விஜயகுமார். பாடல்கள் , தேவிப்பிரசாத்தின் இசை திருப்ப்பியளிக்க வில்லை.
பிரமிக்கத்தக்க சண்டைக் காட்சிகள் — இடையிடையே ஒட்டப்பெற்ற நடனக் காட்சிகள் — விரசம் மிகுந்த நகைச்சுவை — தேவையற்ற நீண்ட வசனங்கள் , இவைகளுக்கிடையே உள்ள கோடுகளை இணைத்து திரைக்கதையை அனுமானிக்க ரசிகர்களிடையே விட்டு விடுகிறார்கள். இதுவே திரைப்படம் தொய்வின்றி நகர்வதற்கு உதவியிருக்கூடும்.
சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கலாம்.
——————————————————-
இடுகை 0020
சென்னையிலிருந்து..
பாண்டியன்ஜி.

Sunday 20 June 2010

தந்தை பெரியாரின் மொழிச் சீரமைப்பு



தந்தை பெரியாரின் மொழிச் சீரமைப்பு
——————————————
(   16 பதிவு பற்றிய குறிப்புரை )
உலகிலேயே மிகவும் தவறாக புரிந்து கொள்ப்பட்ட ஒரே சரியான தலைவர் தந்தை பெரியார் என்று மதிப்பிற்குறிய 
சுப . வீரபாண்டியன் குறிப்பிடுவதை கேட்டிருக்கிறேன்.
மிக மிக சரியான கணிப்பு என்றே கருதுகிறேன்.
தந்தை பெரியாரை கடவுள் மறுப்புத் தலைவர் என்று மட்டுமே நம்மில் பலர் எண்ணியிருப்பதை மறுக்க இயலாது. அவருடைய பல் வேறு பரிமாணங்களை இந்த சமுதாயம் சரிவர உணரப்படவில்லை என்பதே உண்மை.தந்தை பெரியார் விட்டுச்சென்ற எழுத்துக் குவியல்கள் தமிழர் தம் வேதம் என்பதை உணரவேண்டும். பெரியாரின் கூற்றுகளை மறுப்பவர்கள் எவரும் அவர்தம் கருத்துகளை முழுமையாக அணுகாமல் தாறு மாறாகவே விமர்சனம் செய்து வந்திருக்கிறார்கள். இந்திய துணைக்கண்டத்தில் வேறு எந்த மாநிலத்திலும் நிகழாத சமீக நீதிக்கான புரட்ச்சி தமிழகத்தில் மட்டுமே நிகழ்ந்ததற்கு தந்தை பெரியாரே தலையாய காரணம். தமிழன் இன்று தலை நிமிர்ந்து நடப்பதற்கு அவரின் அயராத பணி என்பதை இன்றைய இளைய தலைமுறை உணர வேண்டும்.அவர் விட்டுச் சென்ற ஏராளமான சிந்தனைகளை முழுமையாக படித்துணர வேண்டும்.
அவருடைய மொழிச் சீர்திருத்தம் பற்றிய குடந்தை கல்லூரி பேருரையை சில நாட்களுக்கு முன் படிக்க நேர்ந்து வியப்புற்றேன்.அவர் காலங்களில்
நிகழ்த்தி வந்த பல் வேறு போராட்டங்களுக்கிடையே அவருக்கிருந்த மொழி பற்றிய ஆய்வு அவர்பால் எனக்கிருந்த பற்றுமேலும் இறுகச் செய்தது. ஏற தாழ 50 , 60 ஆண்டுகளுக்கு முன்பே எப்படி ஒரு சிந்தனை.
எனக்கேற்பட்ட இந்த இனிய அதிற்சியை என் வலைபூ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளவே அவர் குரலை வேர்களில் பதிவு செய்தேன். அதுவன்றி
யாரோ எழுதிக் குவித்த குப்பைகளை வேர்களின் காலி இடங்களை நிறப்ப முயலவில்லை.
மொழிச்சீர்திருத்தம் குறித்து பரவலாக பேசப்படும் இன்நாளில் 50 , 60 வருடங்களுக்கு முன் என்றோ தூவப்பெற்ற விதை பயனளிக்கும் என்று கருதுகிறேன்.
——————————————————–
மதிப்பற்குறிய திரு dr. n .கணேசன் அவர்களுடைய பார்வை ( பின்னூட்டம் ) என் செயலுக்கு மேலும் உரமிடுவதை உணர்கிறேன்.மிக்க நன்றி .
பாண்டியன்ஜி
இடுகை 0019

Labels:

Friday 18 June 2010

தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்

தந்தை பெரியார்
தமிழ் மிகுதியும் நம் முற்போக்குக்கு ஏற்றபடி செம்மைப் படுத்தப்படவேண்டும்.மக்கள் கற்க மேலும் இலகுவக்கப்படவேண்டும். பயனுள்ள பரந்த மொழியாக்கப் படவேண்டும். இன்றைய தமிழ் மிகவும் பழைய மொழி. வெகு காலமாக சீர்திருத்தம் செய்யப்படாதது. மற்ற மொழிகளைப் போல திருத்தப்படாதது என்பதான இவைகள் ஒரு மொழிக்கு குறைவாகுமே தவிற பெருமை ஆகாது என்பேன். ஏன் ? பழமையெல்லாம் அநேகமாக மாற்றமாகி இருக்கிறது. திருத்தப்பட்டிருக்கிறது. மாற்றுவதும் திருத்துவதும் யருக்கும் எதற்கும் இழிவாகவோ குற்றமாகவோ ஆகிவிடாது. மேன்மையடையவும் காலத்தோடு கலந்து செல்லவும் எதையும் மாற்றவும் திருத்தவும் வேண்டும். பிடிவாதமாய் பாட்டிகாலத்திய பண்டைகாலத்தியபெருமைகளைபேசிக்கொண்டிருந்தால்ஒதுக்கப்பட்டுப்போவோம். மொழி என்பது உலக போட்டி போராட்டத்திற்கு ஒரு போர்க்கருவியாகும். போர்க்கருவிகள் காலத்துக்கேற்ப மாற்றப்படவேண்டும். அவ்வப்போது கண்டு பிடித்துக்கொள்ளபடவேண்டும். நம் பண்டிதர்கள் இந்த இடத்திலும் நம் மொழிக்கு மிக்க அநீதி விளைவித்து விட்டார்கள் . தமிழ் சிவனும் சுப்ரமணியனும் பேசிய மொழி , உண்டாக்கிய மொழி என்று நம் பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
அதே சிவனும் சுப்ரமணியனும் உபயோகித்த போர்க்கருவிகள் இன்று நம் மக்களுக்கு பயன்படுமா. அவைகளை நாம் இன்று பயன் படுத்துவோமா. அல்லது அவர்களே இன்று போரிட நேர்ந்தால் அவைகளைப் பயன்படுத்துவார்களா. சிந்தித்துப்பாருங்கள்.கடவுள் உண்டாக்கினார் என்பது நமக்குத் தோன்றிய இயற்கைத் தத்துவம் ஆகும். இயற்கையின் தத்துவம் நமது அறிவு வளர்ச்சிக்கேற்ப மாறுதல்களுக்கும் செப்பனிடுவதற்கும் வசதியளிக்கக்கூடியதேயாகும். சிவன் மழுவும் கத்தியும் வேலும் ஆலமும் கொண்டுதான் சண்டை பிடித்திருக்கிறாராம். விஷ்ணு வந்த பிறகே வில் வந்திருக்கிறது. அதன் பிறகே துப்பாக்கியும் அதிலிருந்து பீரங்கியும் மிஷின் பீரங்கியும் ஏற்பட்டு இன்று அணுகுண்டு வரை போர்கருவிகள் முன்னேற்றமாகியிருக்கின்றன. இன்று நாமோ நம் கடவுளோ போரிட நேர்ந்தால் வில்லும் வேலுமா உபயோகிப்போம். ஆகவே போர்க்கருவிகள் மாற்றமடைந்திருப்பது போல் நமது மொழியும் மாற்றமடைய வேண்டாமா போர்க்கருவிகளில் மாற்றத்தை அநுமதித்த கடவுள்கள் மொழி மாற்றத்தை மட்டுமா அனுமதிக்க மாட்டார்கள்.ஆகவே மாற்றுங்கள்.

பிறர் சுலபமாக தமிழ் மொழியைக் கற்றுக்கொள்வதற்கும் சுலபமாக அச்சுக்கோக்கவும் டைப் அடிக்கவும் தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்யப்படுவது நலம் என்று நினைக்கிறேன். தமிழில் எழுத்துக்கள் அதிகம். ஞாபகத்தில் இருத்தவேண்டிய தனி உருவ எழுத்துக்கள் அதிகம். மொத்த எழுத்துக்கள் 216 வேண்டியிருக்கிறது. என்றால் இதில் 135 எழுத்துக்கள் உருவங்கள் தனித்தனியாக ஞாபகத்தில் வைக்கவேண்டியிருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் ஆங்கிலம் முதலிய அன்னிய மொழி எழுத்துக்களைவிட எழுத்து கூட்டுவதற்கு ஒரு கட்டுப்பாட்டுக்கு அடங்கிய நேர்முறையை கொண்டதனாலும் எழுத்துக்களை கற்க வேண்டியது கஷ்டமாகிறது. ஆங்கிலத்தில் 26 எழுத்துக்களே உள்ளன. அவைகளில் உயிர் எழுத்துக்கள் 5 அல்லது 6 . மெய் எழுத்துக்கள் 20 என்னலாம். எல்லாம் தனி எழுத்துக்களே. உயிர்மெய் எழுத்துக்கள் அதாவது உயிரும் மெய்யும் கூடிய எழுத்துக்கள் கிடையாது. வெகு சுலபமாக எழுத்துக்களைக் கற்றுக்கொள்ளலாம். ஆனால் இலக்கணமுறை உச்சரிப்பு முறை ஒரு பொது வரையரைக்கு கட்டுப்பட்டதல்ல. தமிழ் அப்படியல்ல. எழுத்துக்கூட்டுதலும் இலக்கணமும் அதன் உச்சரிப்பும் பெரிதும் இயறகையையே அடிப்படையாக கொண்டதாகும். அப்படிப்பட்ட மொழியை நாம் ஏன் நவீன முயற்சிக்கு ஏற்ற வண்ணம் செப்பனிடக் கூடாது. சாதாரணமாக தமிழ் உயிர் எழுத்துக்களில்
ஐ , ஒள ஆகிய இரண்டு எழுத்துக்களைக் குறைத்து விடலாம். இந்த இரண்டும் தேவையில்லாத எழுத்துக்கள். மேலும் இவை கூட்டெழுத்துக்களே ஒழிய தனியெழுத்துக்களல்ல. இவை இல்லாமல் எந்த தமிழ் சொல்லையும் எழுதலாம் உச்சரிக்கலாம். இவைகளை எடுத்துவிட்டால் சொற்களில் உச்சரிப்பிலோ பொருளிலோ இலக்கணத்திலோ எவ்வித குற்றமும் குறையும் ஏற்பட்டுவிடும் என்று தோன்றவில்லை. சுமார் 40 வருடத்திற்கு முன்னால் இருந்தே நான் இதைக் கவனித்து வந்திருக்கிறேன், இதன்படி எழுத்து கோத்து அச்சடிக்கப்பட்டுள்ள ஒரு குறள் புத்தகத்தையும் நான் 40 வருடத்துக்கு முன்பே பார்த்திருக்கிறேன்.இப்படிச் செய்வதில் மொத்த்தம் 38 எழுத்துக்கள் ( அதாவது உயிரெழுத்து ஐ ஒள ஆகிய 2 ம் அவை ஏறும் மெய்யெத்துக்களில் 2 * 18 = 36 ம் ஆக 36 + 2 = 38 ) ஞாபகத்திற்கும் பழக்கத்திற்கும் தேவையில்லாத எழுத்துக்கள் ஆகிவிடும். ( ஐ -அய் , ஒள – அவ் என்று எழுதலாம். ) இவை தவிர உயிர் மெய் எழுத்துக்களில் தனிமாற்ற்ம் பெற்றிருக்கிற ணா , றா , னா ஆகிய மூன்று எழுத்துக்களுக்கும் தனி உருவம் தேவையில்லாமல் ணா, றா, னா போல் எழுதலாம் .மற்றும் மெய் எழுத்துக்களில் இகரம், ஈகாரம், உகரம், ஊகாரம் ஆகிய நான்கு குறில், நெடில் , எழுத்துக்கள் கொண்ட 4*18 =72 தனி உருவ எழுத்துக்களை நீக்கி விட்டு,தனிச்சிறப்புக் குறிப்பை (அதாவது ககரத்துக்கு ஆகார நெடில் உருவம் காட்ட ஒரு ா – கால் போட்டுவிடுவதுபோல் , ககரத்துக்கு எகரம், ஏகாரம் காட்ட ஒற்றைச்சுழி கொம்பு ,இரட்டைச்சுழி கொம்பு ெ , ே போடுவதுபோல மற்ற இகர ஈகாரத்துக்கும்,உகர ஊகாரத்துக்கும் சில குறிப்புகளை உண்டாக்கி உயிர் 10 மெய 18 குறில் நெடில் குறிகள் 9 ஆயுதம் 1 ஆகிய 38 தமிழ் எழுத்துக்களாய் சுறுக்கி விடலாம்.
இதைப்பற்றி மற்றொரு சொற்பெருக்கில் தெளிவாக்க இருக்கிறேன். இந்த மாறுதல்களை செய்வதால் நாம் மொழிக்கோ பெருளுக்கோ
இலக்கணத்துக்கோ எவ்வித குறைபாடோ கேடோ செய்தவர்களாக ஆகமாட்டோம். துருக்கியில் கமால் பாட்சா அவர்கள் எழுத்துக்களின் அடிப்படையையே மாற்றி விட்டார்.அதாவது இருந்த எழுத்துக்களையே ஒழித்து விட்டு வேறு மொழி (ஆங்கில ) எழுத்துக்களை எடுத்துக்கொண்டு விட்டார்.அதனால கற்க மிகவும் வசதியம் இலகுவும் ஏற்பட்டுவிட்டது. அய்ரோப்பாவில் நான் சுற்றுப்பயணம் செய்த ரஷ்யா முதல் போர்த்துகல் வரை சுமார் 10 ,15 நாடுகளிலும் எத்தனையோ மொழிகள் இருந்தும் அந்த மொழிகளுக்கு பெரிதும் ஒரே மாதிரி 26 முதல் 32 எழுத்துக்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. சில புதிய தனி ஒலி கொண்ட மொழிகள் இருக்குமானால் அவற்றிற்கு 2 அல்லது 3 புதிய உருவ எழுத்துக்களைச் சேர்த்துக்கொண்டுருக்கிறார்கள்.அமெரிக்காவில் தற்சமயம் எழுத்துக்கூட்டும் முறையை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.ஆகவே மேல் நாடுகளில் எழுத்துக்கள் , எழுத்துக்கூட்டும் முறைகள் இவைகளில் மாற்றம் செய்வதால் இலக்கணத்தில் உச்சரிப்பில் பொருளில் மாற்றம் ஏற்படுவதாயிருந்தாலும் கூட துணிவாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் சொல்லும் மாற்றங்களுக்கு அப்படிப்பட்ட குற்றங்குறைகள் இல்லையென்றே கருதுகிறேன்.
நமது தமிழ் பண்டிதர்கள் இம்மாற்ங்களுக்கு ஒப்புக்கொள்ளவேண்டுமே. அதுவன்றோ பெரிய கஷ்டம், மேல் நாடுகளில் பண்டிதர்கள் என்றால் புத்துலக சிற்பிகளாக இருப்பார்கள். நம் நாட்டிலோ பண்டிதர்கள் என்றால் பழமைக்கு இழுத்துக்கொண்டுபோகும் பாட்டிக்கதை வீரர்களாக இருக்கிறார்கள். பண்டு என்ற சொல்லிலிருந்து அதாவது பண்டையர்கள் என்பதுதான் பண்டிதர் என்ற சொல்லாகத் திரிந்தது என்று கண்டு பிடிக்கத்தக்கவர்களாக இருக்கிறார்கள். எழுத்து மொழி சீர்திருத்தத்தில் எனக்குத் தெரிய எந்த பண்டிதரும் பாடுபட்டு இருப்பதாக காணமுடியவில்லை. காலம் சென்ற மாணிக்க நாய்க்கர் அவர்கள் அக்காலத்தில் சிறிது பாடுபட்டார். ஆனல் அவர் சமயத்தை (ஓங்காரத்தை ) தலையாக வைத்துக்கொண்டு பாடுபட்டார்.ஆதலால் அக்காலத்தில அவரிடத்தில் எனக்கு பற்றிருந்தும் எனக்கு ஓங்காரத்தில் இருந்த வெறுப்பு அவரது முயற்சியையும் அறிவுத்திறனையும் அநுபுவிக்க முடியாமற் செய்து விட்டது. அவர் இப்போதிருந்தால் எவ்வளவோ செய்திருப்பார்.

அடுத்தபடியாக மெய்யெழுத்துக்களில் ந,ங,ஞ ஆகிய மூன்று எழுத்துக்களையம் எடுத்து விடலாம். ன் + த =ந , ன் + க = ங ,ன் + ச = ஞ என்று ஆக்கிவிடலாம். எனவே மெயெழுத்தில் ந , ங , ஞ ஆகிய மூன்றையும் குறைக்கலாம். இவைத் தனித்தனியாக தேவையில்லை என்றே தோன்றுகிறது. உயிரெழுத்துக்களில் அய்யும் அவ்வும் உயிர்மெய்யில் உள்ள கூட்டெழுத்துக்கள்தான் இந்த ந , ங , ஞ என்ற மூன்றும். பந்து என்ற வார்த்தையும் பஞ்சு என்ற வார்த்தையையும் எடுத்துக்கொள்வோம். ந வையும் ஞ வயையும் எடுத்து விட்டால் பன்து ,பன்கு பன்சு என்று எழுத வேண்டியிருக்கும். இந்த சொற்களின் உச்சரிப்பை முதலில் சொல்லிக்கொடுத்துவிடலாம். அல்லது சாதாரணமாக உச்சரிப்பு பழக்கத்திலேயே இருந்து வரும். பொதுவாகவே த வுக்கு முன் வந்தால் இப்படி உச்சரிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்து விட்டால் பிறகு உச்சரிப்பில் கஷ்டமிருக்காது. ஆங்கிலத்தில் இம்மாதிரி பல உச்சரிப்புக்கள் இருக்கின்றன. உதாரணமாக put பி – யு – டி பட் என்றும் but பி – யு – டி பட் என்றும் தான் உச்சரிப்பார்கள். இந்த வார்த்தைகள் முதலில் அறிமுகமாகாமலிருந்தால் ஒரே மாதிரிதான் உச்சரிக்க வேண்டியிருக்கும் . ஒரு எழுத்துக்கு பல சப்தங்கள் இருப்பதும் தமிழுக்கு புதிதல்ல. த என்ற எழுத்து தடி என்ற சொல்லில் ஒரு விதமாகவும் பதம் என்ற சொல்லில் வேறுவிதமாகவும் ஒலிக்கவில்லையா.அதே போல் ன என்ற எழுத்துக்கே ந சப்தமும் ங சப்தமும் ஞ சப்தமும் இருந்தால் ஒன்றும் கெட்டுவிடாது. இந்த சீர்திருத்தங்களைச் செய்தால் தமிழ் தனி உருவ எழுத்துக்கள் வெகு சொற்பமாகிவிடும்..
உயிர் எழுத்துக்கள் 10 . நெட்டெழுத்துக்கள் எல்லாவற்றிர்கும் ா கால் போட்டுவிடுவதால் அய்ந்து உருவ எழுத்துக்கள் தான் இருக்கும் . அதாவது ( ஆங்கில வவ்வல்கள் போலே ) அ , இ , உ , எ , ஒ . நெட்டெழுத்துக்கள் அா , இா உா எா ஒா என்றே எழுதலாம்.. மெய்யெழுத்துக்கள் 18 ல் 3+எழுத்துக்கள் ந் ங் ஞ் எடுக்கப்பட்டால் 15 எழுத்துக்களையும் மேலே புள்ளி வைக்காமல் பக்கத்தில் ஒரே ஒரு கோடு இழுப்பதன் மூலம் காட்டலாம் அதாவது க/, ச/ , ட/ , ண/ , த/ , ………..ன/ , என்றபடி எழுதினால் க் , ச் ,…. என்று அர்த்தப்படுத்தி படிக்கலாம்.ஆக சிறப்புக்குறிகளில்
இகர , இாகாரத்திற்கும் , உகர உாகாரத்திற்கும் 4 குறிகள் புதிதாக தோற்றிவிக்கப்படவேண்டும் ஏகாரத்திற்கும் ஓகாரத்திற்கும் எகர , ஏகார ஆகாரக் குறிப்புகளே பயன்பட்டு விடுவதால் அவற்றிற்காக தனிக்குறிப்பு வேண்டியதில்லை. அல்லது ெ , ே என்ற இந்தக் கொம்புகளை வேறுவகையில் மாற்றிப் போட்டுக்கொள்ளலாம். கடைசியாக ஆய்தம் ஒன்று இருக்கலாம்.
உயிர் —- 5
மெய் —– 15
சிறப்புக்குறி —– 8
ஆய்தம் —– 1
———————————
29 உருவ எழுத்துக்களிலேயே கூட தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கையை அடக்கிவிடலாம். அல்லது சிலர் கருதுவது போல் 12 உயிர் எழுத்துக்களில் ஐ , ஔ , தவிர மற்ற 10 ல் அ – வை அப்படியேவும் ஆ – க்கு பதிலாக – ா – வையும் ,எ – ஏ க்கு பதிலாக ெ , ே – என்ற குறிகளையும் வைத்துக்கொண்டு இ , ஈ , உ , ஊ , ஒ , ஓ என்ற 6 எழுத்துக்களுக்கு 6 புது எழுத்துக்களை உற்பத்தி செய்து கொண்டு இவற்றையே உயிர் மெய்யாக மெய்யோடு சேர்த்துப் படிப்பதனால் அப்போது
உயிர் —- 10
மெய் —– 15
ஆய்தம் —– 1
மெய் குறிப்பு —– 1
——————————–
ஆக 27 எழுத்துக்களாகும். இந்த 27 எழுத்துக்களைக் கொண்டே நமது சகல சொற்களையும் அதிக சுலபமாக எழுதி விடலாம் . பிற மொழிச்சொற்களை நம் மொழியில் எழுதுவதற்குத் தேவைப்பட்டால் ஒன்றிரண்டு வேறு எழுத்துக்களையும் உண்டாக்கிக் கொள்ளலாம். அறிஞர்களும் பண்டிதர்களும் தீர்க்கமாய் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும்.எப்படியும் தமிழ்மொழி எழுத்துக்கள் குறைக்கப்பட்டாக வேண்டும். அச்சு கோப்பதற்கும் டைப் அடிப்பதற்கும் ஆங்கிலத்தைப்போல் இலகுவாக்கப்பட வேண்டும். கற்கும் பிள்ளைகளும் 3 மாதத்தில் படிக்கத் துவங்கலாம் என்பதுதான் நமது ஆசை.
———————————————————————————–
தந்தை பெரியார் அவர்கள் மொழி, எழுத்து என்ற தலைப்புக்களில் கும்பகோணம் அரசுக்கல்லூரியிலும் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் ஆற்றிய உறையிலிருந்து.
இடுகை 0018
பாண்டியன்ஜி
—- தங்க சங்கரபாண்டிய்ன் தொகுத்தளித்த தமிழர் தலைவர் பெரியார் பேசுகிறார்

Labels: ,

Tuesday 15 June 2010

தந்தை பெரியார் குரல்




தந்தை பெரியார் குரல்
------------------------
செம்மொழி மாநாடு நிகழ்வு நாள் நெருங்கி விட்டது.
கோவை நகரம் விழாக்கோலம் பூண தயாராகிக் கொண்டிருக்கிறது.
உலகெங்கும் இருந்து வரும் தமிழ்ப்புதல்வர்கள் ஒன்று கூடப்போகிறார்கள். உபயோகமானமுடிவுகள் எட்டப்படும் என்று கருதலாம். இந்த நேரத்தில் - தமிழ் மொழியின் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் பத்திரிக்கைகளிலும் இணையதளங்களிலும் இடம் பிடிக்கத்துவங்கி விட்டன.   ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு முன்னரே தந்தை பெரியார் இது பற்றிய சிந்தனையை விதைத்து விட்டு சென்றிருப்பதை இப்போது எண்ணிப் பார்க்கிறேன் .
தமிழ் பிள்ளைகள் தாய் மொழியைக் கற்க எத்தனை சிறமப்படுகிறார்கள் என்ற வேதனை அவர் குரலில் ஒலிப்பதைக் காணமுடிகிறது.   இன்றைய தலைமுறையின் மறுபரிசீலனைக்கு அடுத்து தொடர்ந்து அவர் குரலை பதிவு செய்கிறேன்.
பாண்டியன்ஜி
சென்னையிலிருந்து ….. .
இடுகை 0017

Labels:

Thursday 10 June 2010

திருக்கடையூரில் நிகழ்ந்த திருமணம்

                                
         ( என்னுடைய 26 வது இடுகை என் வாழ்வில் தூணாகவும் துணையாகவும் விளங்கியவர்களைப்பற்றியது. வலைப்பூ நண்பர்கள் விரும்பினால் எனக்கும் மகிழ்வே ! )
                                                        பாண்டியன்ஜி

                                              எனக்கு மணமாகி முப்பத்தெட்டு வருடங்கள் என்னை விட்டு வெகு விரைவாக ஓடிப்போய்விட்டதை உணர்கிறேன் . அப்போது எனக்கு அறிமுகமான எனது மைத்துநர் திரு அ . இராமதாஸ் அவர்களின் உறவு என்னைப்பொருத்தவரை அரிதானதொன்றாகவே கருதுகிறேன். கடந்த 6 ஜுன் 2010 - ல் 60 வது வயதினை நிறைவு செய்திருக்கிறார் என்ற செய்தி என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் நகரில் தன் செய்கைகள் மூலம் அனைவர் மனதிலும் இடம்பெற்றிருந்த ஆடுதுறை        திரு c. a . அண்ணாமலை அவர்களின் புதல்வர்தாம் தி ரு அ . இராமதாஸ் . மருத்துவ வணிகத்தில் தஞ்சை மாவட்டத்திலேயே பெரிதும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.


   திருப்பனந்தாள் , பந்தணைநல்லூர் , கோணுளாம்பள்ளம் , மற்றும் சோழபுரம்   ( உமா மெடிக்கல் ஹால் )ஆகிய கிராமங்களில் மருந்து விற்பனையை ஒருசேரத் துவக்கி சாதனையை நிகழ்த்தியவர். அவரிடம் பயிற்சியுற்றோர் இன்று தனித்தனி கிளைகளாக ஒளிவிடுவதைக் காணலாம். இன்றுவரை அன்போடு பழகும் இனிய சுபாவம்,
தொய்வுற்றபோது கைகொடுக்கும் மன உறுதி நான் என்றும் மறவாதவை. அவருக்கு துணையாக அமைந்த திருமதி ரேணுகா இவருக்கொன்றும்
சளைத்தவரல்ல. உறவுகளையும் நட்புகளையும் ஒருசேர உபசரிப்பதில் என்றுமே நினைவில் நிற்பவர். இருவருமே வாழ்வின் எழுச்சிமிக்க நாட்களையும் வீழ்ச்சி நிறைந்த நாட்களையும் ஒருசேர சந்தித்தவர்கள்.
இவர்களது 60 வது அகவை நிறைவு மணவிழா கடந்த     06 ஜுன் 2010 - ல் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன்
சன்னதியில் சிறப்புடன் நிகழ்வுற்றது. நோயற்ற நீண்ட நல்வாழ்வு இவர்கள் பெருவார்கள் என்று நம்புகிறேன். வாழ்வின் இறக்கமான தருணங்களில்
எதிர்படும் இன்னல்களைத் எளிதில் தாங்க தேவையான மன உறுதியையும் உற்சாகத்தையும் இவர்கள் பெருவார்கள் என்று நம்புகிறேன்.
இப்படியொரு
உறவு மீண்டும் மீண்டும் பெறவே ஆசை
------------------------------------------------------------------------------ .
பாண்டியன்ஜி
இடுகை 0016   10 ஜுன் 2010
-------------------------------------------------------------------------------

Labels:

Monday 7 June 2010

தமிழக அரசின் திருமண பதிவுச் சட்டம்

தமிழக அரசின் திருமண பதிவுச் சட்டம் – ஒரு பார்வை
கெள-டில்யன்
அனைத்து திருமணங்களும் கட்டாயம் பதிவு செய்யப்படவேண்டும் என்று தமிழக அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது..சமூகத்தில் பெண்களுக்காக குரல் கொடுப்போர் உவகை கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.இருப்பினும் வழக்கம்போல மாறுபட்ட கருத்துகளும் எழுந்து ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.இந்தியா போன்ற மிகப்பெரிய சனநாயக நாடுகளில் இவையெல்லாம் சாதாரணமானதுதான்.தமிழக அரசுஇயற்றியிருக்கும் புதிய திருமணச்சட்டம் தற்கால மணவாழ்க்கையில் ஊடுருவியிருக்கும் குளருபடிகளை களைய உதவும் என்று நம்பலாம்.இதன் மூலம் பொதுவாக பாதிக்கப்படும் பெண்களுக்கு தீர்வு கிடைக்கலாம்.இந்த சட்டத்தை பொருத்தவரை சிறுபான்மை சமுதாயம் என்ற நிலையில் இருக்கும் முஸ்லிம் இனத்திலிருந்துதான் பெருவாரியான€ குரல்களை கேட்க முடிகிறது.எத்தனையோ கண்மூடி பழக்கங்கள் அனைத்தும் காலவெள்ளத்தில் இனம் மதம் மொழி என்ற தடைகளைத்தாண்டி மண் மூடிப்போயிருக்கின்றன.இந்த மண்ணில் வாழ்வதற்கும் உலகின் பிறபகுதிகளில் பிழைப்பதற்கும் ஏற்ற மொழியினை ஏற்றுகொண்டிருக்கிறோம்.தங்கள் மத மறபுகளை பெருமளவு புறக்கணிக்காத,அனைத்து இனங்களுக்கும் ஊன்று கோலாயிருக்கிற சட்டங்களை ஏற்று கொள்ளுவதில் தவறில்லை என்றே தோன்றுகிறது.
கட்டாய திருமண பதிவுச்சட்டத்துக்கெதிராக குரல் கொடுப்போர் கூறுவதென்ன.?
முஸ்லிம் ஜமாத்துகளில் 90 விழுக்காடு திருமணங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்படுகிறது.இந்த புதிய சட்டம் ஜமாத்துகளின் செயலை உருக்குலைத்துவிடும்.ஊழலும் லஞ்சமும் ஊரிக்கிடக்கும் அரசு அலுவலகங்கள் வசம் இந்த சட்டம் போகுமானால் பெருமளவு பணச் செலவும் காலவிரையமுமே மிஞ்சும்.

இடுகை 0015