Tuesday, 29 March 2011

ழ பதிப்பகமும் நூல் வெளியீடும் ! verhal

பாண்டியன்ஜி
கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 27 - 03 - 2011 ) மாலை ஆறு மணி !
கே.கே நகர் முனுசாமி சாலை மையத்திலிருந்த டிஸ்கவரி புத்தகநிலையத்தில் " ழ" பதிப்பகம் புதிய நான்கு புத்தகங்களை வெளியிட்டு பதிவுலக சிற்பிகளுக்கு ஊக்கமளித்தது. புத்தகநிலையம் தாங்கக்கூடி அளவுக்கு சென்னைப்பதிவர்கள் கூடிய அந்த விழா சிக்கனமாக நிகழ்ந்தேரியது. இதற்கா அழைப்பை பதிவுலக நண்பர் திரு கே.ஆர்.பி செந்தில் முன்னதாகவே அனுப்பியிருந்தார்.
சென்ற வருடத்தில் ஒரு நாள் இரவு வேர்கள் முத்திரையோடு பதிவுலகில் தடம் பதித்தபோது பரந்து கிடந்த இணையத்தில் நானும் திரும்பிப் பாற்கப்படுவேன் என்று தோன்றியதில்லை.வழக்கம் போல பலனை நோக்காது ஒரு பயணச்செய்தியை பதிவு செய்தபோது அடுத்த நாள் வியப்பூட்டும் 
மூன்று மறு மொழிகள் காத்திருந்தன.
திரு ராம்ஜி ,திரு தெகா ( thekkiattan ) ,திரு கே.ஆர்.பி செந்தில் என்ற மூவரில் இந்த விழாவின்மூலம் கே ஆர் பி செந்திலைக் காண முடிந்தது. மற்ற இருவரையும் வரும் நாளில் சந்திக்கக்கூடும் என்று நினைக்கிறேன்.பதிவுலகில் பழகுவதற்கு எத்தனை இதமானவர் கே ஆர் பி செந்தில் என்பதை அங்கே உரையாற்றிய
நண்பர்கள் மூலமாக அறியமுடிந்தது.அவர் அவ்வப்போது எழுதிய நிதி சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பான பணம் என்ற நூலை எனக்கு முன்னதாகவே
அறிமுகமாகியிருந்த அகநாழிகை வாசுதேவன் வெளியிட திரு முத்து பெற்றுக்கொண்டார்.அதைப்போல பழம்பெரும் பதிவர் கேபிள் சங்கர் எழுதிய கொத்து பரோட்டா என்ற நூலை திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு சதீஷ் வெளியிட்டார்.அயல் நாடு வாழும் தமிழரான திரு என்.உலகநாதன் எழுதிய.
வீணையடி நீ எனக்கு , சாமான்யனின் கதை..என்ற இரு நூல்களும் வெளியிடப்பட்டன.

விழாவைத்துவக்கி வைத்து உரையாற்றிய பதிப்பாளர் திரு ஒ.ஆர்.பி ராஜா எழுத்துலகில் காலடி வைக்கும் பதிவர்களுக்கு படி அமைத்துக் கொடுப்பதே ழ பதிப்பகத்தின் நோக்கமென்றார்.வணிககம் வுக்கு அடுத்த நிலைதான் என்றும் விளக்கினார். அதே சமயம் என் நினைவுகள் பெரிதும் பின்னோக்கிப் பாய்ந்தது. என் தலைமுறையிலேயே எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எண்ணங்களை எதிரொலிக்க, சிறுகதை புதினங்களை படைக்க சாதிச்சான்றும் சமய சிபாரிசும் அல்லவா அன்னாளில் தேவையாயிருந்தது.கல்கியிலும் விகடனிலும் இவையன்றி எவரேனும் எழுதமுடியுமோ.?
இன்று அத்தனையும் எளிதாகக் கிடைக்கிறது.
படைப்பாளிகளும் பதிப்பாளிகளும் யோசிக்க வேண்டும். தரமான எழுத்துக்களுக்கு உத்ரவாதம் அளிக்க வேண்டும்.
இந்த விழாவில் பங்கேற்றதன் மூலம் ஒரு சில பதிவர்கள் அறிமுகம் சாத்தியமாயிற்று.              நகைச்சுவை தவழ எழுத முயற்சிக்கும் வலைமனை சு-சாமிநாதன் பரமசாதுவாக நடந்து கொண்டது வியப்பைத் தந்தது.நூல்களின் அட்டையை ஆக்கியவர் அவர்தானாம்.
( நூல்கள பற்றிய எண்ணங்களை பினபு பகிர்ந்து கொள்ளுகிறேன். )
----------------------------------
இடுகை 0047 .



Labels:

Monday, 28 March 2011

சாயம் போன செங்கொடி ( மூன்று )

 (  இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் தவிப்பு )
  பாண்டியன்ஜி

காங்கிரஸ் இயக்கத்துக்கு அடுத்தபடியாக எனக்கு அறிமுகமான அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே.  அன்று , இப்போது போலல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து பிரிவுகளும் ஒன்றாயிருந்த காலம். நான் திருத்தருப்பூண்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் நுழைந்திருந்த சமயம். ஒன்று பட்ட தஞ்சை மாவட்டம் காவிரியின் கருணையால் கண்ணுக்கு எட்டிய வரை பச்சைப் பசேலென்று விரிந்து கிடந்தது. காவிரியின் கடைமடைப் பகுதியான தஞ்சை முழுதும் ஆறு குளம் குட்டைகள் அத்தனையும் நீர் நிறைந்து விவசாய விளைச்சல் சிறப்புற்றிருந்தது.மாவட்டம் முழுதும் இருந்த விளை நிலங்களில் பெரும்பகுதி தனிப்பட்ட பெருநிலக்கிழார்கள் வசமிருந்தது.வஞ்சனையின்றி உழைத்த தாழ்த்தப்பட்டோரும் வாழ்க்கையை நகர்த்த குடும்பத்துடன் கொத்தடிமைகளாக சேறுகளில் சிக்கியிருந்த தலித்துகளும் அன்றைய பசுமைப் புரட்சிக்கு காரணமாயிருந்தார்கள்.அன்றைக்கெல்லாம் இன்றுபோல பணியில் காலத்தை நிர்ணயிக்க கை கடிகாரங்கள் அவர்களுக்கு சாத்தியமாயிருக்கவில்லை.சூரியனின் உதயமும் அடுத்து நேருகிற அஸ்தமனமும் மட்டுமே அவர்களுக்கான பணி நேரங்களை நிச்சியித்தன.
ரஷ்ய மண்ணில் அப்போது நிகழ்வுற்ற அக்டோபர் புரட்சியும் அதனைத்தொடர்த்து ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களும் படித்த இந்திய இளைஞர்களால் கவரப்பட்டு இந்த மண்ணில் துளிர்த்ததுதான் இந்திய கம்யூனிட் கட்சி.காங்கிரஸ் இயக்கத்திலிருந்து பிரிந்து போன பல் வேறு இயக்கங்களுள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று என்று சொல்லலாம்.இன்று போல தனிநபர் அலட்சியம் கருதி புதுப்புது கட்சிகள் தொடங்கப்பட்டதாக நினைவில்லை.புதிதாக பிறந்த கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டம் முழுதும் அபரிதமாக குவிந்து கிடத்த விவசாய தொழிலாளிகளை எளிதாக அள்ளிக்கொண்டது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் திருத்தருப்பூண்டி தெற்கு வீதியில் மிகப் பெரிதான கூட்டங்களை சேர்த்துக் காட்டியது கம்யூனிஸ்ட் கட்சி என்றே சொல்லாம். திராவிட இயக்கங்கள் முழுமையாக 
நகருக்குள் நுழையாதிருந்த நேரம். மணலி கந்தசாமி , கல்யாணசுந்தரம் , வி.பி சிந்தன் , ஜீவா , இராமமூர்த்தி எ .கே. கோபாலன் , டாங்கே , நம்பூதிரிபாட் , ரணதிவே என்று பலவேறு 
பெருந்தலைவர்கள் எல்லாம் பேசி பார்த்திருக்கிறேன். நகரைச்சுற்றி நாலா புரமும் 40 மைலில் சூழ்ந்திருந்த கிராமங்களிலிருந்து தலித் ஆண்களும் பெண்களும் , குழந்தைகளுடன் கூட்டங்களுக்கு வரிசை வரிசையாக அழைத்து வரப்பட்ட காட்சியை வியப்போடு பார்த்திருக்கிறேன்.அந்த அழியா நினைவுகளே தேர்தலுக்கு தேர்தல் திருத்தருப்பூண்டி , நாகபட்டணம் , மன்னார்குடியென்று கூட்டணிக்கட்சிகளிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றும் நடையாய் நடக்க காரணமாயிருந்திருக்கிறது.
அன்நாளைய கம்யூனிஸ்ட் இயக்கங்களில் முக்கியமான முழக்கங்களாக நான் அறிந்த வரையில் ரஷ்யாவைப் பார் , சீனாவைப்பார் என்ற ரீதியில்தான் இருந்தது. ரஷ்யாவையும் இரும்புத் திரை கொண்டு மூடப்பட்ட சீனாவையும் மானசீகமாக கண்டு பூரிப்படைந்த கம்யூனிஸ்ட்டுகள் இந்த மண்ணை குனிந்து காண மறந்து போனார்கள். இந்த மண்ணின் பொருளாதார ஏற்ற தாழ்வை கையில் எடுத்தவர்கள் சமுதாய சீர்கேடுகளை மறந்து போனார்கள்.
ஜாதி மத வேறுபாடுகளில் மூழ்கி இந்த சமுதாயம் பல் வேறு கூறுகளாக சிதைந்து கிடந்த அவலங்கள் அவர்கள் கண்களுக்கு புலப்படாமற் போயிற்று. முந்தி பிறந்த நம் மொழியின் சீர்கேடுகள் அவர்களுக்கு பெரிதாகத்தோன்றவில்லை.ரஷ்யாவும் சீனாவும் மட்டுமே இவர்களின் கற்பனை பிரதேசங்களாயிற்று.
அன்னிய மண்ணிலிருந்து கிருத்துவ மதத்தை போதிக்க தென்னிந்திய கடலோரம் வந்திறங்கிய அய்ரோப்பிய மத
குருமார்கள் என்ன செய்தார்கள்?
முதலில் இநத மண்ணையும் மண்ணின் மொழியையும் நேசித்து அடிமட்ட மக்களின் அவலங்களில் பங்கெடுத்து
அதன் பின்தான் கிருத்துவக் கொடிகளை ஏற்றத்துவங்கினர். அப்படி வளர்ந்ததுதானே கிருத்துவ மதம்.மதத்தைப்பரப்ப வந்த பெருமகனாரில் பலபேர் மொழித்திறனிலும் கலாசாரத்திலும்
மயங்கி தமிழ் மண்ணுக்குத் தொண்டாற்றி மக்களின் மனதில் மாறா இடம்பிடித்ததை மறந்திடமுடியாது.
ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் எடுக்கத்தவறிய ஆயுதங்கள் பின்னாளில் உதயமான திராவிட இயக்கங்களுக்கு வித்தாயிற்று. விதி விலக்காக தமிழகத்தின் தென் கோடியில் பிறந்த ஜீவா இல்லையென்றால் அன்று நாஞ்சில் நாட்டில் உதயமான ஒரு தமிழ்கூட்டமும் தலையெடுக்காமற் போயிருக்கும். இருந்த போதும் எனக்கிருந்த வருத்தமெல்லாம் இவர்கள் தமிழில் பாரதியைத்தாண்டி எட்டிப் பாற்கவேயில்லை என்பதுதான். பாரதிதாசன் இவர்கள் கண்களுக்கு புலப்படாமலே போனார் என்பதுதான்.1962 ல் இந்தியா சீனாவை போரில் சந்திக்க நேர்ந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக
பிளவு பட நேரிட்டது.ரஷ்யாவையும் சீனாவையும் பார்க்கச்சொன்னனவர்கள் இப்போது தனித்தனியாக பார்க்கத்
துவங்கினார்கள்.
அன்று கம்யூனிஸ்ட்டுகள் எடுக்க மறந்த மிச்சமுள்ள ஆயுதங்களை இன்று புதிதாய் பிறந்த கட்சிகள் எடுத்துக் கொண்டுவிட்டன. கம்யூனிஸ்ட்டுகள் நிராயுதபாணியாக்கப்பட்டுவிட்டதாகவே எண்ணுகிறேன். பல்வேறு தொழில் நிறுவனங்களில் நிகரின்றி கோலோச்சிய நிலையும் இழக்க நேரிட்டது.
அதுமட்டுமின்றி ராமமூர்த்தி , மணலி கந்தசாமி , எ.கே கோபாலன் , கல்யாணசுந்தரம் , வி , பி சிந்தன் போன்ற துணிவும் ஆற்றலும் மிக்க தலைவர்கள் மீண்டும் தோன்றாதது தமிழக கம்யூனியூனிஸ்ட்கட்சிக்கு ஏற்பட்ட துரதிஷ்டம். அதைவிட துரதிஷ்ட்டம் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்ற தற்போதைய தலைவர்கள் . 
அதன் பலனாகத்தான் தொண்டர் சக்தியை பெருவாரியாக இழந்த இந்த இயக்கங்கள் இரண்டொரு தொகுதிகளுக்காக திராவிட இயக்கங்களிடம் மண்டியிட்டு அரசியல் செய்ய நேர்ந்திருக்கிறது.அதுமட்டுமின்றி மிச்சமிருந்த இளைஞர்களில் பெரும்பாலோர் தனித்தனி குழுக்களாக பிரிந்து தாங்களே உண்மையான கம்யூனிஸ்ட்டுகள்
என்று அறைகூவுவதையும் காணமுடிகிறது.
இருந்தபோதும் இந்த மண்ணின் விடுதலைக்கு முன் ஏற்பட்ட இந்திய கம்யூனிஸ்கட்சியின் இன்றைய நிலை வருந்தத்தக்கதுதான். ஏறத்தாழ 1952 லிருந்து இந்த தேசத்தில் ஒரே சின்னத்தில் போட்டியிடுகிற அரசியல் இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே. இன்றைய சூழலில் இவர்களிடையே நேருக்கு மாறான அணுகுமுறைகள்
அதிகம் இருப்பதாக தெரியவில்லை. இரண்டொரு தொகுதிகளுக்காக இன்று முச்சந்தியில் அலைவதைத் தவிற்து சிதைந்துகிடக்கும் சக்திகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய மாற்று சக்தியாக உருவெடுக்கலாம் என்று தோன்றுகிறது. முயற்சிப்பார்களா என்று பார்க்கவேண்டும்.
தமிழகத்தைப்பொருத்தவரை இவர்கள் ஆட்சியை நம்மிடம் கேட்கவுமில்லை .அதற்கான அவசியம் நமக்கு ஏற்படவுமில்லை. இரண்டொரு தொகுதிகளைத்தான் கேட்கிறார்கள்.
இந்த நேரத்தில் ஒன்றை எண்ணிப்பார்க்கிறேன்.
அன்னிய மண்ணில் கம்யூனிஸ் நாடுகள் தங்கள் உடைகளைக் களைந்து தோற்றங்களை மாற்றிக்கொண்டு விட்டன.இந்திய கம்யூனிஸ்டடுகள் திசை தெரியாமல் நிற்கின்றன.ஆனால் மனிதாபமானத்தை போதித்த மார்க் சீயம் தோல்வியுறவில்லை.இன்னும் இந்த மண்ணில் படித்த முதியவர்களிடத்தும் புதிதாய் தோன்றிய இளைஞர்களிடத்தும் ஆழ் மனதில் ஊறிக்கிடக்கிறது.
அன்று அண்ணாவைச் சந்திக்கின்ற வாய்ப்பு இல்லாமல் போயிருக்குமானால் தஞ்சை தரணியில் ஒரு கம்யூனிஸ்ட்டாக போயிருப்பேன் என்பதையும் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டி மகிழ்ந்ததையும் கலைஞர் கருணாநிதி இன்றும் பேசக்கேட்டிருக்கிறேன்.
தமிழகத்தைச்சூழ்ந்திருக்கும் இருள் விலக விலக கழகக்கொடியில் உள்ள கருப்பு குறைந்து ஒருகாலத்தில் உண்மையான கம்யூனிஸ்ட்டாக செங்கொடி ஜொலிக்கும் என்று அண்ணா முழங்கியது மார்க்ஸியத்தில் இந்த 
மண்ணுக்கு உள்ள அழியா நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.
அண்ணா சொன்னது நிகழப்போகிறதோ என்னவோ இன்று செங்கொடியின் சாயம் கலைந்து போனதுதான் உண்மை .
-----------------------------------------
இடுகை 0046


Thursday, 24 March 2011

திமுக காங்கிரஸும் அண்ணா திமுக காங்கிரஸும்! ( இரண்டு )


அரசியல் அரங்கம் ( இரண்டு )
காங்கிரஸ் இன்று...
                               பாண்டியன்ஜி

நீண்ட பாரம்பரியம் மிக்க காங்கிரஸ் பேரியிக்கத்தை எண்ணிபார்க்கிறேன்.
அன்னாளைய ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் நான் சந்திக்க நேர்ந்தது பெருநிலக்கிழார்கள் நிறைந்து காணப்பட்ட காங்கிரஸ் கட்சியும் தாழ்த்தப்பட்ட தலித்துக்கள் அங்கம் வகித்த கம்னியூஸ்ட் இயக்கமுமே.அடுத்த சில ஆண்டுகளில்தான் திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க நேர்ந்தது.தமிழகமெங்கும் சிதறிகிடந்த பல்வேறு கட்சிகளின்வாக்குகளை சிந்தால் சிதறாமல் சேர்த்தெடுத்து 1967 ல் காங்கிரஸிடமிருந்து ஆட்சியை கைபற்றினார் அண்ணா. அன்று பறிகொடுத்த ஆட்சியை மீட்பதற்கான எவ்வித சிந்தனையுமின்றி பின்னாளில் பிளந்து போன திராவிட இயக்கங்களின் முதுகினில் மாறி மாறி பயணிப்பதையே சுகமாக எண்ணி வந்திருக்கிறது தமிழக காங்கிரஸ் இயக்கம். தில்லி தலைமை மதிக்கத் தக்க காமராசரைப் போன்றவொரு தலைமை தமிழக காங்கிரஸ் இயக்கத்துக்கு கிட்டாதது துரதிஷ்டமானதுதான். தங்கள் இருக்கைகளை திடமாக காத்துக்கொள்வதைத்தவிற எந்தவொரு மாநில காங்கிரஸின் வளற்சியைப்பற்றியும் தில்லி கவலைப்பட்டதேயில்லை.
தமிழக காங்கிரஸில் அங்கம் வகித்தவர்களோ இயக்கத்தை மீறிய மேதாவிகளாகவே இருந்தனர். இவர்களிலே அதி மேதாவிகளாக இருந்த நெடுமாறன் திண்டிவனம் ராமமூர்த்தி நெல்லை கண்ணன் தமிழருவி மணியன் போன்றோர் இன்று சத்தியமூர்த்தி பவனுக்கு வெளியே தனித்தனியாக சஞ்சரிப்பதைக்காணலாம். இதே போன்று முன்னொரு காலத்தில் அளவுக்கதிகமான அதி மேதாவிகளைக்கொண்டு மத்தியில் காங்கிரஸுக்கெதிராக வடிவமைக்கப்பெற்ற ஜனதாகட்சி குறைந்த காலத்திலேயே சிதறிப்போக நேர்ந்ததை மறந்துட இயலாது.  தமிழக காங்கிரஸார் ஒன்று கூடி ஒரு சுதந்திர தினத்தைக்கூட கொண்.டாடியதாக வரலாறு கிடையாது. இந்த இரு பிரிவினரும் என்று இணைந்து ஒரு திசையில் பயணிக்கிறார்களோ அன்று மட்டுமே தமிழ்நாட்டு காங்கிரஸுக்கு விமோசனம் ஏற்படக்கூடும்!
இந்த கட்டுரை எழுதும்போது கூட சத்தியமூர்த்தி பவனில் வீசப்படுகிற இருக்கைகளையும் சிதறி தெரிக்கின்ற கண்ணாடித்துண்டுகளையும் எரிக்கப்படும் தமிழக காங்கிரஸ் தலைவர் உருவபொம்மையையும் நேரலையாக உலகமே பார்த்துக் கொண்டிப்பது எனக்கு வியப்பாக தெரியவில்லை. ஒருவேளை பெரும்பான்மை பெற்று கோட்டைக்குள் நுழைய நேரிட்டால் நிலமை இன்னும் மோசமாகக்கூடும் என்றே தோன்றுகிறது. எதிர் வரிசை வியந்து பார்க்கலாம்.நெருக்கடி தந்து பெறப்பட்ட தொகுதிகளில் கரை சேருவார்களா ?
தமிழக காங்கிரஸ் தலைவர்களிலிருந்து தொண்டர்கள் வரை தங்கள் தனித்தன்மையை மறந்து இன்றுவரை தமிழக திராவிட இயக்கங்களின் துணை குழுக்களாகவே தங்களை எண்ணிக்கொண்டு வந்திருக்கின்றனர். ஒவ்வொருமுறை தேர்தல்வரும் போதும் வெளிப்படுகிற செயல்பாடுகளே இதற்கு சான்று.யானைக்குஅதன் பலம் தெரிவதில்லை அதனால்தான் மாவுத்தனுக்கு கட்டுப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ் தலைமையும் தங்கள் வலுவை உணர்ந்ததாக தெரியவில்லை.
--------------------------------------------------------------
இடுகை 0045

Labels: ,

யார் கொடுத்தார் இந்த அரியாசனம் ( ஒன்று )


பாண்டியன்ஜி
அடுத்த மாதம் ஏப்ரல் 13 ல் நிகழயிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முறையான அட்டவணை வெளியிடப்பட்டு விட்டது.ஒரே நாளில் ஒரே நேரத்தில் நிகழப்போகும் வாக்குப்பதிவுக்கான முன்முயற்சிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் துவக்கிவிட்டது.
அப்படியொன்றும் யாரும் எதிர் பாராத வகையில் திடீரென்று இந்த அறிவிப்பினை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டதென்று கூறமுடியாது,வர இருக்கிற மார்ச் ஏப்ரல்களில் இந்த தேர்தல்கள் நிகழக்கூடும் என்பதை அவ்வபபோதுதேர்தல் ஆணையம் பேசியே வந்திருக்கிறது.
இருந்தபோதும் தமிழக அரசியல் கட்சிகள் இப்போதுதான் உறக்கத்திலிருந்து விழித்தது போல தேர்தலுக்கான அணி சேர்வதிலும் வேட்பாளர் காண்பதிலும் பெரிதும் பின்தங்க நேர்ந்திருக்கிறது.வேட்பு மனு தாக்கலுக்கான முதல் நாள் கடந்த பின்னும் தொடர்ந்து இழுபறியாயிருந்த இந்த கூட்டணி பேரம் இப்போது நிறைவுக்கு வந்துவிட்டதாகவே கொள்ளலாம்.தொடர்ந்து சில நாட்களாக அரசியல் நோக்கர்களுக்கே தெளிவின்றி காட்சியளித்த அரசியல் குட்டை இப்போது ஒருவாறு தெளிவுக்கு வந்திருப்பதைக் காண முடிகிறது.
இந்த நேரத்தில் திடீரென்று இசை ஓய்ந்தபோது இருக்கை இல்லாமல் களத்தை விட்டே வெளியேறிய ம திமுக வின் நிலை துரதிஷ்டமானதுதான்.
முன்னெப்போதும் போல இந்த கூட்டணி பேரம் இந்த முறை அத்தனை இலகுவாக முடிந்திட வில்லை.பெரிதும் வலுவாக கருதப்பட்ட
திராவிட இயக்கங்களே தங்கள் சந்திக்க நேர்ந்த சமீப கால தடுமாற்றங்களால் கூட்டணிக்கட்சிகளிடையே தங்கள் தொகுதிகளை 
பெரிதும் இழக்க நேரிட்டிருக்கிறது.
கணிசமான தொகுதிகளப் பெற்று அரசியலில் தங்கள் உயிரோட்டங்களை வெளிப்படுத்த கூட்டணியில் கூடிய கட்சிகளனைத்தும் 
மிகுந்த மனக்காயங்களுடனே இணைந்திருக்கின்றன.உளமார ஒரு கட்சியும் ஒன்றிணயவில்லை என்பதையும் உணர முடிகிறது.
தேர்வுக்கு முதல் நாள் விழுந்து விழுந்து படிக்கும் மாணவனைப்போல ஆளும் திமுகவோ மிச்சமிருக்கிற திட்டங்களை முழு வீச்சில்
செயல் படுத்த துவங்கியபோது தேர்தல் ஆணையத்தின் நன்நடத்தை விதிமுறைகள் எட்டுதிசைகளுக்கும் சீறத் துவங்கிவிட்டன.
தனியுரிமை பெற்ற தேர்தல் ஆணையம் தேவைக்கதிகமான அதிகாரங்களை அள்ளிக் கொண்டு மக்களின் இயல்பையே செயலிழக்கச் செய்து விட்டது. இதற்கிடையே ஏற்பட்ட நீதிமன்றங்களின் தலையீடு வரவேற்கதக்கதுதான்.

சாலைகளின் பள்ளங்களை நிரப்ப( பைகளை நிரப்பி )
ஓரங்களில் குவிக்கப்பெற்ற கட்டுமான பொருள்கள் கேட்பாரற்று இப்போது கொட்டிக் கிடக்கிறது.
வங்கிகள் வழங்கும் மகளிர்க்கான சுயுதவிக்குழு சுழல் நிதிகள் நிருத்தப்பட்டுவிட்டன
வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி பெட்டி தருவேன் என்று என்றோ அறிவித்த திட்டத்தில் கடைசியாக கொள்முதல் செய்யப்பெற்ற
தொலைக்காடசி பெட்டிகளின் நிலை இனி பரிதாபத்துக்குரியதுதான்.
கையூட்டு கொடுத்து பெறப்பட்ட அரசு வேலைகள் அல்லது ஆணைகள் கைக்கு வந்து சேரவில்லை.
வங்கிகணக்கில் அவசரத்துக்கு எடுக்கப் பெற்ற பணத்துக்கு தேர்தல் ஆணையம் கணக்கு கேட்கிறது. 
நகரின் கல்யாண மண்டபங்களையும் வாடகை உஊர்திகளையும் ஆணையம் தன் வசதிக்கு பறித்துக்கொண்டு விட்டது.
ஆடு கோழிகள் கணக்கிடப்படுகின்றன.
பிரியாணிக்கு விலை சொல்லுகிறது.
டீ வடைக்கான செலவுக்கணக்குகளை முன்னதாகவே கேட்கத்துவங்கிவிட்டது.
ஏற்கனவே பல்வேறு சங்கடங்களுக்கிடையே நகரின்முச்சந்தியில் நிற்கிற அல்லது உட்கார்ந்திருக்கும் தலைவர்கள் சிலைக்கூட
துணி போட்டு மூடமுயன்றிருக்கிறது தேர்தல் ஆணையம்.
கைகளை உயர்த்தி ஆங்காங்கே வைக்கப் பெற்றிருக்கிற அண்ணா எம்ஜியார் சிலைகள் ஒருவேளை நன்நடத்தை விதிகளுக்கு ஊறு விளைவித்திடுமோ என்ற அச்சமாக கூட இருக்கக்கூடும்.

மொத்தத்தில் வேட்பாளர்களை நிராயுதபாணியாக களத்தில் இறக்கி வேடிக்கை பாற்கிறது.சட்டங்களும் திட்டங்களும் தவறுகளைத் தடுத்திடவும் மக்கள் உரிமைகளைக்காத்திடவுமே வகுக்கப்படுவதாக படித்திருக்கிறேன்
எப்போதும் இல்லாத இத்தனை அதிகாரங்கள் இவர்களுக்கு யார் கொடுத்தது.
.
இடுகை 0044




Labels: ,

Wednesday, 2 March 2011

செல்ல தமிழுக்கு சேர்ந்த சிறப்பு !

                                         பாண்டியன்ஜி                                                                                                      
சாகித்திய அகாதமி விருது நாஞ்சில் நாடனுக்கு மயிலை நாஞ்சில் மலர் - நண்பர்கள் இணைந்து கொண்டாடிய பாராட்டு விழா

கடந்த மாதம் 26 ஆம் தேதி (26 02 2011) சனிக்கிழமை மாலை.

பல்வேறு சூழல்களில் குமரி மாவட்டத்தின் நாஞ்சில் நாட்டுப் பகுதியிலிருந்து சென்னை நகருக்கு இடம் பெயர நேர்ந்த நண்பர்கள் சிலர் சமீபத்தில் சாகித்திய அகாதமி விருதுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு ஒரு பாராட்டு விழா நிகழ்த்திட மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் குழுமியிருந்தனர்.
முன்னதாகவே ஏற்றுக்கொள்ளப் பெற்ற வேறு சில அலுவல்களை முடித்துக்கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் மயிலை கபாலீசுவரர் பேரூந்து நிறுத்தத்தில் இறங்கினேன். மொழி இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவனாக இருந்தபோதிலும் சென்னை புறநகர் வாசியான எனக்கு இது போன்ற வாய்ப்புக்கள் கிட்டுவதேயில்லை. அப்படியே கிட்டினாலும் தூரத்தையும் நேரத்தையும் கருதி முன்னதாகவே வெளியேற வேண்டியிருக்கும்.
பேரூந்திலிருந்து இறங்கி தெற்கு மாட வீதி வழியாக மொல்ல நகரத்துவங்கினேன். மயிலை திருக்குளத்தையொட்டி அமைந்த அந்த வீதி மனதிற்கிதமான மாலைப்பொழுதில் ஒரு சுகமான அநுபவமாக இருந்தது. அருகே அமைந்த வங்கக் கடலும் நீர் நிறைந்த திருக்குளமும் வீசுகின்ற தென்றலுக்கு குளுரூட்டின.   வண்ணவண்ண விளக்குகள் ஒளியை உமிழ வணிக நிறுவனங்கள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கின.   மணிக்கு மணி பெட்ரோல் விலை உயர நேர்ந்தாலும் இந்த வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டேதான் இருந்தது.  வீதியின் இருபுரமும் நடைபாதையை விழுங்கிக்கொண்டு முளைத்திருந்த காய் கனி மற்றும் பல்வேறு கடைகள் பரபரப்புடன் காணப்பட்டன.    இப்போது மாவடுக்கள் வரத்து துவங்கியிருக்கிறது போலும்.வரிசை வரிசையாக பல்வேறு கடைகளில் சீரான வடிவங்களில் மாவடுக்கள் கொட்டப்பட்டிருந்தன.  ஒவ்வொன்றுக்கும் கோயமுத்தூர் பாலக்காடு என்றெல்லாம் பெயர்கள் கூட
சூட்டியிருந்தார்கள். குறுக்கும் நெடுக்குமாக அலைமோதிய மனித திரளில் என்னால் நகர்ந்து மட்டுமே செல்ல முடிந்தது.  தெற்கு மாட வீதி முடிவுரும்போது குறுக்கிடும் கிழக்கு மாடவீதியில் வடக்குப்பக்கம் திரும்பி பத்து பதினைந்து வணிக நிறுவனங்களை கடந்தால் பாரதிய வித்யா பவன் கிழக்கு நோக்கி நிமிர்ந்து நிற்கிறது.  உள்ளே நுழைந்த நான் ஒரு கணம் தயங்க நேரிட்டது. சரியான இடந்தானோ என்றொரு அய்யமும் எழுந்தது. நாளை நிகழப்போகும் ஒரு திருமணத்துக்கு இன்று நிகழும் வரவேற்பு வைபவத்துக்கு கூடியிருக்கும் குடும்பங்களைப்போல் முதியவர்களும் இளம் ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் குறுக்கும் நெடுக்குமாக புத்தம் புதியராய் காணப்பட்டார்கள்.
ஆனால் அடுத்த கணம் அரங்கின் முன் வாயிலில் விரிக்கப்பட்டிருந்த புத்தக வரிசைகளைக் கண்டபோது சரியான இடத்திற்கு வந்திருப்பதை உணர முடிந்தது.
வாங்க..மொதல்ல காபி சாப்பிடுங்க...
ஒரு வயதான முதியவர் அன்புடன் விளித்து அரங்கின் பக்கவாட்டுகுக்கு அனுப்பி வைத்தார். பல்வேறு தானியங்களைக்கொண்டு மாவில் மூழ்கி எண்ணையில் பொரித்தெடுத்த சுளியன் போன்ற இனிப்புடன் வெங்காய சருகுகளினால் ஆன பக்கோடாவைக் கொடுத்து சுவையான காப்பியும் வழங்கினார்கள்.முழுதும் குளிரூட்டப் பெற்ற அரங்கினுள் ஆண்களும் பெண்களும் நிறைந்து காணப்பட்டார்கள்.   அவர்கள அனைவரும் ஒருவருக்கொருவர் அளவளாவிக்கொண்டிருந்தது அவர்கள அனைவரும் முன்பே அறிந்தவர்களாகவோ அல்லது ஒரே மண்ணைச் சார்ந்தவர்களாகவோ இருக்கக்கூடும் என்று உணர்ந்தேன்.    என்னைப்போன்று மொழிமீது மட்டுமே ஆசை கொண்டு இந்த நிகழ்வுக்கு வந்திருந்த வேறு சிலரும் ஆங்காங்கே காணப்பட்டார்கள்.
பெரும்பாலான சமயங்களில் இது போன்ற இலக்கிய நிகழ்வுகள் முழுதும் வரட்சியாகவே நிகழ்ந்து கண்டிருக்கிறேன்.இப்போதெல்லாம் புதிய நூல்களை வெளியிடுகிற பதிப்பகங்களகூட குளிரூட்டப்பட்ட அரங்குகளில்
சிற்றுண்டியுடன் சிறப்பாகவே நடத்துகிறார்கள்.
வெளியிடப்பெருகிற நூல்களில் போதுமான தரமும் உயர்வும் இருக்கிறதோ இல்லியோ விழா நிகழ்வுகள் உயர்ந்தே காணப்படுகிறது,
விழா சரியாக ஆறு மணிக்குத் துவங்கியபோது விழா நாயகனை பாராட்டுரைக்க பத்துக்கு மேற்பட்ட தமிழறிஞர்கள் வரிசையாக காத்திருந்தனர் .அத்தனை பேரும் ஒவ்வொரு வகையில் தமிழுக்கு அணிசேர்த்து தமிழால் உணரப்பட்டவர்கள். நாயகன் நாஞ்சில் நாடனோ ஒரு மேனிலைப்பள்ளி ஆசிரியன் போல் பளிச்சென்று முன்னதாகவே வந்திருந்தார்.  வாழ்த்துரை வழங்கி ஒரு அறிஞர் குறிப்பிட்டது போல நூல்களை யாத்தளிக்கும் அறிஞர்களுக்கு விழாக் குழுவினர் பளபளப்பான பொன்னாடை போர்த்தி மகிழ்ந்தனர்.   எழுத்துக்களில் குறட்பா போன்று குறுகிய வாக்கியங்களில் இலக்கியம் படைக்கும் நாஞ்சில் நாடனுக்கு வள்ளுவன் வடிவத்தை வழங்கி சிறப்பித்தனர்.
போற்றிப்பேசிய பெரும்பாலோர் நாடனின் எழுத்துக்களில் காணப்பொறும் நேரிய சிந்தனையையும் புதிய கோணத்தையும் பெரிதும் புகழ்ந்தனர்.
நாடனுக்கு வழங்கப்பட்ட இந்த விருது எப்போதோ வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று தன் சினத்தை பதிவு செய்த முனைவர் தாயம்மா அறவாணன் காலச்சூழலில் தான் பிறந்த மண்ணில் மூடிப்போன மறபுகளையும் வழக்குகளையும் தேடித்துருவி எத்தனை லாவகமாய் எழுத்துக்களில் கையாண்டிருக்கிறார் என்று வியந்து வியந்து போற்றினார்.
 தன் இயல்பான குணத்தால் மாவட்டம் மாவட்டமாக சுற்ற நேர்ந்த தன் தந்தையார் இலக்குவனார் நாஞ்சில் மண்ணில் பேசப்படும் சொற்கள்மூலம் தொலகாப்பியனின் குரலையே கேட்டதாக பேராசிரியர் மறைமலை இலக்குவனார் பூரித்துப்போனார்.
வங்கி அதிகாரியாய் இருந்த வரலாற்று கட்டுரையாளர் பத்பநாபனோ இன்னும்
பல படி மேலே தாவி தொல்காப்பியத்திலும் திருக்குறளிலும் காணக்கிடக்கின்ற சொற்கள் இன்னும் வேறு எந்த மண்ணிலுமின்றி நாஞ்சில் மண்ணில் நிறைந்து கிடக்கிறது என்று கூறி வள்ளுவனும் தொல்காப்பியனும் தோன்றியது நாஞ்சில் மண்ணே என்று வாதிட்டார்.அது மட்டுமின்றி திருஞானசம்பந்தரும் அகத்தியனும்அவ்வையும் கூட இந்த மண்ணின் வித்துக்களே என்று அடிமடியிலே கையை வைத்தார்.
விழாவில் உரையாற்றிய பெரும்பாலோர்அறிவிக்கப்பெற்றிருக்கிற விருது எப்போதோ வழங்கப்பட்டிருக்கவேண்டுமென்று பேசி நாடன் வட்டாரவழக்கை கையாண்டிருக்கும் நேர்த்தியை பெரிதும் வியந்தனர்.
அகாதமியின் விருது இப்போதாவது கிடைத்ததே என்று மகிழ்வு கொள்ளத்தான் வேண்டும்.    ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் எழுத்துக்களின் பல்வேறு சிறகுகளில் பயணம் செய்துகொண்டிருக்கிற சொந்த
மண்ணைச்சார்ந்த ஒரு எழுத்தாளனை அடையாளம் காட்ட ஒரு சாகித்திய அகாதமி தேவைப்பபட்டிருக்கிறது என்பதையும் எண்ணிப்பாற்க வேண்டும். அகாதமி விருதுக்கு அறிவித்த பின்தானே இந்த எழுத்தாளனை பெருவாரியான தமிழ் முகங்கள் திரும்பிப் பாற்க முயன்றிருக்கிறது
.பத்திரிக்கைகள் பக்கங்களில் இடம் ஒதிக்கியிருக்கின்றன.    எத்தனையோ இடருகளுக்கிடையே (சிலருக்கு இடருகள் முக்கியமற்றதாக தோன்றலாம் ) மொழியையும் மொழிக்குதோள் கொடுத்த வேர்களையும் மறக்காமல் அணி செய்யும் கலைஞர் அரசு கூட உறக்கத்திலிருந்து விழித்து கலைமாமணி விருதை நாடனுக்கு அறிவித்திருக்கிறது.
ஒரு மொழியின் வளற்சிக்கு வட்டார வழக்கு எத்தகய தீங்கை விளைவிக்கும் என்று உறுதியாக உணர்ந்திருந்தாலும் மண்ணின் வழக்கு மொழியில் நானும் மயங்கிக்கிடப்பவன்தான்.குடி குடியைக் கெடுக்கும் என்பதை உணர மட்டுமே முடிகிறது.
புகை ஆரோக்கிய ஆயுளுக்கு பகை என்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ள மட்டுமே முடிகிறது.
வட்டார வழக்கு கையாளுகிறவனுக்கும் வாசிக்கிறவனுக்கும் ஒரு போதைப்பொருள்.  நிகழ்வுகளை வட்டார வழக்கில் வடிவமைக்கப்படும்போது காட்சிகள் ஒளிப்படம் போன்று கண்முன் விரிகிறது என்பது
மறுக்கத்தக்கதல்ல.    இருந்த போதும் ஒரு மண்ணின் சுவையை அந்த மண்ணில் விளைந்தவர்களால் மட்டுமே முழுமையாக உணரக்கூடும்.  அகாதமி தேர்வுக்குழுவில் அந்த வழக்குகளை உணர்ந்தவர்கள் இடம் பெற்றிருந்தால் மட்டுமே இது போன்ற புதினங்கள அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படும்.  உலகெங்கும் ஆங்கில இலக்கியங்கள் மட்டுமே பரவிக்கிடப்பது எல்லாரும் உணரப்பட்ட வழக்கில் அமைந்தது கூட காரணமாக இருக்க கூடும்.
நாஞ்சில் நாடனின் விருதுக்கு காரணமான சூடிய பூ சூடற்க சிறுகதைத்தொகுப்பை வாங்கிக்கொண்டு திரும்புகிறேன். எனினும் சாகித்திய அகாதமி மயக்கம் தொடர்கிறது.
இந்திய அரசு ஆண்டுதோரும் தெரிவுசெய்து அறிவிக்கப்படுகிற சாகித்திய அகாதமி விருது எழுத்துலகில் சஞ்சாரம் செய்யும் அத்தனை எழுத்தாளர்களுக்கும் ஒரு தீராத கனவுதான்.   அதன் விளைவாகவே ஒவ்வொருமுறை விருது அறிவிக்கப்படும் போதும் மாறுபட்ட கூச்சல்கள் எழும்பி சலித்து ஓய்வதைக் காணமுடிகிறது.    இன்றைய சமூகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட குழு உருப்பினர்கள்தாம் விருதினை முடிவு செய்கிறார்கள்.   தவறுகள் தவிற்க இயலாத ஒன்றுதான்.
1955 ல் சொல்லின் செல்வர் ரா.பி சேதுப்பிள்ளையின் தமிழ் இன்பத்தில் துவங்கி கடந்த ஆண்டு கவிஞர் புவியரசுவின் கையொப்பம் வரை 59 எழுத்துச் சிற்பிகளை அகாதமி பெருமைப்படுத்தியிருக்கிறது.   இடையே என்ன
காரணத்தாலோ அய்ந்து ஆண்டுகள் விருதுக்காக எவரும் அறிவிக்கப்பெறவில்லை.
இந்த ஆண்டிற்கான ( 2010-2011 ) விருது முப்பது ஆண்டுக்கு மேலாக சிறுகதை நாவல் கட்டுரை கவிதை என்று மொழியின் பல்வேறு பரிணாமங்களில் சஞ்சரித்த எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது பெரிதும் மகிழ்வுக்குரியதே.
ஒரு சில சமயங்களில் விருதுகள் கொடுக்கப்படாமல் வாங்கவும்பட்டிருக்கின்றன. வாங்கப்பட முடியாமலும் இருந்திருக்கின்றன.இதற்கு எத்தனையோ பின்பலம் நிறைந்த வலுவான அரசில் தளங்களில் ஆதிக்கம் செலுத்துகிற எழுத்தாளர்களுக்கு கிட்டாமல் இருப்பதை நோக்கலாம். இருந்த போதிலும் விருது பெற நேர்ந்தவரில் பெரும்பாலோர் சாதனையாளர்தாம் என்று நிறைவு கொள்ளலாம்.
                  
ஒரு சமயம்
பெர்நாட்சா என்று நினைக்கிறேன்.
ஆங்கில அரசின் மொழிக்கான உயரிய விருதை அவருக்கு அறிவித்தபோது ...
எப்போதோ பெற்றுக்கொண்டேன். இரண்டாவது முறையா...அபத்தம் ! - என்றாராம்.
படைப்பாளனுக்கு எப்போதுமே தலைகனமுண்டு என்று சொல்லுவதை கேட்டிருக்கிறேன்.
ஆனால்..இத்தனை கனமா..? 

இடுகை 0043
-----------------------------------------------

வாழ்த்துக்கள்.

Labels: ,