Monday, 28 March 2011

சாயம் போன செங்கொடி ( மூன்று )

 (  இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் தவிப்பு )
  பாண்டியன்ஜி

காங்கிரஸ் இயக்கத்துக்கு அடுத்தபடியாக எனக்கு அறிமுகமான அரசியல் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே.  அன்று , இப்போது போலல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து பிரிவுகளும் ஒன்றாயிருந்த காலம். நான் திருத்தருப்பூண்டி அரசு மேல் நிலைப் பள்ளியில் நுழைந்திருந்த சமயம். ஒன்று பட்ட தஞ்சை மாவட்டம் காவிரியின் கருணையால் கண்ணுக்கு எட்டிய வரை பச்சைப் பசேலென்று விரிந்து கிடந்தது. காவிரியின் கடைமடைப் பகுதியான தஞ்சை முழுதும் ஆறு குளம் குட்டைகள் அத்தனையும் நீர் நிறைந்து விவசாய விளைச்சல் சிறப்புற்றிருந்தது.மாவட்டம் முழுதும் இருந்த விளை நிலங்களில் பெரும்பகுதி தனிப்பட்ட பெருநிலக்கிழார்கள் வசமிருந்தது.வஞ்சனையின்றி உழைத்த தாழ்த்தப்பட்டோரும் வாழ்க்கையை நகர்த்த குடும்பத்துடன் கொத்தடிமைகளாக சேறுகளில் சிக்கியிருந்த தலித்துகளும் அன்றைய பசுமைப் புரட்சிக்கு காரணமாயிருந்தார்கள்.அன்றைக்கெல்லாம் இன்றுபோல பணியில் காலத்தை நிர்ணயிக்க கை கடிகாரங்கள் அவர்களுக்கு சாத்தியமாயிருக்கவில்லை.சூரியனின் உதயமும் அடுத்து நேருகிற அஸ்தமனமும் மட்டுமே அவர்களுக்கான பணி நேரங்களை நிச்சியித்தன.
ரஷ்ய மண்ணில் அப்போது நிகழ்வுற்ற அக்டோபர் புரட்சியும் அதனைத்தொடர்த்து ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களும் படித்த இந்திய இளைஞர்களால் கவரப்பட்டு இந்த மண்ணில் துளிர்த்ததுதான் இந்திய கம்யூனிட் கட்சி.காங்கிரஸ் இயக்கத்திலிருந்து பிரிந்து போன பல் வேறு இயக்கங்களுள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஒன்று என்று சொல்லலாம்.இன்று போல தனிநபர் அலட்சியம் கருதி புதுப்புது கட்சிகள் தொடங்கப்பட்டதாக நினைவில்லை.புதிதாக பிறந்த கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை மாவட்டம் முழுதும் அபரிதமாக குவிந்து கிடத்த விவசாய தொழிலாளிகளை எளிதாக அள்ளிக்கொண்டது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போதெல்லாம் திருத்தருப்பூண்டி தெற்கு வீதியில் மிகப் பெரிதான கூட்டங்களை சேர்த்துக் காட்டியது கம்யூனிஸ்ட் கட்சி என்றே சொல்லாம். திராவிட இயக்கங்கள் முழுமையாக 
நகருக்குள் நுழையாதிருந்த நேரம். மணலி கந்தசாமி , கல்யாணசுந்தரம் , வி.பி சிந்தன் , ஜீவா , இராமமூர்த்தி எ .கே. கோபாலன் , டாங்கே , நம்பூதிரிபாட் , ரணதிவே என்று பலவேறு 
பெருந்தலைவர்கள் எல்லாம் பேசி பார்த்திருக்கிறேன். நகரைச்சுற்றி நாலா புரமும் 40 மைலில் சூழ்ந்திருந்த கிராமங்களிலிருந்து தலித் ஆண்களும் பெண்களும் , குழந்தைகளுடன் கூட்டங்களுக்கு வரிசை வரிசையாக அழைத்து வரப்பட்ட காட்சியை வியப்போடு பார்த்திருக்கிறேன்.அந்த அழியா நினைவுகளே தேர்தலுக்கு தேர்தல் திருத்தருப்பூண்டி , நாகபட்டணம் , மன்னார்குடியென்று கூட்டணிக்கட்சிகளிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இன்றும் நடையாய் நடக்க காரணமாயிருந்திருக்கிறது.
அன்நாளைய கம்யூனிஸ்ட் இயக்கங்களில் முக்கியமான முழக்கங்களாக நான் அறிந்த வரையில் ரஷ்யாவைப் பார் , சீனாவைப்பார் என்ற ரீதியில்தான் இருந்தது. ரஷ்யாவையும் இரும்புத் திரை கொண்டு மூடப்பட்ட சீனாவையும் மானசீகமாக கண்டு பூரிப்படைந்த கம்யூனிஸ்ட்டுகள் இந்த மண்ணை குனிந்து காண மறந்து போனார்கள். இந்த மண்ணின் பொருளாதார ஏற்ற தாழ்வை கையில் எடுத்தவர்கள் சமுதாய சீர்கேடுகளை மறந்து போனார்கள்.
ஜாதி மத வேறுபாடுகளில் மூழ்கி இந்த சமுதாயம் பல் வேறு கூறுகளாக சிதைந்து கிடந்த அவலங்கள் அவர்கள் கண்களுக்கு புலப்படாமற் போயிற்று. முந்தி பிறந்த நம் மொழியின் சீர்கேடுகள் அவர்களுக்கு பெரிதாகத்தோன்றவில்லை.ரஷ்யாவும் சீனாவும் மட்டுமே இவர்களின் கற்பனை பிரதேசங்களாயிற்று.
அன்னிய மண்ணிலிருந்து கிருத்துவ மதத்தை போதிக்க தென்னிந்திய கடலோரம் வந்திறங்கிய அய்ரோப்பிய மத
குருமார்கள் என்ன செய்தார்கள்?
முதலில் இநத மண்ணையும் மண்ணின் மொழியையும் நேசித்து அடிமட்ட மக்களின் அவலங்களில் பங்கெடுத்து
அதன் பின்தான் கிருத்துவக் கொடிகளை ஏற்றத்துவங்கினர். அப்படி வளர்ந்ததுதானே கிருத்துவ மதம்.மதத்தைப்பரப்ப வந்த பெருமகனாரில் பலபேர் மொழித்திறனிலும் கலாசாரத்திலும்
மயங்கி தமிழ் மண்ணுக்குத் தொண்டாற்றி மக்களின் மனதில் மாறா இடம்பிடித்ததை மறந்திடமுடியாது.
ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் எடுக்கத்தவறிய ஆயுதங்கள் பின்னாளில் உதயமான திராவிட இயக்கங்களுக்கு வித்தாயிற்று. விதி விலக்காக தமிழகத்தின் தென் கோடியில் பிறந்த ஜீவா இல்லையென்றால் அன்று நாஞ்சில் நாட்டில் உதயமான ஒரு தமிழ்கூட்டமும் தலையெடுக்காமற் போயிருக்கும். இருந்த போதும் எனக்கிருந்த வருத்தமெல்லாம் இவர்கள் தமிழில் பாரதியைத்தாண்டி எட்டிப் பாற்கவேயில்லை என்பதுதான். பாரதிதாசன் இவர்கள் கண்களுக்கு புலப்படாமலே போனார் என்பதுதான்.1962 ல் இந்தியா சீனாவை போரில் சந்திக்க நேர்ந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக
பிளவு பட நேரிட்டது.ரஷ்யாவையும் சீனாவையும் பார்க்கச்சொன்னனவர்கள் இப்போது தனித்தனியாக பார்க்கத்
துவங்கினார்கள்.
அன்று கம்யூனிஸ்ட்டுகள் எடுக்க மறந்த மிச்சமுள்ள ஆயுதங்களை இன்று புதிதாய் பிறந்த கட்சிகள் எடுத்துக் கொண்டுவிட்டன. கம்யூனிஸ்ட்டுகள் நிராயுதபாணியாக்கப்பட்டுவிட்டதாகவே எண்ணுகிறேன். பல்வேறு தொழில் நிறுவனங்களில் நிகரின்றி கோலோச்சிய நிலையும் இழக்க நேரிட்டது.
அதுமட்டுமின்றி ராமமூர்த்தி , மணலி கந்தசாமி , எ.கே கோபாலன் , கல்யாணசுந்தரம் , வி , பி சிந்தன் போன்ற துணிவும் ஆற்றலும் மிக்க தலைவர்கள் மீண்டும் தோன்றாதது தமிழக கம்யூனியூனிஸ்ட்கட்சிக்கு ஏற்பட்ட துரதிஷ்டம். அதைவிட துரதிஷ்ட்டம் முன்னுக்கு பின் முரணாக பேசுகின்ற தற்போதைய தலைவர்கள் . 
அதன் பலனாகத்தான் தொண்டர் சக்தியை பெருவாரியாக இழந்த இந்த இயக்கங்கள் இரண்டொரு தொகுதிகளுக்காக திராவிட இயக்கங்களிடம் மண்டியிட்டு அரசியல் செய்ய நேர்ந்திருக்கிறது.அதுமட்டுமின்றி மிச்சமிருந்த இளைஞர்களில் பெரும்பாலோர் தனித்தனி குழுக்களாக பிரிந்து தாங்களே உண்மையான கம்யூனிஸ்ட்டுகள்
என்று அறைகூவுவதையும் காணமுடிகிறது.
இருந்தபோதும் இந்த மண்ணின் விடுதலைக்கு முன் ஏற்பட்ட இந்திய கம்யூனிஸ்கட்சியின் இன்றைய நிலை வருந்தத்தக்கதுதான். ஏறத்தாழ 1952 லிருந்து இந்த தேசத்தில் ஒரே சின்னத்தில் போட்டியிடுகிற அரசியல் இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியே. இன்றைய சூழலில் இவர்களிடையே நேருக்கு மாறான அணுகுமுறைகள்
அதிகம் இருப்பதாக தெரியவில்லை. இரண்டொரு தொகுதிகளுக்காக இன்று முச்சந்தியில் அலைவதைத் தவிற்து சிதைந்துகிடக்கும் சக்திகளை ஒன்றிணைத்து மிகப் பெரிய மாற்று சக்தியாக உருவெடுக்கலாம் என்று தோன்றுகிறது. முயற்சிப்பார்களா என்று பார்க்கவேண்டும்.
தமிழகத்தைப்பொருத்தவரை இவர்கள் ஆட்சியை நம்மிடம் கேட்கவுமில்லை .அதற்கான அவசியம் நமக்கு ஏற்படவுமில்லை. இரண்டொரு தொகுதிகளைத்தான் கேட்கிறார்கள்.
இந்த நேரத்தில் ஒன்றை எண்ணிப்பார்க்கிறேன்.
அன்னிய மண்ணில் கம்யூனிஸ் நாடுகள் தங்கள் உடைகளைக் களைந்து தோற்றங்களை மாற்றிக்கொண்டு விட்டன.இந்திய கம்யூனிஸ்டடுகள் திசை தெரியாமல் நிற்கின்றன.ஆனால் மனிதாபமானத்தை போதித்த மார்க் சீயம் தோல்வியுறவில்லை.இன்னும் இந்த மண்ணில் படித்த முதியவர்களிடத்தும் புதிதாய் தோன்றிய இளைஞர்களிடத்தும் ஆழ் மனதில் ஊறிக்கிடக்கிறது.
அன்று அண்ணாவைச் சந்திக்கின்ற வாய்ப்பு இல்லாமல் போயிருக்குமானால் தஞ்சை தரணியில் ஒரு கம்யூனிஸ்ட்டாக போயிருப்பேன் என்பதையும் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டி மகிழ்ந்ததையும் கலைஞர் கருணாநிதி இன்றும் பேசக்கேட்டிருக்கிறேன்.
தமிழகத்தைச்சூழ்ந்திருக்கும் இருள் விலக விலக கழகக்கொடியில் உள்ள கருப்பு குறைந்து ஒருகாலத்தில் உண்மையான கம்யூனிஸ்ட்டாக செங்கொடி ஜொலிக்கும் என்று அண்ணா முழங்கியது மார்க்ஸியத்தில் இந்த 
மண்ணுக்கு உள்ள அழியா நம்பிக்கையையே வெளிப்படுத்துகிறது.
அண்ணா சொன்னது நிகழப்போகிறதோ என்னவோ இன்று செங்கொடியின் சாயம் கலைந்து போனதுதான் உண்மை .
-----------------------------------------
இடுகை 0046


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home