Wednesday, 26 January 2011

எழுத்துச் சுரண்டல் !

                                பாண்டியன்ஜி
கடந்த 17 ஆம் தேதி முடிந்துபோன 34 வது சென்னைப்புத்தகக் காட்சியில் நான்கய்ந்து புத்தகங்களைத் தேடித்தேடி வாங்கினேன். பெரும்பாலும் உலக வரலாற்று நிகழ்வுகளை சித்தரிக்கும் புத்தகங்கள்தாம். இயல்பாகவே மண்ணின் சரித்திரங்களையும் மொழியின் எழுச்சியையும் அறிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவனாகவே இருந்திருக்கிறேன்.புதினங்கள் மீது நான் கொண்டிருந்த மிகுதியான ஆர்வமே கூட என் ரசனைக்கு தலையாய காரணமாக இருக்கக்கூடும்.
நான் வாங்கிய நூல்களில் இரண்டு சென்னையைச்சேர்ந்த கிழக்கு பதிப்பகம் வெளியிட்டவை. இரண்டுமே நான் மிகுதியாக அறிந்து கொள்ள ஆவலைத்தூண்டிய தனிமனித சாகசங்களை அடிப்படையாக கொண்டவை.ஒன்றை ரைட்டர் முகிலும் மற்றொன்றை ரைட்டர் மருதனும் எழுதியிருந்தார்கள். ஏரத்தாழ 180 பக்கங்களில் எழுதப்பட்ட அந்த நூல்கள் இரண்டுமே என் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை.   மிகுந்த எமாற்றத்தையே அளித்தது.இந்த நூல்கள் இரண்டுமே அயல் மொழிகளில் சுயமாக எழுதப்பெற்ற படைப்புகளின் மொழிபெயற்பாக இருக்கக்கூடும் என்றே எண்ணியிருந்தேன்.இந்த நூல்களைப்பார்த்த பிறகு படைப்பிலக்கியத்தில் தவறான ஒரு பாதை காட்டப்பட்டு விட்டதாகவே எனக்குத் தோன்றியது. இது போன்ற நூல்களை வேறு பல பதிப்பகங்களும் பதிப்பித்திருக்கக்கூடும்.
இந்த புத்தகத்தின் நான்காவது பக்கத்தில் பதிப்பு சார்ந்த தகவல்களுடன் வழக்கமாக அச்சிடப்பெரும் வாக்கியங்களும் இடம் பெற்றிருந்தது.

all wrights relating to this work rest with the copyright holder.except for reviews and
quotations,use or republication of any part of this work is prohibited under the copyright act,without the prior written permission of the publisher of this book

பெரும்பாலும் இது போன்ற மிரட்டல்கள் மற்றவர்களுக்குத்தான்.  மற்றபடி இதில் சொல்லப்பட்டநேர்மை நூலைப்படைத்த ஆசிரியற்கல்ல என்பதை அறிந்தே இருக்கிறேன். பக்கங்களைப் புரட்டி இறுதிக்கு வரும்போது.. அங்கேயும் சில சான்றுகள் தரப்பட்டிருக்கின்றன.   அதாவது அவர்
ஆக்கிய நூலுக்கு அடித்தளமாக அமைந்த இருபதுக்கு மேற்பட்ட ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களின் பெயர்கள் அதன் சுய படைப்பாளிகளின் நாமத்துடன் தரப்பட்டிருந்தது.   இதுமட்டுமன்றி பல்வேறு 
இணையதள முகவரிகளும் இணைக்கப்பட்டிருந்தது.
முன்னால் தரப்பட்டிருக்கும் எச்சரிக்கைக்கும் இறுதியில் இணைக்கப்பெற்ற தகவல்களுக்கும் இடைப்பட்ட பக்கங்களில் படைப்பாளி கதை புனைகிறார். பின்னிணைப்பில் இடம் பெற்ற படைப்பாளிகள் எவரும் தம் வரிகளுக்காக ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாது என்பதை ஆசிரியர்
நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
பல்வேறு நூல்களிலிருந்து தகவல்களைத்திரட்டி ஒரு கருத்தை வலியுறுத்திச் சொல்ல எழுதப்பட்டு கல்லூரிகளிலும் ஆய்வரங்கங்களிலும் சமர்ப்பிக்கப்பெரும் ஆய்வுக் கட்டுரைகள் பற்றி கேட்டிருக்கிறேன்,
அதுமட்டுமன்றி..
ஒரு நூலின் பல்வேறு பகுதிகளை தனித்தனியாக பிய்த்தெடுத்து அணுவணுவாக ஆய்ந்து எழுதப்பெரும் திறனாய்வுக்கட்டுரைகளை கண்டிருக்கிறேன். 
சரித்திரத்தில் பதிந்துவிட்ட இரண்டொரு தடங்களைப்பற்றி கதைகள் புனையப்படுவதை படித்திருக்கிறேன்.
அயல் மொழியில் ஆக்கப்பெற்ற மொழிச்செல்வங்களை தன் மண்ணுக்கு கொணர வேர்கள் சிதையாமல் அசலுக்கு ஊறு நேராமல் மொழி பெயற்கப்படுவதை பார்த்திருக்கிறேன்.
அந்த வகையில் இந்த நூல்களை எந்த வகையில் சேர்க்கக்கூடும். இதுவும் ஒரு வகைச் சுரண்டலல்லவா.  மகாகவி பாரதி தன் கனவுகளில் ஒன்றாக உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் அயல் மொழிச்செல்வங்கள் வேருடன் கொணர வேண்டுமென்பதும் ஒன்று.  அப்படிக் கொண்டுவருவது கஜினி முகமது போல் கெள்ளையடித்தல்ல என்பதை உணர வேண்டும். 
தமிழ்த்திரைப்பட உலகில் ஒருகாலத்தில் இது போன்ற வழிமுறை ஜெமினி பிக்சர்ஸ் மற்றும் தேவர் பிலிம்ஸ் நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தது. தனியொரு எழுத்தாளனின் கதையை படமாக்கும்போது என் கதை உன்கதை என்று வழக்குகளை வீணாக சந்திக்க நேருவதைத் தவிற்கவோ என்னவோ தாங்களே அய்ந்தாறு கதைசொல்லிகளை கதை இலாக்காவாக வைத்து கதைகளை உருவாக்கியதைக் கண்டிருக்கிறேன்.  இவ்விலாக்காகளின் கதையை எதிர்த்து எவரும் வழக்கு எதனையும் போடமுடியாமற் போனதையும் பார்த்திருக்கிறேன்.
வழக்கமாக உரையாடல்களில் வெளிப்படும் கருத்துக்களும் தின வார மாத இதழ்களில் பிரசுரிக்கப்பெரும் கூற்றுகளும் அழுத்தமான ஆதாரங்களைக் கொண்டவையல்ல.   அதே சமயம் அச்சிட்டு 
வெளியிடப்பெரும் நூல்களின் நிலை அப்படியல்ல.
நூல்களில் நிரம்பியிருக்கும் கருத்துக்கள் அதிகாரபூர்வமான ஆவணங்களாகவே கொள்வதற்கு சாத்தியமாயிருந்தது. அதற்கான மூலகாரணம் பதிப்பாளர்களின் மொழியறிவும் நேர்மைத்திறனுமே.
பெரும்பாலான பதிப்பாளர்கள் அன்நாளில் கேடு விளைவிக்கும் நூல்களுக்கும் திருடப்பட் எழுத்துக்களுக்கும் வாய்ப்பு வழங்கியதே இல்லை. புத்தகங்களின் தரம் காப்பாற்றப்பட்டே வந்திருக்கிறது.அதற்கான தகுதியும் திறனும் பெரும்பாலான பதிப்பாளர்கள் பெற்றே இருந்திருக்கிறார்கள்.ஆனால் இன்று ..
நூல்கள் சார்ந்த பரந்த அறிவும்,சமூகம் சார்ந்த கண்ணியமும் இன்றைய பதிப்பாளர்களிடம் காண்பது அறிதாகவே இருக்கிறது அல்லது அறிந்தே பெருவணிகம் கருதி மரபற்ற செயல்களை ஊக்கிவைக்கிறார்கள் என்றே கருதுகிறேன். ஓரளவு தமிழில் சுயமாக எழுதவும் கணிசமான ஆங்கில அறிவும் இருக்கிற போது இது போன்ற நூல்களை வெளியிட போதுமானது என்றே கருதுகிறார்கள் என்று எண்ணுகிறேன்.
சமீபத்தில் இன்னொரு உரையாடலையும் படிக்க நேர்ந்தது.

நான் என்றுமே படைப்பாளிகளின் உரிமையில் குறுக்கிட்டதில்லை. ஒரு சமயம் பத்திரிக்கை நிறுவனமொன்றில் பணியாற்றியபோது இன்றைய சாகித்திய அகாதமியின் பரிசு வென்ற படைப்பாளி
நாஞ்சில் நாடனின் சிறுகதையை வாசிக்காமலேயே அச்சுக்கு அனுப்பி விட்டேன்.  அதற்காக அந்த நிறுவனத்தின் கடுமையான கண்டனத்துக்குள்ளாக நேர்ந்தது...

கவிஞரும் உயிர்மை பதிப்பகத்தின் உரிமையாளருமான திரு மனுஷ்யபுத்திரனின் சுயவிமர்சனமே அந்த உரையாடல். வாசிக்காமல் ஒரு படைப்பை அச்சுக்கு அனுப்பியது எத்தனை பெரிய தவறு என்பது என்னால் உணர முடிகிறது.  படைப்பாளிகளின் படைப்புக்களில் குறுக்கிடுவதில்லை என்பது உயர்ந்த விஷயமே .  இருந்தபோதும் படைப்பாளிகளின் படைப்பு சுயமானதென்றும் கண்ணியமிக்கதென்றும் தான் சார்ந்திருக்கும் நிறுவனத்துக்கு ஊறு தராதவை என்பதும் படைப்பை படித்தறியும்போது மட்டுமே அறியமுடியும்.
நீங்கள் கொண்டிருக்கும் உயரிய நோக்குதான் சமீப காலங்களில் உயிர்மை இதழில் ஒருசில வக்கிரமான எண்ணங்களை வெளிப்படுத்தும் எழுத்துக்களை நுழைக்கிறது என்றே கருதுகிறேன்.
.......................................
இடுகை 0039 

Labels: , ,

Tuesday, 18 January 2011

முடிந்துபோன 34 வது புத்தகச்சந்தை



ஜனவரி 04 முதல் 17 வரை சென்னையில் நிகழ்ந்த 34 வது புததகச் சந்தை ஒரு அகற்ற முடியாத அநுபவம்.அச்சுக் கலையின் அசுர வளற்சிக்கு ஈடு

தர இயலாமல் படைப்பாளிகள் சோம்பி நின்றதைக் கண்டேன்!
  கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கு மேலாக பிரமிக்கத்தக்க வகையில் வெற்றிகரமாக நிகழ்ந்து வரும்
34 வது சென்னை புத்தகக் காட்சியை
இந்த ஞாயிற்றுக்கிழமைதான் காண நேரிட்டது. நவம்பர் டிசம்பர் மாதத் துவக்கத்திலேயே இந்த புத்தகக்காட்சி எனக்குள் ஒருவித மனக்கிளற்சியை ஏற்படுத்தியிருந்தது.இருந்த போதிலும் எனக்கேற்பட்ட தவிற்க இயலாத பயணங்கள் இந்த கடைசி கட்ட வாய்ப்புக்குத்தான் வழி வகுத்தது.சரியாக நான்கு மணியளவில் பச்சையப்பன் கல்லூரி வளாகத்துக்கெதிரில் இருந்த பேரூந்து நிருத்தத்தில் இறங்கியபோது என்னை அறியாமலேயே என் கண்கள் வியப்பால் விரிந்தது. சாலையின் இரு மருங்கிலும் திரளான மக்கள் வெள்ளம் குறுக்கும் நெடுக்குமாக அலைமோதுவதைக் காண முடிந்தது.தார்ச்சாலையிலிருந்து காட்சி அரங்குவரை இருபுரமும் வானுயர கட் அவுட்கள்
நிறுத்தப்பட்டிருந்தன.எப்போதுமே படைப்புகளுக்குப் பின்னால் ஒளிந்து கிடக்கும் நம் எழுத்துலகசிற்பிகள் இன்று வெட்ட வெளியில் இருபுரமும் உயர்ந்து நின்று வரவேற்ற காட்சி மனதிற்கு பெரிதும் நிறைவைக் கொடுத்தது.தமிழர் திருநாள் சிறப்புற கொண்டாடப்படும் இத்தருணத்திலும் வழி நெடுக ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் நிறைந்து காணப்பட்டது வாசிப்பு உலகில் மிகுந்தநம்பிக்கையை ஏற்படுத்தியது.             ( புத்தகங்களைப் படிப்பது அப்பரம் ஆகட்டும்! )
சந்தையின் நுழைவாயிலுக்கருகில் ஏராளமான இருக்கைகளுடன் மிகப்பெரிய அரங்கம் ஒன்றும் அமைத்து தினந்தினம் புத்தகம் சார்ந்த நிகழ்வுகள் அரங்கோறிக்கொண்டிருந்தன. அவ்வப்போது இன்றைய நவீன எழுத்தாளர்களின் எழுத்துக்களும்அவசரம் அவசரமாக அறிமுகம் செய்யப்பட்டன. நான் சென்றபோது நாளின் இருபத்திநாலு மணிநேரமும் தான் எப்படி உழைக்க நேரிட்டிருக்கிறது என்பதை வழக்கம்போலவே இந்தமேடையிலும் சொல்லிக் கொண்டிருந்தார் தினமணி ஆசிரியர் திரு வைத்திநாதன்.சமீப காலங்களில் அவர் கலந்துகொள்ளாத இலக்கிய நிகழ்வுகள் இல்லையென்றே நினைக்கிறேன்.அரங்குக்கருகில் அத்தனை கூட்டத்திற்கும் ஈடு கொடுக்கும் வகையில் சிற்றுண்டி விடுதியும் குளிர் பான கடைகளும் நிறைந்து காணப்பட்டன. கழிவறை வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் நிறைவாக செய்யப்பட்டிருந்தன.
சந்தைக்குள் நூழைந்தால் ஏறத்தாழ 450 அரங்குகளுக்கு மேல் இடம் பெற்று ஒரு கணம் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு அரங்கிலும் நேர்த்தியாக அச்சிடப்பெற்ற ஏராளமான புத்தகங்கள் கொட்டிக்கிடப்பதைக்காண முடிந்தது.அத்தனை அரங்கிலும் வாசகர்கள் எதையெதையோ தேடிக்கொண்டிருப்பதைக்காணமுடிந்தது.ஒவ்வொரு அரங்கும் அழகுற அமைக்கப்பட்டு பார்வையாளர்களால் நிறைந்து காணப்பட்டது.பெரும்பாலும் காலியாக இருந்த அரங்குகளே இல்லையென்று நினைக்கிறேன். அய்ம்பது அறுபதுகளில் உச்சத்திலிருந்த எழுத்துலக சிற்பிகளின் சாகாவரம் பெற்ற படைப்புகள் அனைத்தும் மறுபிறவி பெற்று இன்றும் முதல் வரிசையில் இடம் பெற்றிருந்தன.இன்று ஏற்பட்டிருக்கும் அச்சுக்கலையின் அசுரவளற்சியில் தங்கள் எழுத்துக்கள் மின்னுவதை காணக் கொடுத்து வைக்காதவர்கள் என்று உணரும்போது மனம் நெகிழ்ந்து போகிறது. உலக இலக்கியங்கள்,வரலாற்று ஆவணங்கள்,சங்க இலக்கியங்கள், சமய சார்ந்த படைப்புகள் ,ஆத்தீக நாத்தீக விவாதங்கள்,நவீன தொழில்நுட்ப நூல்கள் என்று காணுகிற திசையனைத்திலும் படைப்புகள் பார்வையை செலுத்தியிருப்பது வியக்கத்தக்கதாய் இருந்தது.குழந்தை இலக்கியமும் புதுக்கவிதையும் எடுத்திருந்த விசுவ ரூபம் பெரும்பாலான அரங்குகளில் உணரமுடிகிறது. பல்வேறு அரங்குகளில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பயனளிக்கும் புத்தகங்கள் பெருமளவில் காணப்பட்டன.மொழி,கல்வி சார்ந்த குறுந்தகடுகளும் மொழியைக்கையாள தேவையான மென் பொருள்களும் அரங்கின் ஆங்காங்கே இறைந்து கிடந்தன. பெரும்பாலான பதிப்பகங்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே இந்த சந்தைக்கு தயாராகி விட்டிருந்ததைக் அறிந்திருக்கிறேன். நவீன எழுத்தாளர்களின் தரமான எழுத்துக்கள் இந்த பதிப்பகங்களின் பசிக்கு போதுமானதாக இருக்க வில்லை. அந்த நாளைய எழுத்தாளர்களின் படைப்புகளை புத்தகமாக்கிய பின்னும் அவர்கள் அவ்வப்போது நிகழ்த்த நேர்ந்த அவதூறு அரட்டைகளையும் அவர்களுடைய தனிப்பட்ட குடும்பம் சார்ந்த கடிதங்களையும் இலக்கியத்திறனாய்வு மற்றும் கடித இலக்கியம் என்று வகைப்படுத்தி காசாக்கமுயன்றதையும் காணமுடிந்தது.ஏடுகளில் எழுதியவை மட்டுமின்றி பொது

  பழம்பெரும் எழுத்துச்சிற்பி திரு. கி.ராஜநாராயணனுடன்..
மேடைகளிலும்  ஊடகங்களிலும் வ்வப்போது வெளிப்படுத்திய சொற்களையும் தொகுத்து விற்பனைக்கு வைத்திருந்ததை பார்த்தேன். பல் வேறு நூல்களுக்கு வெவ்வேறு காலங்களில்வழங்கப்பெற்ற அணிந்துறைகளையும் கூடவிட்டுவைக்கவில்லை. அவைகளையும் புத்தகங்களாக மாற்றி அடுக்கி வைத்திருந்தார்கள். இத்தனைக்கும் கவர்ச்சி முலாம் பூச இன்நாளைய அச்சுக்கலையின் அசுர வளற்சி பெரிதும் பயன் பட்டிருந்தது.
ஒருசில பதிப்பகங்கள் ஒரு காலத்திய ஜெமினி கதை இலாக்கா ,தேவர் பிலிம்ஸ் கதை இலாக்கா போன்று ஆசிரியர் குழு அமைத்து அயல் மொழி ஆக்கங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பொறுக்கி நூல்களை வெளியிட்டதன்மூலம் நவீன எழுத்தாளர்களுக்கு தவறான பாதையையே காட்டியிருக்கிறார்கள். இதுவும் ஒருவகையான சுரண்டல் என்பதை உணரவேண்டும்.
அனைத்து அரங்குகளையும் முழுமையாக நுகர போதுமான காலம் இல்லாமற் போய்விட்டது. விருப்பமின்றி நகர்கிறேன்.இடையிலே பழம் பெரும் எழுத்தாளரான கி.ராஜநாராயணனையும் மின்வாரிய நண்பர்கள் சிலரையும் சந்திக்ககூடிய சந்தர்பம் கிடைத்தது.
அரங்குகளையும் முழுமையாக நுகர போதுமான காலம் இல்லாமற் போய்விட்டது. விருப்பமின்றி நகர்கிறேன்.அரங்குக்கு வெளியே வியப்பு காத்திருக்கிறது.அரங்கின் எதிர் சாலையோரத்தில் நீண்டு நெடிய வரிசையில் ஏராளமான புத்தகங்கள் கொட்டிக்கிடக்கிறது.அங்கேயும்
வாசகர்கள் எதையெதையோ தேடி பொறுக்கிக் கொண்டிருப்பதைக் காணமுடிந்தது.
யானைக்கு உணவளிக்கும் போது சிதறி விழும் உணவுப்பருக்கைகள் பெரும்பாலான ஜீவன்களுக்கும் உணவாகக்கூடும் என்று கேட்டிருக்கிறேன். அது போல இந்த சாலையோர திருவல்லிக்கேணி புத்தக
வியாபாரிகளிடமும் புத்தகவிற்பனை நிகழ்ந்ததைக் காணமுடிந்தது.
மூன்று வரலாற்று மொழி பெயற்புகளையும்,பாவேந்தர் டிகேசி புதினங்களையும் தேடி எடுத்துக்கொண்டு திரும்புகிறேன்.
ஏதோ என்னவென்று புரியாத மனக்குறையோடு பேரூந்தில் திரும்புகிறேன். இந்த 34 வது சந்தை இந்தமுறையும் நம்பிக்கையளிக்கும் திசையிலேயே பயணிப்பதை உணர்கிறேன்
அச்சுத் தொழிலில் ஏற்பட்டிருக்கும் அசுற எழுச்சி இதை சாத்தியமாக்கியிருப்பதாகவே எண்ணுகிறேன்.வாசகர் ஆயுளை தொடர்ந்து விழுங்கும் தொலைக்காட்சி மற்றும் கணினியின் தாக்கங்களிலிருந்து மக்களை ஒருவாறு மீட்டெடுக்க உதவியிருப்பதைக் காணமுடிகிறது.

சந்தையில் காணப்பட்ட பெரும்பாலானபுத்தகங்கள்இவ்வுலகின் அனைத்து திசைகளிலும் பார்வையை செலுத்தியிருப்பது மகிழ்வுக்குரியது .ஏராளமான மொழிமாற்ற புத்தகங்கள் இடம் பெற்று கவி பாரதியின் கனவை மெய்பட வைத்திருக்கிறது.இருந்த போதிலும் -
மணிக்கொடி காலத்திய எழுத்துலக சிற்பிகள், அம்பது அறுபதில் தடம் பதித்த பேனா வித்தகர்கள் படைப்புகளே இன்றும் முதல் வரிசையில் இடம்பிடித்திருப்பதைக்காணமுடிகிறது. கல்கி நா.பா, ஜெயகாந்தன் படைப்புகளை விஞ்சி நிற்க இன்னும் யாரும் முயலவில்லை என்றே தோன்றுகிறது. இன்றைய எழுத்துலகில் கணக்கிலடங்கா புதுப்புது எழுத்தாளர்கள் காணப்பெரினும் நெஞ்சில் நிற்போர் ஒரு சிலரே. 34 வது புத்தக காட்சி பிரமிக்கத்தக்க கூட்டத்தை கூட்ட முடிந்த போதும் வாசகர்கள் புத்தகங்களை அள்ளிக்கொண்டு போனதை நான் பார்க்கவில்லை. ஆங்காங்கே பொறுக்கிக்கொண்டு சென்றதைதான் காணமுடிந்தது. இன்றைய எழுத்துலகில் கணக்கிலடங்கா புதுப்புது எழுத்தாளர்கள் காணப்பெரினும் நெஞ்சில் நிற்போர் ஒரு சிலரே.  அய்ம்பது அறுபதுகளில் நிகழ்த்தப்பட்ட எழுத்துலக சாதனைகள் இன்னும் அப்படியே இருப்பதகவே நினைக்கிறேன்.
---------------------------------
புத்தகம் பதிப்பகம் என்று எழுதும் போது என் நெஞ்சில் நிழலாக ஆடும் ஒரு நிகழ்வை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அய்ம்பது அறுபதுகளில் எழுத்துச் சிற்பிகள் கொடி கட்டி பறந்ததென்னவோ உண்மைதான்.வாசகர்களின் வாசிப்பு ருசியும் உச்சத்திலேயே இருந்தது.இருந்தபோதும் படைப்பாளிகளும் பதிப்பாளிகளும் பஞ்சத்தில்தான் உழன்றார்கள்.எழுத்தாளர்களுடைய சன்மானத் தொகையை ஆனந்தவிகடன் வாசனே முதல்முதலில் உயர்த்தி கொடுத்ததை பார்த்திருக்கிறேன்.

ஒரு சமயம் நகைச்சுவை பேச்சாளரும் பதிப்பாளர்களின் முன்னோடி என்று கருதப்பட்ட அரசியல் பிரமுகர் சின்ன அண்ணாமலை ஆரம்ப நாட்களில் மூதறிஞர் ராஜாஜியை சந்திக்கிறார்.

இப்ப என்ன செய்ற..


தமிழ் பண்ணை பதிப்பகம் நடத்துறேன்

அதெல்லாம் சரி ! பூவாவுக்கு என்ன பண்ற.. - என்கிறார் ராஜாஜி.
  -- அன்நாளைய எழுத்துலகின் ஜீவநாடி இப்போது புரியக்கூடும்.

சென்னையிலிருந்து....பாண்டியன்ஜி
இடுகை 0038.

Labels: ,

Friday, 14 January 2011

பூத்து குலுங்கும் புத்தாண்டும் பொங்கி வழியும் தைத்திருநாளும்

( திருவள்ளுவராண்டு  2042 )
வள்ளுவராண்டு வெளிச்சத்துக்கு வந்து இன்றோடு ஒரு ஆண்டு எப்படியோ ஓடிவிட்டது.ஏறத்தாழ பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலத்திலேயே இப்படியொரு கனவைக் கண்டு கனவு நனவாக ஓயாது குரலெழுப்பிய மூத்த தமிழறிர்களில் ஒருவர் கூட இன்று உயிரோடு இல்லையென்றே நினைக்கிறேன்.
விலங்குகளிலிருந்து விலகி சிந்திக்கும் செயல் திறன் மிக்க மனிதகுலம் தொடர்ந்து வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே வந்திருக்கிறது.அத்தகைய மாற்றங்களில் பெரும்பாலும் சமூகத்தின் சகல முனைகளுக்கும்
நல்லனவாகவும் தீயனவாகவுமே அமைந்தே இருந்திருக்கின்றன என்பதை மறுக்க இயலாது. இருந்தபோதும் கடந்த
காலங்களில் ஏற்றுக்கொண்ட மோசமான மரபுகளை தவிற்து காலத்துக்கேற்ற நன்னெறிகளை தொடர்வதே ஒரு உயர்ந்த சமுதாயத்தின் செயல்பாடாக இருக்கமுடியும்.
இந்த சமூகத்தின் அவலங்களுக்காக வாழ்நாளின் இறுதிவரை குரல் கொடுத்த தந்தை பெரியாரின் கடுமையான சொற்களை இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.
வயதிற் மூத்தவன் என்றோ உறவில் நெருங்கியவன் என்றோ கூறுவதை கேட்காதே ! மெத்த படித்தவன் என்றோ
இந்த நாட்டிற்கே முதல்வன் என்றோ அவன் கூறுவதை நம்பிவிடாதே! சுயமாக சிந்தித்து செயல்படு !
குறைந்த கல்வியையே பெற்றிருந்த தந்தை பெரியாரின் வார்த்தைகளில் கடுமை காணப்பட்டாலும் அவை இந்த சமூகத்தின் அவலங்களுக்கு ஒரு சாவுமணி என்பதை உணரவேண்டும்.ஆண்டாண்டு காலங்களாக இந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வந்த மதமெனும் பேய்கள் ஏற்றிருந்த மறபுகள் எண்ணற்றவை.ஒழுக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் அறுபது ஆண்டுகளின் பெயர் பின்புலன்களும் கணக்கியலுக்கு ஒத்துவராத ஆண்டு எண்ணிக்கையும் உதறியே வள்ளுவராண்டு பிறந்தது. அன்றெல்லாம் வழிகாட்டிகளின் ஆயுள் அத்தனை கெட்டியாக இருந்திருக்கவில்லை
சின்னாபின்னமாக சிதறிகிடந்த இந்த சமூகச்சீரழிவை சரிசெய்ய போதுமானதாக இருந்திருக்கவில்லை.இருந்தபோதும் ஒருவர் விட்ட பணியை தொடர இன்னொருவர் இருந்தபோது இந்த மண்ணும் மொழியும் 
தொடர்ந்து சீர்பெற்றே வந்திருக்கிறது.
காந்தி கண்ட கனவை நனவாக்க நேரு செயல்பட்டார். இராமகிருஷ்ணர் சிந்தனைகளை தொடர்ந்து சொல்ல ஒர்
விவேகாநந்தர் பிறந்தார். தமிழ் மண்ணில் உதித்தெழுந்த தந்தை பெரியார் அண்ணாவை நம்பினார்.அண்ணா
வடித்தெடுத்த கொள்கைகளை பரிமாற கலைஞரை விட்டுச்சொன்றார்.
கலைஞர் தூக்கிப்பிடித்த ஒளியில்இன்று திருவள்ளுவராண்டு உலகறிய இரண்டாம் அடியெடுத்து வைக்கிறது.
நகர்ந்து போன ஆண்டு பெரிமிதம் அளிக்கக்கூடிய தருணங்களையும் சங்கடமும் சஞ்சலமும் நிறைந்த
நாட்களையும் சந்தேகம் நிறைந்த வடுக்களையும் நிரம்ப விட்டுச் சென்றிருக்கிறது. பூத்து குலுங்கும் இந்த புத்தாண்டு அத்தனைக்கும் நல்ல பதில் சொல்லுமென்று நம்புவோம்.
இனிய நெஞ்சங்கள் அத்தனைக்கும் புத்தாண்டு தொடக்கத்துக்கும் தமிழர்தம் நிகரற்ற தைத் திரு நாளுக்கும் வேர்களின் ஆழமான வாழ்த்துக்கள் !
சென்னையிலிருந்து...
பாண்டியன்ஜி
---------------------------------
இடுகை
0037  தை முதல் நாள் ( 15 01 2011 )
உங்கள் மறுமொழிகளை வெளிப்படுத்தி வேர்களுக்கு உரமிடுங்கள்!.

Labels: ,