Thursday, 14 October 2010

என் வாழ்வு என் நட்பு என் கைபேசி

            (   இந்த இடுகை இண்டி பிளாகர் - டாட்டா டொக்கோமாவைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது .   )   MY  LIFE   MY FRIENDS     MYPHONES                                                                                                                                                                                                                                                                                               பாண்டியன்ஜி
நட்பு என்பது தன்னலமற்ற குணங்களின் வெளிப்பாடு என்றே கருதுகிறேன். மனிதகுலத்துக்கு மட்டுமின்றி உலகில் வாழும் அனைத்துயிர்களுக்கும் அது பொதுவானதாகவே எண்ணத்தோன்றுகிறது. இனம் மதம் மொழி இவையனைத்தையும் தாண்டி நட்பு இந்த உலகில் ஒரு ஆதிக்கம் செலுத்துவதையும் கண்டிருக்கிறேன்.சங்க காலம் முதல் சமீபகாலம் வரை இதற்கு சான்றாக பல்வேறு நிகழ்வுகளை காட்ட முடியும்.
1 ) பிசிராந்தையார் - கோப்பெருஞ் சோழனின் நட்பு..
2 ) புராண கதைகளில் சொல்லப்பட்ட கிருஷ்ணனுக்கும் குசேலருக்குமிடையே ஏற்பட்டிருந்த நட்பு..
3 ) சமீப காலத்தில் கடலில் உயிர் நீத்த தலைவனுக்காக பெருங்கடலை நோக்கி குலைத்துக் குலைத்து உயிர் துறந்த நாயின் நட்பு


இவை போன்ற நிகழ்வுகளை நம் வாழ்வில் கண்டும் கேட்டும் அறிந்திருக்கிறோம். சமுதாயத்தால் வெருக்கப்பட்டவர்களும் சமுதாயத்துக்கே சவால் விடுவோர்களும் தங்களுக்குள் நட்பு பாராட்டி வாழ்வதை இன்றும் காணமுடியும். பொதுவாக ஒத்த வயதுடையோரும் சிந்தனை செயல்களில் ஒன்றாக பயணிப்போரும் இயல்பான சூழல்களில் நெருங்கிவாழ நேருவோரும் பெருவாரியாக நட்பு கொள்ள நேரிடுகிறது. ஆயினும் இத்தகைய நட்பு எத்தனைகாலம் நீடிக்கிறது என்பதே நட்பின் பலமாக கருதப்படுகிறது.
உயரிய நட்பு எத்தன்மையானது என்பதை அய்யன் திருவள்ளுவர் தன் குறட்பாக்களில் தெளிவாக வரயறை செய்திருக்கிறார்.


                      நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
                      மேற்சென்று இடித்தார் பொறுட்டு .
                                                                                             -- குறள் 784


மகிழ்ச்சி மிகுந்த காலங்களில் சிரித்துப்பேசி விளையாடுவது மட்டுமல்ல நட்பு. நண்பன் திசை தவறி பயணிக்கும்போது அவனை இடித்துரைப்பதே நட்பிற்கான இலக்கணம் என்கிறார் வள்ளுவர். இன்றைய சூழலில் இதுபோன்றவொரு நட்பைக் காண்பதரிது. என்னைப் பொறுத்தவரை நான் பெற்ற நட்புகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் வலு பெற்றருந்தபோதும் அனேக நட்புகள் ரயில் சினேகமாகவே முடிந்திருக்கின்றன.
பிறந்து வளர்ந்த குக்கிராமத்தைவிட்டு கல்விக்காக நகரம் நோக்கி நகரும்போது --
நான் சந்திக்க நேர்ந்த பிரிவு !
பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரியில் சேர பெருநகரம் நோக்கிய நகரும் போது --
அப்போது நான் சந்திக்க நேர்ந்த பிரிவு !
கல்லூரிப்படிப்பு முடிந்து அரசுப் பணியில் சேர இடம்பெயரும்போது --
அப்போது நான் சந்தித்த பிரிவு !
பணிச்சூழலில் பல்வேறு பெரு நகரங்களுக்கு குடும்பத்தோடு இடம் பெயரும்போது --
மீண்டும் சந்திக்கநேர்ந்த பிரிவு !
இப்படி பல்வேறு சூழல்களில் எனக்கு கிடைத்த நட்புக்கள் தீரதபிரிவுகளைச் சந்திக்கவேண்டியிருந்தன. அந்நாளில் கைபேசியின் சூட்சமம் அறியப்படாதிருந்த காலம்.
இருந்தபோதிலும் ஒவ்வொரு மாறுபட்ட சூழலிலும் கணிசமான புதியப்புதிய நட்புகளைப் பெறநேர்ந்தது. ஏரத்தாழ நாற்பதுக்கு மேற்பட்ட ஆண்டு அரசுப்பணியில் எனக்கு கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் அபூர்பவமானவை. என் எண்ணங்களும் சிந்தனைகளும் எப்போதுமே எவர்க்கும் தீங்கு நேரா வழியில் பயணித்ததால் என் வாழ்வில்
நான் என்றுமே சங்கடமான சந்தர்ப்பங்களை சந்திக்க நேர்ந்ததில்லை. ஒவ்வொருமுறையும் நண்பர்களைப் பிரிய நேரும்போது அந்நாளில் அஞ்சல்த்துறை மட்டுமே எங்கள் நட்புக்கு நீர் வார்த்தது. கடிதங்களைப் பெறுவதில் வாரக்கணக்கில் தாமதம் நேரிட்ட போதும் காலைவேளைகளில் போஸ்ட்மேனை காணும்போது ஏற்படும் களிப்பு அளவிற்கறியது. வெகுகாலம் ஒருவரையொருவர் பார்த்திராமல் நட்பு பாராட்டிய என் இரண்டு பேனா நண்பர்களையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும்.
நான் பெரிதும் விரும்பிப்பணியாற்றிய தொழில்நுட்பம் சார்ந்த அலுவலில் என்றுமே வேறுவிதமான எண்ணங்களுக்கு இடமளித்ததில்லை.அதனாலேயே நான் பெற்ற நட்புக்களுக்கோ வேற்றுச் சிந்தனைகளுக்கோஎன்னால் நேரம் ஒதுக்க இயலாமற் போய்விட்டது. பணியிலிருந்து முழுதுமாக விடுபட்டபோது பழமையான நட்புகளைத்தேடித்துருவிப் புதிப்பித்துக்கொண்டேன்.இவற்றுக்கெல்லாம் எனக்கு பெரிதும் துணையாயிருந்தது இன்றைய இணையதளமும் என் கைபேசியும்தான். இந்த நேரத்திலும் --
என் நெஞ்சில் நிழலாக நகர்ந்து கொண்டிருக்கிற ஒரு நிகழ்வை சொல்லித்தான் தீரவேண்டும்.
தஞ்சை மாவட்டம் திருத்தருபூண்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் பயின்றபோது நான் பெற்றிருந்த நண்பர்களில் தலையாயவன் ஹெச் .கமால் பாட்சா.
என்னுடைய எண்ணங்களுக்கும் சிந்தனைகளுக்கும் அந் நாளில் தீனி போட்டவன். நட்புக்கு இலக்கணமாய் திகழ்ந்தவனும் அவனே. ஒரு கலகட்டத்தில் புறசூழல்களால் நான் சந்திக்க நேர்ந்த இடமாற்றம் எங்களிடையே மிகப்பெரிய இடைவெளியைத் ஏற்படுத்தி விட்டது. அவனுடைய தகப்பனார் திருத்தருப்பூண்டி நகரின் முக்கிய கடைவீதியில் நகைக்கடையொன்றை நடத்தி வந்தார்.பின்நாளில் நண்பனைக் காணவேண்டும் பேசவேண்டும் என்ற எண்ணங்கள் மேலிடவே தொடர்பு கொள்ள சகல வழிகளையும் ஆராய்ந்தேன். நேராக சென்று பார்க்க போதுமான பொறுமையோ தெளிவோ ஏற்பட்டிருக்கவில்லை. ஒரு நாள் இரவு முழுதும் முயன்று இரவு ஒரு மணியளவில் இணையதளத்தின் உதவியோடு நண்பனின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்தேன்.
ஆர்க்மிடீஸ் தண்ணீர்த் தொட்டியில் குளிக்கும்போது பொருள்களின் பருமன் குறித்த தத்துவத்தின் ஆதாரத்தை உணரநேர்ந்து யுரேகா யுரேகா என்று மகிழ்ச்சிப்பெருக்கில் வீதிகளில் ஓடியது பற்றி படித்திருக்கிறேன். அது போன்ற ஒருகளிப்பையும் கர்வத்தையும் ஒருசேர அந்த கணத்தில் நான் பெற நேர்ந்தது. ஆனால் என்னுடைய துரதிர்ஷ்டம் !  நடு நிசியில் எனக்கேற்பட்ட மகிழ்ச்சியை என் குடும்பத்தினரோடு பகிர்ந்து கொள்ள இயலாமற் போய் விட்டது. இருந்த போதிலும் இரவு முழுதும் என் நினைவுகள் பெரிதும் பின்னோக்கியே சுழன்று கொண்டிருந்தன. நான் கண்டு பிடித்த தொலைபேசி எண் நகைக்கடையில் இருந்திருக்கவேண்டும். அதன் பொருட்டு மேலும் சில மணி நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. பொழுது புலர்ந்ததும் எனக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டேன்.
காலை மணி ஒன்பதை நெருங்கிற்று.
நண்பனின் குரலைக் கேட்க தொலைபேசியில் எண்களை சுழற்றினேன். அடுத்த முனையில் தொலைபேசி கதறுவது கேட்கிறது.
ஹலோ ! திருத்துரைப்பூண்டி. நீங்கள்..
நண்பனின் குரலாக தெரிகிறதே .
சென்னையிலிருந்து பாண்டியன்.கமால் பாட்சாவோட பேசணும் .
ஒரு கணம் அமைதி நிலவுகிறது.
அவர் காலமாகிவிட்டார்.
மிக உயர்ந்த பாறையொன்றிலிருந்து தடாலென்று சறுக்கி விழுவதைப்போன்ற உணர்வைப் பெருகிறேன்.
நீங்கள்...
நான் அவருடைய சன்
தொலைபேசி என்னையறியாமல் நழுவுகிறது. தொடர்பு துண்டிக்கப்படுகிறது. அடுத்து பல நாட்கள் என் மனம் சமாதானம் அடையவில்லை. பின்னொரு நாளில் திருத்தருபூண்டி சென்று நண்பனின் செல்வங்களோடு அளவளாவி வந்தேன்.அன்பு நண்பனின் அவசரப்பயணம் இன்றும் என்னை பெரிதும் பாதித்திருந்தது.
சுழன்று கொண்டிருந்த வாழ்க்கைச்சக்கரத்தின் ஒவ்வொரு விளிம்புகளிலும் கணிசமான நல்ல நண்பர்களை
நான் பெற்றது உண்டு. இருந்தபோதிலும் சக்கரத்தின் சழற்சியில் இறுகியிருந்த நட்புக்கயிறு அவ்வப்போது தளர்ந்து போனது உண்மைதான்.  இருபதாம் நூற்றாண்டு இறுதியில் ஏற்பட்ட கைபேசியின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி தளர்ந்து போயிருந்த நட்புக்கயிறுகளை
பெரிதும் இறுக்க உதவியிருக்கிறது. அதே சமயம் பக்கத்தில் நிற்போரின் பார்வையை நாம் இழந்து கொண்டிருப்பதும் உண்மை.
இப்போது என் கையிலிருக்கும் கைபேசி -
உலகின் ஒவ்வொரு மூலையில் சிதறி கிடக்கும் என் நட்புகளை உரசிப்பாற்க உதவுகிறது.
ஒரு சில விஷமச்சிந்தனைகளை விடுத்து மனதகுலம் சற்று நிமிர்ந்து பார்க்குமானால் கணக்கிலடங்கா கைபேசியின் பயன்கள் கிடைக்கக்கூடும். இன்றும்என் மனதில் இருக்கும் ஒரே ஏக்கம் --
இந்த கைபேசியின் அசுர வளற்சியைக் காணும் போது அடிமை காலத்தின் விளிம்பில் பிறந்த நான் கொஞ்சம்
தள்ளி பிறந்திருக்கக்கூடாதா.. என்பதுதான்
.

-----------------------------------------------------------
 இடுகை 0030

Labels: , ,

3 Comments:

At 18 October 2010 at 07:09 , Anonymous cibi said...

the way of creation fine

 
At 28 October 2010 at 08:16 , Anonymous Anonymous said...

You may continue your articles I wish you to become the greatest blogger in the world

Continue your action


udaya

 
At 16 March 2011 at 10:43 , Anonymous ramesh said...

VERY NICE BY; MARAN AND RAMESH NAGAPATTINAM

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home