Tuesday, 20 July 2010

இலக்கிய வீதி இனியவன்

சென்னையில் ஸ்ரீ கிருஷ்ண கான சபா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிருவனமும் இணைந்து 17 ஜுலை 2010 அன்று நடத்திய பாராட்டு விழாவில்
எழுத்தாளர்கள் ராணி மைந்தன் , இலக்கிய வீதி இனியவன் ஆகியோரை புகழ்ந்து கெளரவிக்கிறார் ஆர்.எம். வீரப்பன்.
(எழுத்தாளர் சிவசங்கரி ,ஏவி எம் சரவணன் , ராணி மைந்தன் ஆர் . எம் , வீரப்பன் , இனியவன் ,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி , சுகி . சிவம் )                                                                   தினமணிக்கு நன்றி !
( இனிய நினைவுகள் )
                                                பாண்டியன் ஜி

ந்த ஜுலை மாதம் 18 ஆம தேதி தினமணி நாளிதழில் வெளியான ஓர் செய்தி என் நினைவுகளை பெரிதும் பின்னோக்கிச் செல்ல உதவியது. 1959 என்று நினைக்கிறேன்.தமிழ் பத்திரிக்கையுலகம் மீண்டும் தலையெடுத்த காலம். விகடன் , கல்கி , குமுதம் போன்ற முன்னணி இதழ்களுடன் தீபம் கணையாழி போன்ற தரம்வாய்ந்த சிற்றிதழ்களும் முளைத்து செழித்திருந்த சமயம் .பிஞ்சு நெஞ்சங்களுக்கு வழிகாட்ட சின்னஞ்சிறு குழந்தையிதழ்களும் துளிர் விட்டிருந்த நேரம் இன்றுபோல் தமக்குத்தாமே கட் டவுட் நிறுவிக்கொள்வதும் தமக்குத்தாமே மாலை அணிவித்துக் கொள்வதும் ,தம்அற்பச்  செயல்களுக் கெல்லாம் தாமே கைகொட்டி மகிழ்வதும்அன்று அத்தனை எளிதன்று . பட்டங்களையும் பரிசுகளையும் பணம் கொடுத்து பெற முடியாத நேரம். முன்னணி இதழ்களில் ஒரு ஓரத்தில் இடம் பிடிப்பதென்பது பலருக்கு பெரும் கனவாகவே இருந்திருந்தது .  அன்றெல்லாம் ஜாதிய பின்னணியும் அரசியல் தலைவர்களின் ஆசியும் இன்றி ஆனந்த விகடன் , கல்கி , கலைமகள் இதழ்களில் எவரும் எழுதிட இயலாது. மிகச்சிறந்த பெண் எழுந்தாளர் சிவசங்கரிக்கே அன்நாளில் சிபாரிசுக்கடிதம் தேவைப்பட்டிருந்தது. அந்த காலகட்டங்களில் சிறுவர்களைக்கவர்ந்த இதழ்களாக ஏழு எட்டு மொழிகளில் வெளயிடப் பெற்ற அம்புலிமாமா , கலைமகள் குழுமம் வெளியிட்ட கண்ணன் , குமுதம் நிறுவனத்தின் கல்கண்டு - இவை மட்டுமே விற்பனையில் முன்னணியில் இருந்தன. இவைகளுக்கு வலுவான பின்னணி இருந்ததால் சிறமமின்றி நீடிக்கவும் செய்தன.அம்புலிமாமா தேர்ந்த சித்திரங்களுடன் நேர்த்தியான அச்சுமுறையில் புராண இதிகாச மாயாஜாலக் கதைகளுடன் தன் இடத்தை வசதியுள்ளோரிடம் தக்க வைத்துக்கொண்டிருந்தது. விலை சற்று அதிகம் .குமுதம் குழுமம் வெளியிடும் கல்கண்டு முழுதும் தமிழ்வாணன் எழுத்துக்களையே வெளியிட்டுஇளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருந்தது.கலைமகள் நிருவனம் வெளியிட்ட கண்ணன் சற்று வித்தியாசமானது. பிஞ்சு நெஞ்சங்களின் அச்சத்தை அகற்றி பழங்கால பெருமைகளை மட்டுமின்றி வருங்கால தலைமுறைக்குத்தேவையான விஞ்ஞான யுத்திகளையும் வெளியிட்டு  தரத்தில்  தனித்து  நின்றது. இன்று எழுத்துலகில் நிலைத்து நிற்போர் பெரும்பாலும் கண்ணனின் தூண்டுதலில் துளிர் விட்டோர்தாம். எல்லாரைப்போலவே மாதமிறுமுறை வெளிவரும் வெளிவரும் கண்ணன் இதழுக்காக இரண்டு வாரம் பொறுத்திருப்பது என்பது அப்போதெல்லாம் என்சக்திக்கு அப்பாற்பட்டதாகவேயிருந்தது. பின்நாளில் மின்னணுவியலில் இயல்பான விருப்த்தோடு 36 வருடங்களுக்கு பணியாற்றியதற்கு கண்ணனின விஞ்ஞானம் சார்ந்த தொடர் கட்டுரைகளே திருத்தருப்பூண்டி ரயில் நிலையத்தில் பத்திரிக்கை கட்டு இறக்கியவுடன் முதல்முதலில் கண்ணனை உறுவியெடுப்பவன் நானாகத்தான் இருந்தேன். பெரும்பாலும் வீடு வருவதற்குள் அத்தனை பக்கங்களையும் படித்து முடித்திருப்பேன். படிப்பதும் மட்டுமின்றி எழுதும் திறனையும் ஊட்டி வளர்த்தது கண்ணன்தான். அதன் ஆசிரியர் ஆர்வி என்ற ஆர்.வெங்கடராமன் அற்புதமான மனிதர்.எத்தனையோ இன்றைய எழுத்தாளர்களை அன்றே இனம்கண்டு ஏணியில் ஏற்றிவைத்தவர். இருந்தபோதும் கலைமகள் குழுமத்தின் கண்ணன் , மஞ்சரி (வேற்று மொழிச்செல்வங்களை தமிழுக்கு கொண்டுவந்த அற்புதமான இதழ் ) இதழ்கள் தொடர்ந்து நீடிக்காமற்போனது தமிழுக்கு அந்நாளில்அவ்வப்போது என்னுடைய சின்னஞ்சிறு எழுத்துக்கள் பிரசுரிக்கப்படும்போது நான் கால்களால் நடந்ததாக நினைவில்லை. சுறுங்கச்சொன்னால் எனக்கு மொழியை அறிமுகப்படுத்தியது கண்ணன் இதழும் தொடர்ந்துவந்த திராவிட இதழ்களும்தாம். அதற்குபின்பே நான் பயின்ற கல்விக்கூடங்களைச்சொல்லவேண்டும். 1962 ல் வழக்கம்போல் நெடுங்கதைப்போட்டியை அறிவித்தது. கண்ணன். முதன முதலாக ஆர்வத்துடன் கலந்து கொண்டேன். காலமும் சூழலும் ஒத்துழைக்கவில்லை. இருப்பினும் ஆனந்தத்தையேஅளித்தது.முடிவுகள்அறிவிக்கப்பெற்றன. எனது முயற்சி எனக்கு எனக்கு நிறைவையே அளித்தது.முதற்பரிசை தட்டிச்சென்றவர் வேடந்தாங்கல் இலக்குமிபதி என்ற இனியவன்.சரியான தேர்வு என்றே சொல்ல வேண்டும். சிறுவர் இலக்கியத்தில் வழக்கத்திலிருந்து பெரிதும் மாறுபட்டுவளரும் தலைமுறைக்கு புதிய நம்பிக்கையை விதைப்பதாகத்தான் இருந்தது அவருடைய முதற்பரிசு பெற்ற பொன்மனம் நெடுங்கதை. போட்டியில் பங்குபெற்று தகுதி பெறாவிடினும் இனியவனின் பொன்மனத்துக்கு மதிப்புரை எழுதி அப்போதே வேறு பத்திரிக்கையில் முதற்பரிசு பெற்றதை எண்ணிப்பார்க்கிறேன்.     
     அதையடுத்து அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழக இதழ்களில் இனியவன எழுதிவந்ததை அறிவேன்.பின்நாளில் அவர் வாசகர் வட்டம் இலக்கியவீதி என்ற அமைப்புகளை நிறுவி நல்ல எழுத்துக்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் ஊட்டிவந்ததை தொடர்ந்து வந்த பத்திரிக்கைகள் மூலம் அறிந்திருக்கிறேன்.எழுத்து மட்டுமின்றி தரமான பேச்சுத்திறனும் நிறைந்தவர் இனியவன்.சென்னை கம்பன்கழக செயலாளர் பொறுப்பும் அவருக்கு பொறுத்தமானதே. மிகமிக சாமான்யர்களின் உயரிய எழுத்துக்களை தமிழ் வாசகர்முன்னே எடுத்துசசென்ற இனியவன் தகுதியானவர்களுக்கு உயரிய இருக்கைகள் கொடுத்து சிறப்பித்ததுமறக்க இயலாதது.தரம்பார்த்து தமிழ் எழுத்துக்களை தூக்கிப் பிடித்த இனியவனின் கரங்களுக்கு கிருஷ்ணகான சபாவும் கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனமும் இணைந்து அணி செய்திருப்பதை அறிந்து நானே பெற்றதைப்போல எண்ணி மகிழ்கிறேன். எழுத்தாளர்
ராணிமைந்தனின் எழுத்துக்களையும் அறிவேன்.
இனியவனும் ராணிமைந்தனும் நீண்டு வாழ்ந்து தொடர்ந்த பணிகளை மேலும் தொடர விழைகிறேன்.

இடுகை 0027 -- 20 ஜுலை 2010
-------------------------------------------------------------

Labels: , ,

Saturday, 10 July 2010

அய்யூர் என்ற குக்கிராமம் ( ஒன்று

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்குன்றனாரின் வைரவரிகள்
என்னை பெரிதும் பாதித்தவை.தொல்லையில்லா உலகம் சமைக்க இதைவிட சிறந்த வழியை வேறு யார் காட்டமுடியும். கீழ்தஞ்சை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்து தமிழகத்தின் பல்வேறு பெரு நகரங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் பத்தாண்டுகளுக்கு மேல் வாழும் வாய்ப்பு பெற்றவன் நான். இன்று ஒவ்வொரு நகரத்தை பற்றி பேசப்படும்போது என் நினைவுகள் என்னையறியாமல் பின்னோக்கி செல்வதை உணர்கிறேன்.நிகழ்ந்து போன இனிமையான கணங்களும் சங்கடமான சந்தர்ப்பங்களும்ஒன்றையொன்று விஞ்சி முன்னிற்கின்றன. அந்த அணிவகுப்பில் ....

அய்யூர் என்ற குக்கிராமம் ( ஒன்று )
 பாண்டியன்ஜி
வடக்கு தெற்காக நீண்டுகிடக்கும் திருவாரூர் திருத்தருப்பூண்டி தார்ச்சாலை எப்போதுமே வெரிச்சோடிக்கிடக்கும். இரண்டு அல்லது மூன்றுமணிக்கொருமுறையே அந்த பாதையில் பேரூந்துகள் பயணிப்பதைக் காண முடியும். திருவாரூரிலிருந்து திருத்தருப்பூண்டி பேரூந்தில் பயணம் செய்யும்போது கச்சனத்துக்கு அடுத்த அரை கிலோமீட்டரில் கொத்தங்குடி குறுக்குச்சாலையை சந்திக்கநேரிடும்.. சாலையின் கிழக்கு ஓரத்தில் காணப்பெறும் சின்னஞ்சிறு  பலசரக்குக்கடையுடன் கூடிய ஒரு ஓட்டுவீடு எங்களுக்கு எங்களூருக்கு போக இறங்கவேண்டிய இடத்தை நினைவூட்டும்.அந்த பழமையான ஓட்டு வீட்டையொட்டி கிழக்கே செல்லும் குறுகிய மணற்சாலையில் அரை கிலோமீட்டர் தூரம் கடக்கும்போது கிராமம் கொத்தங்குடியை அடையலாம் . சாலையின் இருபுறமும் விரிந்து கிடக்கும் வயல் வெளிகள் கண்களுக்கு புத்துணர்ச்சியூட்டும். கொத்தங்குடியில் எண்ணி பத்துப் பதினைந்து வீடுகளே சாலையின் ஓரங்களில் காணமுடியும். எல்லாமே செங்கல்லையும் மணற்சாந்தையும் கொண்டு கட்டப்பெற்று நாட்டு ஓடுகள் வேயப்பட்ட வீடுகள்தாம் வீடுகளைக் கடந்து தெற்குநோக்கி நகரும்போது சின்னஞ்சிறிய பிள்ளையார் கோயிலையும் அருகே கண்களுக்கு விருந்தூட்டும் ஒரு அல்லிக்குளத்தையும் காணமுடியும். குளத்தின் கரையோரம் உயர்ந்து நிற்கும் அரசமரம் சலசல ஒலிகள் எழுப்பி வருவோர்க்கு வரவேற்பளிக்கும். இப்போது அந்த மணற்சாலை வடக்குநோக்கி திரும்பி ஒரு பெரிய அரைவட்டம் அடித்து எங்களூர் அய்யூரை அடைகிறது. இடையிலே அது சந்திப்பதென்னவோ ஒரு பாழடைந்த கிருஷ்ணன் கோயிலையும் சொக்கநாதன்கோயில் என்ற சிறுபகுதியையும்தாம். அந்த கிருஷ்ணன் கோயிலும் அதன் முழு உருவம் பிரதிபலிக்கும் சின்ன நீர் நிலையும் என்னைப் பொருத்தவரை எங்களூர் தாஜ்மஹால் என்றே எண்ணி வியந்திருக்கிறேன். ஒரு சமயம் சென்னையில் அடகுக்கடையொன்றில் 15 ரூபாய்க்கு வாங்கிய கோடாக் காமராவில் அந்த கோயிலை பல்வேறு கோணங்களில் பதிவு செய்து மகிழ்ந்திருக்கிறேன். சொக்கநாதன் கோயில் வழியாக எங்களூருக்குச்செல்லும் குறுகிய மணற்சாலையில் பெரும்பாலும் வசதியுள்ளோர் வைத்திருக்கும் வில் என்ற கூண்டு வண்டிகளும் விவசாயத்திற்கு உபயோகப்படும் கட்டைவண்டிகளுமே எப்போதாவது செல்லுவதைக் காணமுடியும். கால் நடையாகச்செல்லும் அநேகர் இந்த திருப்பத்திலிருந்து கிழக்கு நோக்கி வயல்களின் குறுக்கே ஒருகிலோமீட்டர் தூரம் கடந்து அய்யூரை அடைவது வழக்கம். கண்ணுக்கெட்டிய தூரம் பரந்து விரிந்து கிடக்கும் வயல்வெளிகள் விளைச்சல் காலங்களில் பச்சைப்பசேலென்றும் அறுவடைக்காலங்களில் மஞசள் கலந்த பச்சை நிறத்திலும் கண்களுக்கு விருந்தளிக்கும். விவசாயக்காலங்களில் வயல் வரப்புக்களில் நடக்கும் போது காலின் கட்டவிரலை வரப்புகளில் அழுந்த ஊன்றி அடியெடுத்துவைக்கவேண்டும்.ஊருக்குள் புதிதாக வருவோர் இதையறியாமல் வரப்புகளில் சறுக்கும்போது ' என்ன ஊரப்பாயிது ! ' என்று முனகுவது இதைவிட உயர்வான ஊர்களும் இருப்பதை எனக்கு உணர்த்தும். இடையிடையே சிறிதும் பெரிதுமான நீரோடைகளைக் கடந்து ஊருக்குள் நுழையும்போது ஏதோ புதிய சாதனையை நிகழ்த்தியதைப்போன்ற உணர்வைப் பெறநேரிடும்.. நீண்ட சதுரம் போன்று அமையப்பெற்ற எங்களூரின் மேற்கே திருவாரூர் - திருத்தருப்பூண்டி நெடுஞ்சாலை செல்லுகிறது. ஊரின் தென்மேற்கு மூலையில் ஆலத்தம்பாடியும் வடமேற்கு மூலையில் கச்சனமும் இருக்கின்றன. இரண்டுமே சற்று பெரிய கிராமங்கள்தாம். ஊருக்கு வடக்கே கச்சனத்திலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் தார்ச் சாலை வலிவலம் கீவளூர் வழியாக நாகப்பட்டினத்தை அடையும். ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில்.வடகிழக்கு மூலையில் திருக்குவளையும் நேர்கிழக்கே முருகன் தலம் எட்டுகுடியும் தென் கிழக்கு மூலையில் திருவாய்மூர் மற்றும் பழையன்குடியும் அமைந்திருப்பதைக்காணலாம். அனைத்தும் பாடல்பெற்ற தலங்கள்தாம்.பொதுவாகவே நாகை தஞ்சை மாவட்டங்களில் பாடல் பெற்ற தலங்கள் எங்கும் நிறைந்திருப்பதைக் காணமுடியும். சொக்கநாதன்கோயில் வழியாகவளைந்து நெளிந்து வரும் அந்த மணற்சாலை ஊரின் வடமேற்கு மூலையில் நுழைகிறது. நுழைவாயிலின் மேற்கு முனையில் கிழக்கு நோக்கி கம்பீரமாக வரவேற்பளிக்கிறது அருள்மிகு வரதராஜபெருமாள்திருக்கோயிலின் மூன்று நிலை ராஜகோபுரம். கோயிலைச்சுற்றி உயர்ந்து காணப்பெரும் சுற்றுச்சவர் மதில்களும் வடக்கு மேற்கு ஓரங்களில் அகழிபோல் சூழ்ந்துகாணப்பெறும் அல்லிக்குளமும் அழகுக்கு அழகு சேர்க்கிறது. ஏறகுறைய இருபது கருங்கற் படிகளில் ஏறி உயர்ந்து கணப்பெரும் பிரமாண்டமான வாயிலைக் கடக்கும்போது பெருமாளை தரிசித்து பவ்யமாக நிற்கும் கருடாழ்வாரை கணமுடியும்.நீண்டு உயர்ந்து மூன்று பிரிவுகளாக அமையப்பெற்ற மண்டபத்தைக் கடந்து நகரும் போது பெருமாளின் கருவரை காட்சி தருகிறது. அய்ந்தடி அடி உயரத்தில் தம்பதிசமேதராக நின்றிருக்கும் மூலவர் பெருமாளும் ஓரடி முன்னால் காணப்பெரும் அய்ம்பொன்னால் ஆன உற்சவமூர்த்தியும் எங்களூருக்கே அச்சாணியாக இருந்திருக்கிறார்கள். எண்ணையில் எரியும்அகல்விளக்குகளின் சன்னமான விளக்கொளியில் பெருமாளின் தோற்றம் பார்ப்பதற்கு பிரமிக்கத்தக்கதாய் இருக்கும். கருங்கற் பாரைகளோ கருங்கற்கள் நிறைந்த குன்றுகளோ சிறிதும் காணப்பெறாத கீழ்தஞ்சை மாவட்டத்தில் எங்களூரைப்போன்று ஏராளமான கோயில்கள் காணப்படுவது வியப்பானதுதான். மெல்லிய செங்கற்களை சுண்ணாம்புக்காரைகள் கொண்டு கட்டப்பெற்ற சுற்றுச்சுவர் காண்பதற்கு பிரமிப்பூட்டும். ராஜகோபுரத்தின் இருபுறமும் அமையப் பெற்ற இருமண்டபங்கள் பெருமாளுக்கு பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளியாகவும் அர்சகர் குடியிருக்கும் குடிலாகவும் இருந்திருக்கிறது.காரைகளைக்கொண்டு கிருத்துவதேவாலயங்கள் போன்று வளைவாக அமைக்கப்பெற்ற மேற்கூரைகள் அன்னாளின் கட்டிடக்கலைத்திறனை வெளிப்படுத்தும்.மெல்லிய கழுத்தில் வெள்ளைக்கோடுகளை உடைய ஏராளமான மணிப்புறாக்கள் பறந்து திரிந்து பெருமாளோடு தங்களுக்கிருக்கும் நெருக்கத்தை பறை சாற்றும். கோபுரத்தின் இரண்டாம் நிலை மாடத்தில் இரண்டு கழுகுகள் நீண்டநாட்கள் குடியிருந்தது என் நினைவுகளில் இன்றும் பசுமையாகவே இருக்கிறது.காலை நேரங்களில் பெருமாளின் தூதுவராக எங்கோ பறந்து செல்வதும் பொழுது சாய்ந்ததும் அவைகள் எங்கிருந்தோ பெருமாளுக்கு புதிய செய்திகளுடன் திரும்புவதும் ஒவ்வொரு நாளும் காணநேரிட்டிருக்கிறது.
கோயிலின் எதிரே காணப் பெரும் சன்னதித்தெருவில் எனக்குத்தெரிந்து அய்ந்து வீடுகளே இருந்திருக்கின்றன. கோயிலின் வாயிலில் வடக்கு நோக்கி காணப்பெரும் நாட்டு ஓடுகள் வேயப்பெற்ற முதல் வீடுஅப்போது எங்களுடையதாய் இருந்தது.தொரு முழுதும் வரிசையாக வளற்கப்பட்ட வேம்பு மரங்கள் மாலைக்காற்றுக்கு மருத்துவமணம் வீசும். கிழக்கு நோக்கி அமையப்பெற்ற அந்த தெருவின் முனையில் கிழக்கு நோக்கி அமைந்திருக்கும் சிறிய பிள்ளையார் கோயிலும் கோயிலின் வடபுரம் பரந்து விரிந்து காணப்பெரும் சம்மன் குளமும் ஊருக்கே ஆதாரமாய் இருந்திருக்கிறது. வருடத்தின் அத்தனை காலங்களிலும் நீர் நிறைந்து காணப்படும் சம்மன் குளமும் கரையோரத்தில் உயர்ந்து பரந்து ஓயாது ஒலி எழுப்பிக்கொண்டிருக்கும் அரசமரமும் அய்யூர் எப்போதும் விழிப்போடு இருப்பதை உணர்த்தும். பிள்ளையார் கோயிலில் இருந்து தெற்கே திரும்பி கிழக்கு மேற்காக நாலய்ந்து தெருக்களுடன் விரிந்து பரந்து கிடக்கிறது அய்யூர் கிராமம். ஊரெங்கும் தென்னை , புளிய மரங்களும் ஆங்காங்கே மூங்கில் தோப்புகளும் நிறைந்து காணப்பெறும்.ஊருக்கு வெளியே வயல்வெளிகளில் ஆங்காங்கே வரிசையாக பனைமரங்கள் காட்சி கொடுக்கும். . எனக்குத் தெரிந்து மொத்தமே இறுபத்தய்ந்து குடும்பங்கள்தாம் அந்த ஊரில் இருந்திருக்கின்றன. ஊரைச்சுற்றியிந்த பெரும்பாலான வயல்வெளிகள் இந்திருபத்தைந்து குடும்பங்களுள் நான்கைய்து மிராசுதார்களுக்கே சொந்தமாயிருந்தது. மீதியுள்ள குடும்பத்தில் பெரும்பாலோர் அந்த நான்கய்ந்து மிராசுகளை ஒண்டியே வாழ்ந்து வந்தனர். அந்த குடும்பங்களில் பெரும்பாலானவை தெலுங்கு கலந்த தமிழையே தங்களுக்குள் பேச நேரும் போது பயன்படுத்தி வந்தனர். ஊரைச்சுற்றி காணப்படும் வயல்வெளிகளுக்கிடையே ஆங்காங்கே காணப்படும் மணற் திட்டுகளில் குடிசைவீடுகள் காணப்படும். இந்த மிராசுகளின் நிலப்பரப்பில் பகல்முழுதும் பாடுபடும் தலித்மக்கள் இரவுநேரங்களின் ஓய்வுக்கான இடமாகவே அந்த குடிசைகள் இருந்தன. எங்கள் வீடு உட்பட இரண்டொரு வீடுகளில் இரட்டை மாடுகள் பூட்டப்பெரும் கூண்டு வண்டிகள் இருந்திருக்கின்றன. ஆலத்தம்பாடி அம்மனூர் திருக்குவளை போன்ற பக்கத்துகிராமங்களில் இயங்கிவந்த டூரிங் தியேட்டர்களில் திரையிடப்படும் திரைப்படங்களை குடும்பத்தினர் காண்பதற்கும் புற்றடி மாரியம்மன் எட்டுகுடி பழையன்குடி கோவில் திருவிழாக்களில் கலந்து கொள்வதற்கும் இந்த இரட்டை மாட்டு வண்டிகள் பயன்பட்டன. தீபாவளி பொங்கல் கார்த்திகை மற்றும் நவராத்ரி போன்ற பண்டிகைகள் மறக்காமல் கொண்டாடப்படும். பெரும்பாலான குடும்பங்களின் இளையதலைமுறையினர் பெருநகரங்களை நோக்கி நகரத்தொடங்கியிருந்த நேரம்.சுத்திகரிக்கப்பெற்ற குடி நீரோ மின்சாரம் மருத்துவசதி சாலைவசதி எதனையும் அய்யூர் அப்போது பார்த்ததில்லை. நாடு விடுதலை பெற்று பண்டிதநேரு அரசு அய்ந்தாண்டுத் திட்டங்களை முதன்மதலாக துவக்கிய யிருந்த சமயம். ஆலத்தம்பாடி அஞ்சல் நிலையத்திலிருந்து வாரத்தில் இரண்டு மூன்று நாடகளாவது இந்த ஊருக்கு தற்காலிக ஊழியர் தாமோதரநாயுடு தபால்களைக் கொண்டுவருவார். இரண்டு கால்களால் மாறிமாறி மிதித்து அவர் சைக்கிளில் வருவது எனக்கு அன்று வியப்பாக தோன்றும். மித்திரன் கல்கி போன்ற பத்திரிக்கைகளையும் தாமோதரநாயுடுவே கொண்டு வருவது வழக்கம். அதை விட்டால் வத்தலான இரட்டைமாடுகள் பூட்டப்பெற்ற விவசாயத்திற்கான கட்டை வண்டிகள் எப்போதாவது வருவதைக் காணமுடியும். இந்த அய்ந்தாறு மிரசுகளுக்கென்று தனித்தனியே குளங்களும் இருந்திருக்கின்றன.வரட்சியான காலங்களில் இந்த குளங்களில் இருந்து நீரை வெளியேற்றி மீன்கள் பிடிப்பதுண்டு. ஒரு சமயம் ஒரு குளத்திலிருந்து நீரை அகற்ற ஆலத்தம்பாடியிலிருந்தோ திருத்தருப்பூண்டியிலிருந்தோ ஒரு டீசலில் இயங்கும் மோட்டாரை கொண்டு வந்திருந்தார்கள். குளத்திலிருந்து தண்ணீர் உறுஞ்சப்பட்டு மோட்டார் வழியாக பீரிட்டடிக்கும் காட்சி அன்று என்னை உறக்கத்திலும் வியப்பில் ஆழ்த்தியது. விவசாய காலங்களில் இரவிலும் பகலிலும் பெரும்பாலும் விழுப்புடனே காணப்படும் அந்த கிராமம்.     மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் எங்கள் கிராமத்துக்கு வந்து சேர ஏறகுறைய ஒரு மாதத்திற்கு மேலாகும். அதன் பிறகே வயல்வெளிகளுக்கு நீர் பாய்ச்சி ஊரில் உள்ள நீர் நிலைகள் நிரம்பவேண்டும்.அறுவடைக்குப்பிறகு பெரும்பாலும் ஊருக்கே ஓய்வுதான். வரண்ட காலங்களில் நீர் நிலைகளை தூர் எடுப்பதற்கும் வாய்க்கால் வரப்புகளை சீரமைப்பதற்கும் ஊரே முடுக்கி விடப்பட்டிருக்கும்.
இவையனைத்தும் இருக்கின்ற வசதிகளை தக்கவைத்துக்கொள்ள ஊரே முயன்று செயல்படுத்தியவைதாம். பின்னர்தாம் அரசு முயற்சிகள் ஊருக்குள் நுழையத்துவங்கின.
___________________________________
இடுகை 0026

Sunday, 4 July 2010

வன்னியடியில் ஒரு சந்திப்பு !

  ( தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த வன்னியடி கிராமம் )         

                                                              பாண்டியன்ஜி
ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு முன் தமிழ் நாடு மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று
இன்று பல்வேறு திசைகளில் வாழ்ந்துவரும் அய்ந்து நண்பர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்க எண்ணியபோது இனிய நண்பர் ஜெகநாதன் ' அந்த சந்திப்பை இங்கேயே (தஞ்சை மாவட்டம்
பாபநாசத்தைச் சேர்ந்த வன்னியடி கிராமம் ) வைத்துக் கொள்ளலாமே ' என்று அன்போடு அழைத்தபோது மூலைக்கு ஒருவராய் பிரிந்து வாழும் நாங்கள் ஒருவழியாக ஜுன் 29, 30 ல்
வன்னியடியில் சந்திப்பை ஏற்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்தோம்.
ஜுன் 29 காலை கும்பகோணத்தில் இறங்கிய என்னோடு திருவாரூரைச் சேர்ந்த நண்பர் குமரசாமி இணைந்து கொண்டார். சென்னையிலிருந்து வேதசிரோன்மணியும் ஈரோட்டிலிருந்து தங்கவேலு மற்றும் பழனிச்சாமியும் முன்னதாக வன்னியடி வந்திருந்தனர்.
தஞ்சை - கும்பகோணம் நெடுஞ்சாலையில் குறுக்கிடும் பாபநாசத்தில் இறங்கி புளியமரத்து
தேநீர் கடை அருகில் வடக்கு நோக்கி நீண்டு செல்லும் தார்ச்சாலையில் ஒரு கிலோமீட்டர் கடக்கும் போது அரசலாற்று பாலம் குறுக்கிடுகிறது. ஆற்றின் தென்கரையில் மேற்கு நோக்கி
செல்லும் குறுகிய தார்ச்சாலையில் ஒரு கிலோமீட்டர் தாண்டி தென்திசையில் அரை கிலோமீட்டர் பயணித்தால் பசுமைப்பிரதேசம் வன்னியடியை அடையலாம்.
எதிரே குறுக்கிட்ட அரசு உயர் நிலைப் பள்ளியில் அத்தனை சிறார்களும் வரிசையாக அணிவகுத்து இசைக்கின்ற தமிழ்த்தாய் வாழ்த்து பள்ளியின் இயல்பான துவக்கத்தை வெளிப்படுத்துகிறது. தாமதத்தோடு வந்த குழந்தைகள் ஒருவித அச்சத்தோடு ஒதுங்கி நிற்பதையும் காணமுடிகிறது. இரண்டு மூன்று தெருக்களை கடந்து ஜெகன்நாதன் வீட்டை அடைந்தபோது அன்பான வரவேற்பு நிகழ்ந்தது. எங்களுக்காக ஜெகன்நாதன் ஒதுக்கியிருந்த வீட்டில் நுழைந்தபோது அன்பான நண்பர்களை நீண்டநாட்களுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க முடிந்தது. ஒவ்வொருவரும் மின்வாரியத்தில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக முழு
ஈடுபாட்டுடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள்தாம். பணிக்காலங்களில் முக்கியமாக காலந்தவறாமை , கிடைத்த பணியில் உள்ளார்ந்த ஈடுபாடு ஞாயமான ஊதியம் இவைமட்டுமே உயர்வாக கருதியவர்கள். இன்று துறைதோரும் மலிந்து கிடக்கும் ஊழலில் இருந்து பெரிதும் ஒதுங்கியிருந்தவர்கள் .
ஈரோடு நகரிலிருந்து தங்கவேலு வந்திருந்தது எனக்கு பெரிதும் மகிழ்ச்சியளித்தது. 68 களில் ஈரோட்டில் பணியில் இணைந்தபோது நான் பெற்ற நட்பு அது. நீறு பூத்த நெருப்பாக ஆண்டாண்டுகளாய் தொடர்வது நான் பெற்ற பேரேயாகும். வெளிப்படையான செய்கைகள், காலந்தவறாமை உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் பணிகளை முடிக்கும் திறன் எப்போதும் பளிச்சென்று காணப்பெறும் தெளிவான தோற்றம் லேசாக வெளிப்படும் கோவைத்தமிழ் இவைதான் தங்கவேலு. பின்னாளில் மோட்டாரில் இயங்கும் கருவிகளுக்குத் தேவையான பேரிங் வணிகத்தில் ஈரோடு நகரத்தில் சாதனை நிகழ்த்தியவர். இன்று வணிகத்துறையிலிருந்து முற்றிலும் விலகி ஆன்மீக நிகழ்வுகளிலும் அரிமா இயக்கத்தின் மூலம் சமூகபணிகளிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். நட்புக்காக என்றுமே நேரம் ஒதுக்க தயங்காதவர்.அவரோடு வந்த பழனிச்சாமி எங்கள் பணிக்காலங்களில் எங்களுக்கெல்லாம் துணையாகவும் தூணாகவும் வாழ்ந்தவர். என்றும் இனிய முகத்தோடு இனியசொற்களோடு காணப்பெரும் பழனிச்சாமி இன்றும் அப்படியே இருப்பது என்னை
நெகிழ வைத்த ஒன்று.
என்னோடு வந்த குமரசாமி திருவாரூரை அடுத்த சிக்கலைச் சேர்ந்தவர் பகுத்தறிவுச்சிந்தனையில் ஊறிய பரம்பரை. பணியிலும் சரி சூழ்ந்திருப்போர் வாழ்விலும் சரி எதிர்படும் சிக்கல்களை களைவதில் முன் நிற்பவர். எங்களுக்கெல்லாம் பணிக் காலத்தில் முன்னோடியாக திகழ்ந்தவர். தனக்கேற்ற சிந்தனைகளில் மன உறுதி மிக்கவர். இன்று மல்டி லெவல் மார்க்கெட்டிங் மூலம் பலருக்கு துணையாக வாழ்பவர்.
நண்பர் வேதசிரோன்மணி திருச்சியில் எனக்கு அறிமுகமானவர். மணி மணியான கையெழுத்துக்கு சொந்தமானவர். சுப்ரமணிய பாரதியின் எழுத்துக்களை அவர் இசைக்கும்போது கேட்க வேண்டும். அத்தனை இனிமையான குரல் வளம்.
இயல்பாகவே தன் கருத்துக்களை எடுத்து வைக்கும்போது அவரது குரலும் அதற்கேற்ப மாறுகின்ற முகமும் அவரைப் பின்னாளில் ஒரு கிருத்துவமத போதகராய் உருவெடுக்க உதவியிருக்கக்கூடும். இன்று தன் வாழ்நாளின் எஞ்சிய பகுதிகளை தியாகத்திருமகன் ஏசுவின் நெறி பரப்பும் பணியை மேற்கொண்டிருப்பது மகிழ்வுக்குரியதே !
எங்களை விருந்துக்கழைத்த ஜெகநாதன் -
எங்களில் பெரிதும் மாறுபட்டவர். 66 களில் வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக்கில் இணைந்தபோது அறிமுகமாகி பின்னாளில் மின்வாரிய பணியிலும் இறுதிவரை என்னோடு பணியாற்றியவர். நெஞ்சில் உறுதியும் நேர்மைத்திறனும் நிறம்பப் பெற்றவர். பணியில் தீவிர ஈடுபாடு , காலந்தவறாமை , நேர்மையான பொறியாளர்களிடம் மிகுந்த பணிவு இவையனைத்தும் இவருக்கு சொந்தமானவை. இக்கட்டான சூழலில் எடுக்கின்ற முடிவுகளில் இருந்து எள்ளளவும் மாறாதவர். பின் விளைவுகளை கண்டு எடுத்த முடிவுகளில் இருந்து மாறாத மன உறுதி மிகுந்தவர்.
அவரது மனைவியும் மூத்தமகளும் இரண்டு நாட்க்கள் தலைவாழை இலையில் உணவளித்து உபசரித்தது தஞ்சை மண்ணின் விருந்தோம்பல் இன்னும் மறக்கப்படவில்லை என்பதையே எங்களுக்கு உணர்த்தியது. இந்த இரண்டு நாட்களில் என்றோ நிகழ்ந்த சுவையான நிகழ்வுகளையும் தற்கால சூழல்களையும் ஒருசேர அசை போட்டது இனிமையானது.
கர்நாடகாவில் பிறந்து தமிழ் மண்ணில் பாய்கின்ற காவிரி இந்த மண் செழிப்புற ஒவ்வொரு இடங்களிலும் கிளைநதிகளை உருவாக்கிவிட்டு தொடர்ந்து வங்கக்கடலை நோக்கி பயணம் செய்வது இனிமையானது. ஏறக்குறைய நான்குக்கு மேற்பட்ட கிளை நதிகள் பிரிந்து செல்லும் பாக்கியத்தைப் பெற்றது வன்னியடி கிராமம். தஞ்சையின் பெரும்பகுதி வரட்ச்சியின் பிடியில்
சிக்கித் தவிக்கும் போதும் வன்னியடி பசுமையாகவே காட்ச்சி தருகிறது. வாழை , கரும்பு , கருணை என்று பல்வேறு பயிர்வகைகள் வன்னியடிக்கு சிறப்பு சேர்க்கிறது.

ஆனந்த நடனமாடும் மயில்களும் பழந்தின்னி வவ்வால்களும் நிறைந்து காணப்படுவது வன்னியடியின் பசுமைக்கு சாட்சி !. மொத்தத்தில் பெருநகரங்களுக்கிணையான சகல வசதிகளுடன் கூடிய ஒரு சின்னஞ்சிறு கிராமம் வன்னியடி.
16 ஆம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மன்னர் ரகுநாதன் கட்டிய 36 அடி உயர தானியக்காப்பகத்தை பாபநாசம் சிவன் கோயில் வளாகத்தில் காணநேர்ந்தது. மெல்லிய செங்கற்களையும் சுண்ணாம்புக்காரைகளையும் கொண்டு கட்டப்பெற்ற அந்த கிடங்கு 3000 கலம் தானியங்களை சேமிக்க வல்லது. இன்று தொல் பொருள் இலாக்கா கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாலை நேரங்களில் கும்பகோணம் மகாமக குளக்கரையில் சுற்றிவந்தது மறக்கமுடியாதது. இந்த சந்திப்பில் வேலூரைச்சேர்ந்த திருவலம் டி.ராஜேந்திரன் கலந்து கொள்ளாமற் போனது எதிர்பாராதது.கோவையில் நிகழ்ந்த செம்மொழி மகாநாட்டைபோல்பல்வேறுசிந்தனைகளையும் விதைத்துவிட்டு ஜுலை30மாலை

அனைவரிடமும் விடைபெற்று கொண்டு மாறுபட்ட திசைகளில பயணப்பட்டோம்.
இறுதியில் நாங்கள் அறிய நேர்ந்த செய்தி நண்பர் ஜெகநாதன் எங்களில் எத்தனை வித்தியாசமானவர் என்பதை உறுதி செய்தது.
ஜுன் 28 அன்று அவரது தாயார் மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததுதான் அந்த தகவல். அகத்தின் துயரை முகத்தில் சிறிதும் எதிரொலிக்காமல் இரண்டு நாடகள் எங்களோடு .....
என்னால் என்றுமே இயலாத ஒன்று.
அவரது தாயார் துயரிலிருந்து விடுபட்டு பிணியின்றி நீண்டு வாழவேண்டும் !
வன்னியடியை விட்டு சென்னைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன்.
ஆன்மீகத்தில் என் நம்பிக்கையின்மையை கருத்தில் கொண்டு 'காலம் உங்களுக்கு கற்பிக்கும் ' என்று மணி குறிப்பிட்ட சொற்கள் என் நெஞ்சில் நிழலாக ஆடியது . காலம் கருத்துக்களை திருத்தவும் கூடும் என்று சொல்லத் தோன்றியது.

தன்னுடைய கவனக்குறைவாலும் தவறான வழிகளாலும் எதிர்படும் துயரங்கள் மனிதனின் கருத்துக்களை மாற்றுவது உண்மையே. குறுகிய நோக்கங்களுக்கு நன் நெறி போதனைகளை பயன்படுத்துவதை அறியும்போது உணர மறுப்பவர்களுக்கு எப்படித்தான் உணர்த்துவது.
--------------------------------------------
இடுகை 0025
            


Labels: