Friday, 8 July 2011

நிழலும் நிஜமும்!
இந்த முறை 34 நாலாவது சென்னை புத்தக சந்தையில் இடம் பிடித்திருந்த புதிய புத்தகங்களில் பெருமளவில்
முன் நின்றது மொழி பெயர்ப்பு புத்தகங்களே.இந்த மிகுதியான எண்ணிக்கை மகிழ்வுக்குறியதே என்றாலும் புதிய படைப்பூக்கத்தில் ஒருபின்னடைவு ஏற்பட்டிருக்கக்கூடுமோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது.
இது மாதிரியான மொழி பெயர்ப்பு நுல்களைப்பற்றி நெடு நாட்களாகவே எனக்கு சில சந்தேகங்கள் உண்டு. துவக்க காலங்களில் நான் வாசிக்க நேர்ந்த மொழிபெயர்ப்பு நூல்கள் மூல நூல்களில் இருந்து நேரடியாக தமிழுக்கு வந்தவையாகவே இருந்தது.அவை பெரும்பாலும் நம்மைச் சுற்றி சூழ்ந்திருந்த இந்தி வங்காளம் கன்னடம் மலையாளம் போன்ற இந்திய மொழிகளிலிருந்தே வந்தவை.உலகிலேயே முதன் முதலாக ஆங்கிலத்தில் இருந்தே மொழிமாற்றம் முயற்சி செய்யப்பட்டிருந்தாலும் பின்னாளில்தான் ஆங்கிலம் வழியாக வந்த நூல்கள் என் கண்களில் பட்டது. அவை பொரும்பாலும் கிருத்துவ மதம் சார்ந்த எழுத்துக்களாகவே இருந்திருக்கின்றன. அதன் ஆசிரியர்கள் பெரும்பாலும் தாய் மொழியிலும் மூல மொழியிலும் ஓரளவு தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பதற்கு போதுமான முயற்சிகள் மேற் கொண்டிருந்தார்கள் என்றே சொல்ல வேண்டும்.அதன் காரணமாகவே மூல நூலிலிருந்த உயிரோட்டம் சிறிதும் சிதைக்கப்படாமல் தமிழுக்கு கிடைத்து என்று சொல்லலாம்.அதே சமயம் நேர்மைத்திறத்தோடு முகப்பில் மூல ஆசிரியனுக்கு முக்கிய இடத்தையும் தங்களுக்குறிய இடத்தையும் ஏற்படுத்திக்கொண்டதை பார்த்திருக்கிறேன்.அன்றையதினம் என்னுடைய வாசிப்பை கருத்தில் கொண்டு பார்க்குபோது தேசப்பிதா காந்தியின் சத்திய சோதனையும் ராபின்சன் குருசோவின் பயண அனுபவங்களும் இன்னும் நினைவில் நிற்பவை. இன்னும் சொல்லப்போனால் இந்தி கன்னட வங்க மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த நூல்களும் என்
நெஞ்சைத் தொட்டவை.
வெகு நாட்களுக்கு முன்னால் கலைமகள் காரியாலயம் வெளியிட்ட மஞ்சரி மாத இதழ் இப்போது என் நினைவுக்கு வருகிறது.ஒவ்வொரு இதழிலும் பிற மொழிக்கதைகள் சிலவும் ஏதாவது ஒரு நாவலின் சுறுக்கப்பட்ட வடிவத்தையும் தொடர்ந்து பிரசுரித்து மொழிபெயர்ப்பு கலையின் ருசியை காட்டியதை எண்ணிப்பார்க்கிறேன்.சொந்த வீட்டு சாப்பாடு சலித்து போனவர்களுக்கும் பக்கத்து வீட்டை எட்டிப்பார்க்க நினைத்தவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அன்நாளைய மஞ்சரி இருந்தது.இதில் தொடர்ந்து வெளியிடப்பட்ட கதைச்சுறுக்கம் மட்டும் என் மனதை என்னவோ செய்தது. இது குறித்து நூலாசிரியர்களுக்கு கோபம் இருந்ததோ இல்லியோ எனக்கு மிகுதியான வெறுப்பு ஏற்பட்டது.
ஒரு நூலின் சிறப்பே அதன் மெல்லிய மையக்கருத்தை நூலாசிரியன் எப்படி தன் கைவண்ணத்தால் வாசகர்களை கிறங்கச் செய்கிறான் என்பதே.அதனை வடிகட்டி சுறுக்கித்தரும்போது ஆசிரியனின் சிறத்தை வீணடிக்கப்படுகிறது. படைப்பாளியின் உத்தியே பயனற்று போகிறது.என் கண்டனத்தை அப்போதே மஞ்சரியில் பதிவு செய்தது நினைவுக்கு வருகிறது.
அதற்கு பின்னால் வந்த காலங்களில் பல்வேறு நாடுகளுடன் கொண்ட நல்லுறவின் அடிப்படையில் ஏற்படுத்திக் கொண்ட தோழமையில் புகழ் பெற்ற அயல் மொழி நூல்கள் தமிழுக்கு கிடைத்தன.இதில் சோவியத் யூனியனின் பங்கு பற்றி மட்டுமே அப்போது அறிந்திருந்தேன்.அவைகள் அனைத்துமே பெரும்பாலும் இரு தேசமொழிகளில் பயிற்சி மிக்கவர்களாலேயே மொழி மாற்றம் செய்யப்பட்டன.ஆங்கிலம் மட்டுமின்றி ஒரு பிரஞ்சு மொழியிலிருந்தோ ஜப்பானிய மொழியிலிருந்தோ கூட இன்றைய தினம் நேரடியாக வேற்று நூல்களை கொணர கற்றறிந்தவர்கள் நம்மிடையே உண்டு. இருந்தபோதிலும் மற்ற தேச சொத்துக்களை ஆங்கிலம் வழியாக மட்டுமே இன்றைய நிலையில் பெற முடியும் என்ற கூற்றில் எந்த அய்யமும் இல்லை.
இன்று ஒவ்வொரு நூல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட நிலைகளில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. ஒரு மொழியில் உயர்வாக கருதப்பட்ட ஒரு நூல் பல நிலைகளைக்கடந்து இறுதி கட்டத்தை நெருங்கும்போது இயல்பான சுவையை இழந்து வெற்றுச் சக்கையாகவே வந்து சேருகிறது. ஒரு மொழிமாற்றம் செய்யப்பட்டத் திரைப்படத்தின்
நிலையை அது அடைகிறது. தூய்மையான போக்கில் உருவெடுக்கும் கூவம் சென்னை நகரை தாண்டும் போது சாக்கடையாய் முடிவதைப்போல நிலைதான் ஏற்படுகிறது. அதன் விளைவு ஆசியாவிலேயே மிகப்பெரிதாக கருதப்படும் நூலகத்திலும் வெவ்வேறு இடங்களில் காணப்படும் குட்டி நூலகங்களிலும் குப்பைகள் சேரத்துவங்குகின்றன.இவற்றுக்கு வெவ்வேறு மண் வெவ்வேறு கலாச்சாரம் என்ற காரணமாககூட இருக்கக்கூடும்.
உயர்வாகவும் சிறத்தையோடும் செய்யப்பட்ட விருந்து சரிவர பரிமாரப்படாமல் போகும் போது ஏற்படுகிற நிலைதான் இறுதியில் இந்த நூல்களுக்கு கிடைக்கிறது. உலகிலேயே பைபிளுக்கு அடுத்தபடியாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட நூல் திருக்குறள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த வள்ளுவரின் குறளுக்கு நாளுக்கு நாள் விதம் விதமான பொருள் இங்கே பேசுவதை கேட்கலாம்..இதை அன்னிய மொழிக்கு மாற்றம் செய்யும் போது எத்தனை சிறத்தை மேற்கொள்ள வேண்டும்.இது போன்ற மொழி மாற்றங்களில் நா பாவின் நூல்களும் லசரா வின் நூல்களும் எது போன்ற விளைவுகளை சந்தித்திருக்கக்கூடும்.மேலும் இது போன்ற நூல்களில் தங்கள் பெயர்களை முன்னிறுத்தி மூல ஆசிரியனின் பெயரை இருட்டடிப்பு செய்வதைக்கூட கண்டிருக்கிறேன்.பல்வேறு நூல்களிலிருந்து பல்வேறு பகுதிகளை பிய்த்தெடுத்து சம்பந்த மற்ற மூல நூல்களின் பெயரை அடிக்கோடிட்டு புது நூல் படைத்தவர்களை கண்டிருக்கிறேன்.
இதையெல்லாம் பார்க்கும் போது இந்த நூலாசிரியர் எழுதி இந்த மொழியில் இருந்து இந்தந்த மொழிகள் வழியாக தமிழுக்கு வந்தது என்று அச்சிடுவதில் என்ன தவறு.
நிஜத்தின் நிழல் எப்போதுமே வெவ்வேறு அளவுகளைக் கொண்டதாகவே இருக்கிறது.அதைப் போலவே மொழிபெயர்ப்பு நூல்கள் மூலத்திலிருந்து மாறுபட்ட அளவுகளிலேயே அமைகிறது.