Monday, 9 May 2011

சுஜாதா விருதுகள் 2010


.பாண்டியன்ஜி
உயர்மை இதழும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து கடந்த மே மாதம் மூன்றாம் தேதி தமிழின் நவீன விருட்சங்கள் சிலரின் பல்வேறு முகங்களை போற்றிக் கொண்டாடியிருக்கிறது. கவிதை சிறுகதை கட்டுரை நாவல் இணையதளம் என்று ஒவ்வொரு திசையிலும் தடம் பதித்தவர்களை தேடி பொறுக்கியெடுத்து விருதும் பணமுடிப்பும் வழங்கி அவர்கள் பணி மென்மேலும் சிறக்க ஊக்கிவித்திருக்கிறது.
இதுபோன்ற விருதுகளும் புகழும் சேர்க்கும் விழாக்கள் முன்னெப்போதுமில்லாத அளவில் இன்நாட்களில் நிகழுவது ஒரு நல்ல அறிகுறிதான். முன்பெல்லாம் அரசு சார்ந்த இலாக்காகளும் ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மட்டுமே வழக்கமாக்கி கொண்டிருந்த இந்த பணி இனறு நாடெங்கும் பரவலாக்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு துறையிலும் சாதனை நிகழ்த்திய ஒரு சிலர் இது போன்ற விழாக்களை ஆண்டுதோரும் நிகழ்த்துவதன் மூலம் தங்களுக்கும் தங்கள் சாதனைகளுக்கும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான தொலைக்காட்சிகளும் பிரபலம் மிகுந்த பத்திரிக்கைகளும் கூட இது போன்ற விருதுகளை ஏற்படுத்தி தங்கள் வணிகத்தையும் மதிப்பையும் உயர்த்திக் கொண்டிருக்கின்றன.
அரசியல் அரங்கில் மனக்கசப்பு மிக்க சிலரை மறக்கச் செய்வதற்கும் எதிரணியில் சலனத்திலிருப்போரை நெருக்கமாக தம் பக்கம் இழுப்பதற்கும் இது போன்ற விருதுகள் பெரிதும் பயன்பட்டு வந்திருக்கின்றன. இத்தனைக்கும் தலையாய காரணம் பணமும் புகழும் மனிதர் வாழ்வில் முன்னிடம் வகுத்தலே.
இந்த விருதுகள்வழங்கப்படுதல் மூலம் எழுத்தாளர் சுஜாதாவையும் விழாவுக்கு துணையாய் நின்ற உயிர்மை பதிப்பகத்தையும் நினைவில் நிருத்தக்கூடும் . விருது பெற்றவர்கள் தங்கள் பார்வையை மேலும் விசாலப்படுத்திக்கொள்ள இந்த விருதுகள் பயனளிக்கும். படைப்பிலக்கியத்துக்குள் புதிதாக காலடி வைப்பவர்கள் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெறக்கூடும்.                                                             இந்த விழாவினை தொடர்வதன் மூலம் தன் கணவருக்கு நெடி ஆயுளை நீடித்திருக்கிறார் திருமதி சுஜாதா ரெங்கராஜன்.
2010 க்கான விருதுகளைப் பெற்றவர்களுக்கு வேர்கள் தன் நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
---------------------------
சிறுகதைத் தொகுப்புக்கான விருது திரு.வண்ணதாசன்
நாவலுக்கான விருது திரு.ஜோ.டி. குருஸ்
கட்டுரைக்கான விருது திரு.அழகிய பெரியவன்
இணைய தளத்துக்கான விருது திரு.யுவ கிருஷ்ணா
கவிதைத் தொகுப்புக்கான விருது திரு.ஸ்ரீநேசன்.
---------------------------
சுஜாதாவின் நினைவுகளை நிஜமாக்க துணையாய் நின்ற உயிர்மை மனுஷ்யபுத்திரனுக்கும் வேர்கள் தன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. 
இந்த சிறப்பு மிக்க விழாவில் எழுத்தாளர்கள் இந்திராபார்த்தசாரதி எஸ் ராமகிருஷ்ணன் , ஞானக்கூத்தன் , பாரதி கிருஷ்ணகுமார் சாருநிவேதா ,வண்ண தாசன் ,மானுஷ்யபுத்திரன் , கலைஞர் மதன் போன்ற பழம் பெரும் சிற்பிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
சமீபத்திய நாட்களில் நான் கலந்து கொண்ட புதிய புத்தக வெளியீடு மற்றும் விருதுகள் வழங்கும் விழாக்களில் சந்திக்க நேர்ந்த குறைபாடுகள் இந்த விழாவிலும் காணமுடிந்தது. விழாகளில் சிறப்பித்து உரையாற்ற அழைக்கப்படுகிறவர்கள் பெரும்பாலும் முன் முயற்சி எதனையும்
செய்யாமல் மேடைக்கு வந்து விழாவுக்கான மைய காரணங்களை மறந்து பேசுவதே வழக்கமாகிவிட்டிருக்கிறது. இதன் மூலம் வாசகர்களையும் விருது பெருகிறவர்களையும் வெட்கத்தில் கூசச்செய்து விடுகிறார்கள்.
நிகழ்கால ஊடகங்களின் பேரிரச்சலில் இன்றைய நவீன படைப்பாளிகளின் முகங்களும் அவர்தம் படைப்புகளும் நம்மில் பலருக்கு அறிமுகம் அற்றவையாகவே இருக்கின்றன. இது போன்ற விருதுகளும் புகழுரைகளும் செய்யப்படும்போது அவர்களைபற்றிய அடிப்படையான தகவல்களை
தருவது முன்னிலை வகிப்போர் கடமை.விருதுக்கும் புகழுக்கும் உரியவர்கள் எந்தவகையில் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள் என்றும் அவர்களது ஆக்கங்கள் மற்றவைகளிலிருந்து எத்தனை மாறுபட்டு நிற்கிறது என்றும் சொல்லும்போது மட்டுமே விழா முழுமையடைகிறது.
அதுவன்றி நோபல் பரிசு விழாக்களிலோ சாகித்ய அகாதமியின் விருதளிப்பு விழாக்களில்கூட வெருமனே பெயர்கள் மட்டும்தான் படிக்கப்படுகின்றன என்று வாதிடுவது அத்தனை சரியானதன்று. இது போன்ற விழாக்களில் முன்னிலை வகிப்போர் முக்கியமாக விழாசார்ந்த ஞானம் உள்ளவராயும் இருத்தல் வேண்டும். அதுவன்றி வேறு காரணங்களுக்காக வாசனையற்றவர்களை மேடையில் ஏற்றும்போது விழாக்களில் தலைகுனிவு தவிற்க இயலாதது.
இந்த நேரத்தில் என் நினைவுக்கு வருகிறது.
எந்த ஒரு படைப்பாளியின் படைப்புக்களை அறிமுகம் செய்ய நேர்ந்தாலும் அல்லது எந்தவொரு அரங்கில் பேச நேர்ந்தாலும் இந்த தள்ளாத வயதிலும் முன் முயற்சி எதுவுமின்றி கலைஞர் மேடையேறி பேசியதில்லை.ஒவ்வொரு வரிகளையும் வாசிக்காமல் அவர் புகழுரை எதுவும் தந்ததில்லை.விழாவில் உரைநிகழ்த்துவோர் குறைந்தபட்ச குறிப்புகளோடு வரும் போது மட்டுமே விழா நிறைவுரும். 
அடுத்து
சரியாக எழுபத்திரெண்டு ஆண்டுகள்இந்த மண்ணில் வாழ்ந்த எழுத்தாளர் சுஜாதா ஏறத்தாழ நூற்றுக்கு மேற்பட்ட நாவல்களையும் இறுநூற்றய்ம்பதுக்கு மேலான சிறு கதைகளையும் தமிழில் படைத்தவர்.கவிதைத்தொகுப்புகளையும் நாடக வடிவங்களையும் கூட எழுதி தமிழுக்கு அணி சேர்த்தவர். பொறியியலில் பட்டம் பெற்று அரசு அலுவலில் பல்வேறு நகரங்களில் வாழநேர்ந்த சுஜாதா அவ்வப்போது எழுதிய அறிவியல் சார்ந்த கட்டுரைகள் படித்த
இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவருக்கிருந்த ஆங்கில இலக்கிய பரிச்சையமும் பல்வேறு மாநிலங்களில் வாழ்ந்த அநுபவமும் தமிழில் புதுமை படைக்க வழிகோலிற்று.
முன்னதாக நாற்பது அய்ம்பதுகளிலேயே சுஜாதா எழுதத் துவங்கியிருந்தாலும் வாசகர் எவரும் அவரை பெரிதாக அறிந்திருக்கவில்லை.1962 என்று நினைக்கிறேன். குமுதம் இதழில் கொலையுதிர் காலம் என்ற தொடர் எழுதப்பட்டபோதுதான் தமிழின் பெரும்பாலான வாசகர்கள் வியந்து பார்க்கத் துவங்கினர்.அப்போதுதான் தினமணி கதிரில் பொறுப்பேற்ற அனுபவம் நிறைந்த பத்திரிக்கையாளர் சாவி தமிழ் எழுத்துலகில் ஒரு நிரந்தர இடத்தை சுஜாதாவுக்கு பெற்றுக் கொடுத்தார்.
எழுத்துலகில் சுஜாதா ஒரு பன்முக பார்வை கொண்ட படைப்பாளி. தமிழ் மொழிக்கு நடையில் ஒரு நவீன தடத்தை போதித்தவர். அவர் நுழைந்து வெளியேறாத துறைகள் எதுவுமில்லை என்று சொல்லிவிடலாம்.அவருடைய ஒருசில நாவல்கள் திரைவடிவம் பெற்று பெரும்பாலான மக்களிடையே போய்
சேர்ந்தது.
இருந்தபோதிலும் எழுத்தாளர் சுஜாதாவுக்கு இலக்கியத்தில் ஒரு அந்தஸ்த்து கொடுக்கப்படவில்லை என்ற குறை ஆங்காங்கே நிலவுவதை காணமுடிகிறது. இந்த மனக்குறையை எழுப்புவோர் பெரும்பாலும் சுஜாதாவை மட்டுமே படித்தவர்கள் என்று நினைக்கிறேன். அதிலும் அவருடைய முழுமையான எழுத்துக்கள் அனைத்தையும் படித்திருக்க முடியாது என்று நம்பலாம்.
தமிழில் இவரைப்போன்று எழுதிக்குவித்த எத்தனையோ பேர் இவர்கள் குறிப்பிடுகிற இலக்கிய அந்தஸ்த்தை இன்னும் அறியாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று சொல்வதைப்போல இலக்கியத்தை கையாண்டிருக்கிறார்கள்.அரசியல் , சமூகநீதி , திரைத்துறை என்று வேறு பல திசைகளிலும் தங்கள் சிந்தனையைச் செலுத்தியிருக்கிறார்கள். இதுவெல்லாம் கூட இவர்கள் இலக்கிய அந்தஸ்த்தை அறியாமல் போனதற்கு காரணமாக இருக்கக்கூடும். மகாகவி சுப்ரமணிய பாரதியை ஒரு கவிதான்,! அவரொன்றும் மகாகவியல்ல என்று சாதித்த எழுத்தாளர் கல்கி பின்னாளில் அவர் ஒரு மகா கவிதான் என்று ஏற்றுக்கொள்ள வில்லையா. பக்தி இலக்கியத்தில் என்று நினைக்கிறேன்.புலவன் ஒருவன் எழுதிக்குவித்த இலக்கிய சுவடிகளை அன்னாளைய அரசன் ஒருவன் நீீரோடும் ஆற்றில் வீசியெறிந்தபோது அத்தனைச் சுவடிகளும் நீரோட்டத்துக்கு எதிராக சீறிப் பாய்ந்ததாக பேசக்கேட்டிருக்கிறேன். இன்று அது போல் சீறிப்பாய்வதற்கெல்லாம் வாய்ப்பில்லை .
இலக்கியமென்றாலே காலங்களைக் கடந்து நிமிர்ந்து நிற்கும் எழுத்துக்கள்தாம் . நாற்பது அய்ம்பதுகளில் எழுதப்பெற்ற எத்தனையோ எழுத்துக்கள் நேற்றைய முப்பத்திநாலாவது புத்தக சந்தையிலும் புதிய ஆடைகளில் பவனிவந்ததை கண்டிருக்கலாம்.அத்தகய வலு சுஜாதாவின் எழுத்துக்களுக்கு இருக்குமானால்அந்த அந்தஸ்த்தை அவரது எழுத்துக்களே தேடிக் கொள்ளும்.
அதை விடுத்து கோரிக்கைகள் வைத்தோ போராட்டம் நிகழ்த்தியோ சாதிக்கமுடியும் என்று தோன்றவில்லை! 

இடுகை 0055

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home